மனம் பேசுதே

மனம் பேசுதே..

நூலகத்திலிருந்து “மாற்றுச்சாவி” என்னும் கட்டுரை தொடர் நூலை வாசித்தேன். எழுதியவர் “நாகூர் ரூமி” கிழக்கு பதிப்பகம். பதிப்பித்த வருடம் 2016, புத்தகங்கள் ஆன்லைனில் வாங்க
எழுத்தாளர் பற்றி இப் புத்தகத்தில் அதிகமாக காணப்படவில்லை என்றாலும், அவர் தியானம் பயிற்றுவித்தலிலும், மன அமைதிக்கான வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்த புத்தகம் கூட தியானத்தை முன்னிறுத்தியே எழுதப்பட்டிருக்கிறது. அது போக “ஆல்பா தியானம்”, “அடுத்த விநாடி” என்னும் நூல்களை எழுதியிருக்கிறார். அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகங்களை பெற டெலிபோன் எண்களும் இந்த புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. 9445901234, 9445979797

அதிலிருந்து மனம் பேசுதே என்னும் தலைப்பில் ஒரு சிலவற்றை எடுத்து இக் கட்டுரையில் சேர்த்துள்ளேன்.

வாழும் வாழ்க்கையில் நமக்கு தேவைப்படுவது என்ன?
எல்லோருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும், பணம் பதவி, பட்டம், இன்னும் எத்தனையோ தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இவையனைத்தையும் விட ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்ப்பது வாழ்க்கையில் “மகிழ்ச்சி அல்லது வெற்றி”.
இந்த ஒன்றிற்காகத்தான் மனிதன் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறான். ஆனால் இவன் எதிர்பார்ப்பது கிடைத்து விட்டது என்றால், அடுத்த இலக்கை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விடுகிறான். அவனது ‘மனம்’ இருப்பதை கொண்டு திருப்தி அடைந்து விடுவதில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் வார்த்தை “ஓடு” வெற்றியை நோக்கி அடுத்தடுத்து ஓடு”
இன்னொரு வகை முறையில் வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் இருக்கிறார்கள். பிறரிடம் இரந்து (பிச்சை)பெற்று வாழ்வது. அல்லது சோம்பேறித்தனமாய் இருந்தபடியே கிடைத்ததை வைத்து வாழ்வது. இவர்களின் ‘மனநிலை’ என்பது எந்த நிலையிலும் மாற்றத்தை எதிர்பார்க்காது, அவர்களை நீங்கள் மாற்ற முயற்சித்தாலும் ஒரு சிலரை மட்டும் மாற்ற இயலுமே தவிர மற்றபடி இவர்களின் மனம் இந்த நிலையை விட்டு மாறுவதற்கு முற்படாது.
மனம் எப்பொழுதும் ஏதோ ஒரு பிரச்சினைகளை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும். உங்களுடைய செயல்கள் வேறாக இருந்தாலும், உங்கள் மனம் மட்டும் அதனுடன் ஒட்டாமல் வேறொன்றை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும். உதாரணமாக உங்கள் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களது மனம் அதில் முழுவதுமாக ஈடுபாடு கொண்டிருக்காது. “இதனால் பெரியவர்கள் சாப்பிடும்போது அதையும் இதையும் சிந்திக்காதே’ சாப்பாடு ஒட்டாது என்பார்கள். உண்மைதானே. பொதுவாகவே மனம் நம் எல்லைகளை தாண்டி தறி கெட்டு ஓடியபடியே தான் இருக்கிறது.
புத்தரிடம் ஒருவர் கேட்டாராம் நீங்கள் உங்கள் ஞானத்தின் மூலம் என்ன செய்கிறீர்கள்?
அவர் சொன்னார் நாங்கள் சாப்பிடும்போது சாப்பிடுகிறோம், துங்கும் போது தூங்குகிறோம், மூச்சு விடும்போது மூச்சு விடுகிறோம்.
கேள்வி கேட்டவர் சிரித்தவாறே இதை நாங்களும்தான் செய்கிறோம், இதற்கு எதற்கு ஞானம், தியானம், யோகம் எல்லாம்.
புத்தர் சிரித்தவாறு உண்மைதான் நீங்களும் இதை எல்லாம் செய்கிறீர்கள், ஆனால் அவைகளை செய்யும்போது உங்கள் மனம் இதை பற்றி மட்டுமே சிந்தித்தபடி இருக்கிறதா?
கேட்டவருக்கு புரியவில்லை, சிந்திப்பது என்றால்? அதாவது நீங்கள் சாப்பிடும்போது அது மட்டும்தான் உங்கள் நினைவு முழுக்க இருக்கிறதா?
இல்லையே என்பது போல தலையசைத்தவர் நான் சாப்பிடும் போதே அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை நினைத்தபடியே சாப்பிடுவேன்.
இதை சரி செய்வதுதான் ஞானம். உங்களுடைய எண்ணம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களில் மட்டும் ஈடுபாட்டுடன் இருந்தால் அதுவே சிறந்த ஞானம். நீங்கள் சாப்பிடும் போதோ, உறங்கும் போதோ அதனுள் மட்டும் ஈடுபாடு காட்டும் மனம் தான் நீங்கள் பெறும் ஞானம் என்றார்.
மனம் என்பதே ஒரு மனிதனுக்கு பிரச்சினையாக இருக்கிறது. இது ஒரு “மாய குப்பை தொட்டி” அதாவது ஒரு சிந்தனையை அதற்குள் போட்டீர்கள் என்றால் அவைகள் துண்டு துண்டாகி சிதறி பல துண்டுகளாகி நிறைந்து வழிந்து உங்களின் செயல்பாட்டை முடக்கி விடும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் “ மனம் ஒரு சிதறிய கடுகு பொட்டலம் “என்கிறார். உண்மைதானே.
சிந்தனைகள் என்பது எப்பொழுதும் நம்மை நேர்மறையாக சிந்திப்பதில்லை. இதனால் உணர்ச்சிகளுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் ஆட்பட்டு நம்மை சித்திரவதை செய்து கொள்கிறோம். இதனால் “அச்சம்” என்னும் உணர்வு நம்மை எப்பொழுதும் ஆட்பட்டு “இது நடந்துவிடுமோ” இப்படி ஆகி விடுமோ’ என்னும் கவலையில் ஆழ்ந்து போகிறோம்.
சிந்தனை சிந்திப்பதை விட உணர்ச்சி வசப்படுவதைத்தான் அதிகம் கொண்டு சேர்க்கிறது
இதன் மூலம் கிடைப்பது என்னவோ அச்சம், கோபம், கவலை, குழப்பம், காமம், எரிச்சல் எல்லாமுமாய்.
பெர்னாட்ஷா சொல்கிறார் இரண்டு சதவிகித மக்கள் சிந்திக்கிறார்கள், மூன்று சதவிகித மக்கள் சிந்திப்பதாக நினைக்கிறார்கள். மீதி தொன்னூற்றைந்து சதவிகித மனிதர்கள் சிந்திப்பதை விட செத்துபோவது மேல் என்று இருக்கிறார்கள்.
மரபணு உயிரியியல் விஞ்ஞானி சொல்கிறார் “நம் எண்ணங்கள்தான் நம் உயிரணுக்களை “ப்ரோக்ராம்” செய்வதாக. அதற்கான உதாரணங்களையும் கொடுத்திருக்கிறார்.
அமெரிக்கர் ஒருவருக்கு விமான விபத்து ஒன்று ஏற்பட்டு பலத்த அடிபட்டு விட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் சொன்னது, அவரால் இனிமேல் பேச, சாப்பிட, சாதாரணமாக மூச்சு விட முடியாது, செயற்கை சுவாசத்துடன் தான் இருக்க முடியும். ஏன் உடலை கூட அசைக்க முடியாது, என்று சொல்லி விட்டார்கள்.
ஆனால் அவரோ அடுத்த “கிறிஸ்துமசுக்குள்” டாக்டர்கள் எது எதுவெல்லாம் முடியாது என்று சொன்னார்களோ அவை எல்லாம் தன் உடம்பு செய்யவேண்டும் என்று மனதுக்குள் உறுதி ஏற்படுத்தி கொண்டார். அதை பற்றிய சிந்தனையே அவரை சுற்றி இருந்தது. அதற்காக தன்னுடைய முயற்சியை இடைவிடாமல் செய்து கடைசியில் அவர் நினைத்தது போல பூரண நலமாகி அதன் பின் நிறைய எழுதி பெரும் புகழும் அடைந்தார்.
அடுத்து மனம் செல்லும் பாதை அதாவது உங்களுடைய மனம் செய்யும் சிந்தனை மற்றவர்களை விட வித்தியாசமிருப்பின் அது பெரு வெற்றி பெறுகிறது.
உதாரணமாக ஒரு பிரச்சினையை எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதில்தான் உங்களுடைய வெற்றி இருக்கிறது இதை ஆங்கிலத்தில் “லேட்ரல் திங்கிங்” அவுட் அப்த பாக்ஸ் திங்கிங்” எனவும் கூறலாம்.
ஈசாப் கதைகளில் வரும் “ஜாடியில் பாதி அளவு இருக்கும் நீரை பருகுவதற்கு காக்கைக்கு தோன்றிய உபாயம்தான் அது “கூழாங்கற்களை நிரப்புவது”
‘ஏர் டெல்’ கம்பெனியின் முதலாளி ‘மிட்டல்’ ஆரம்பத்தில் டெலிபோன்களை வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் கொண்டு வந்து விற்க ஆரம்பித்தார். அரசு அதை தடை செய்த பின் முழுவதுமாகத்தானே டெலிபோன்களை கொண்டு வர கூடாது” பாகங்களாக கொண்டு வரலாமே என்று அதை வெளி நாட்டில் கொண்டு வந்து இங்கு உருவாக்க ஆரம்பித்தார்.
அடுத்து ‘கோபம்’ மனம் எதிர்மறை சிந்தனையில் தோன்றும் ஒரு சிக்கல். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். திருவள்ளுவரே

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம் என்கிறார்

இந்த கோபத்தால் உங்கள் உடல் அடையும் சிக்கல்களை பாருங்கள்
1. உங்கள் இதய துடிப்பு அதிகரிக்கிறது
2. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது
3. அட்ரீனல் போன்ற ஹார்மோன்கள் அதிக அளவு சுரக்கின்றன
4. .முகத்தசைகள் பாதிக்கும்
இதற்கு உதாரணமாக அலெக்சாண்டரின் கதையை கூறுவார்கள். கோபக்காரனான அலெக்ஸ்சாண்டர் ஒரு முறை துறவி ஒருவரை தன் நாட்டுக்கு அழைத்து செல்ல முயன்றபோது அவர் வரமுடியாது என்று சொல்லி விட்டார். மிகுந்த கோபத்துடன் அவரை வாளால் வெட்ட முயன்ற போது அந்த துறவி சிரித்தவாறு “நீ என் அடிமையிலும் அடிமை” என்றார். அலெக்சாண்டருக்கு ஆச்சர்யம் நான் உனக்கு அடிமையிலும் அடிமையா? என்று கேட்டார்.
ஆம் நீர் கோபத்தின் அடிமை, அந்த கோபத்தை ஒழித்து விட்டவன் என்ற முறையில் அந்த கோபம் என் அடிமை என்றார்.
அலெக்சாண்டருக்கு புரிந்தது” கோபம் தான் நம்முடைய பலகீனம் என்பதை உணர்ந்தார்.

கோபத்தில் செய்யும் செயல்கள் தலைகுனிவை தரும்- பெஞ்சமைன் பிராங்க்லின்

முட்டாள்களின் இதயத்தில் கோபம் இருக்கும்-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கோபம் என்பது தற்காலிக பைத்தியம்-ஜி.எம்.ட்ரவெல்யன்

கோபம், வருத்தம் அச்சம் எல்லாம் உங்களுடையவையல்ல, அவை உங்களின் மனதின் நிலைகள் - எக்ஹார்ட்டாலி.

இந்த கட்டுரை சொல்ல வந்தது என்னவென்றால் நம்முடைய உணர்வுகளின் தோற்றத்திற்கு காரணம் நமது மனம் தான். நாம் நம்முடைய உடலையோ நிறத்தையோ உறுப்புக்களையோ மாற்றமுடியாது ஆனால் ஒன்றை மாற்றினால் எல்லாமே மாறும், அதுதான் மனம்.
அக மாற்றம் மட்டுமே எல்லா புற மாற்றங்களையும் கொண்டு வரும். அதற்கு ஒரு வழி உண்டு. எடுத்து சொல்லி புரிய வைத்தாலும் மனதை மாற்ற முடியாது. ஏனெனில் புரிவதெல்லாம் அறிவுக்குத்தான். அது மூளை சம்பந்தப்பட்டது. மூளையால் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளமட்டும்தான் முடியும். அதையொற்றி மனதை செயலாற்ற வைக்க முடியாது.
இதற்கு பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன “தியானம்” யோகா போன்றவைகளும் உள்ளன,
நம் மனதை தெளிவாக வைத்து கொள்ள முயற்சிக்கவேண்டும். அதற்கான பயிற்சிகள் மேற்சொன்னவைகள் மூலமாகம், தானாகவும் கூட நம்மால் ஏற்படுத்தி கொள்ளமுடியும்.
ரமணர் சொன்ன குட்டி கதை
யானை மேல் ராஜா வருகிறார்.
குரு (அடையாளம் தெரியாதவாறு மாறு வேடத்தில்) சீடனிடம் இங்கே என்ன நடக்கிறது?
என்ன நடக்கிறதா? பார்த்தால் தெரியவில்லையா ராஜா யானை மீது செல்கிறார்
அப்படியா சரி “ராஜா யார்” யானை எது?
சீடனுக்கு ஆச்சர்யம் இப்படி ஒரு முட்டாளா..!
மேலே உட்கார்ந்திருப்பது ராஜா, கீழே அவரை சுமந்து கொண்டிருப்பது யானை.
அப்படியா..! அப்படியானால் மேலே எது? கீழே எது?
கோபம் வந்த சீடன் சட்டென குருவின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு இப்ப பார் நான் மேலே, நீ கீழே.
நல்லது, நான் என்பது யார்? நீ என்பது யார்?
சீடனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது, வந்தது, கேட்டது தன் குரு என்று.

இவைகள் ஆன்மீக சம்பந்தபட்டவைகளாக இருந்தால், ஆன்மீகம் சம்பந்தபடாமல், நிறைய பேர் தங்களது செயல்கள் மூலம் மனதை வென்றவர்களாக (கோபம் அச்சம் இன்னும் பலவகைகளை) வென்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.
உதாரணமாக ஒன்று “இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற பெண்மணி வின்ஸ்டண்ட் சர்ச்சிலிடம் நீர் மட்டும் என் கணவனாக இருந்திருப்பின் ஒரு கோப்பையில் விஷம் கொடுத்திருப்பேன் என்கிறார்.
‘சர்ச்சில்’ சிரித்து கொண்டே உண்மைதான் நீங்கள் மட்டும் மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால் உடனே அதை குடித்திருப்பேன் என்று பதில் சொல்லியிருப்பார்.
லிங்கன் ‘போர் கைதிகளிடம் மிகவும் அன்பாக நடப்பதை பார்த்த அவரது காரியதரசி அவ்வாறு நடந்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தும் போது அவர் சொன்னார் நான் அன்பாக நடப்பதால் இப்பொழுது அவர்களின் நண்பனாகி விட்டேனல்லவா? என்றாராம்.
மனிதர்களுக்குள் இருக்கும் உண்மையான பிரச்சினை என்பது அவர்களின் மனம் தான். மனதில் ஏற்பட்ட வேண்டாத உணர்வுகளை அடிப்படையாக வைத்து கொண்ட மாய குப்பை தொட்டியே நம் மனம் தான்.
நம் அனைவருக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது தெரியும். ஆனால் எங்கே இருக்கிறது? உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மனம் குடியிருக்கவில்லை.அது உடலெங்கும் வியாபித்திரிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். மூளையில் மட்டும்தான் மனம் உள்ளது என்று சொல்வது தவறென்றே தோன்றுகிறது.
நம் உடலில் ஒரு உத்தரவை பிறப்பிக்கவோ, தனக்குள் உள்ள கோடிக்கணக்கான நியுரான்களோடு பேசிக்கொள்ளவோ மூளை ஒரு மொழியை தேர்ந்தெடுக்கிறது அதன் பெயர் “நியூரோ பெப்டைடு” அந்த வேதிப்பொருள் மூலமாகத்தான் மூளை தகவல் பரிமாற்றம் செய்கிறது. இந்த “பெப்டைடு” மூளையில் மட்டும்தான் உருவாகிறதா என்றால் இல்லை அது உடல் முழுவதும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.இதன் மூலம் வெட்டப்பட்ட நகம் வளரவேண்டும் என்கிற அறிவிப்பு முதல், காயம் ஆறவைக்க வேண்டும் என்னும் செயல்பாடுகள் கூட நடந்து கொண்டே இருக்கின்றன.
தந்தையின் மூலமாக தாயின் உடலுக்குள் செல்லும் ஒரு செல் உயிரி இதற்கு நாம் பெயர் வைக்க முடியாது. அறிவியல் பெயர் “ஸைகோட்” இது இரண்டாகி, நான்காகி, வளர்ந்து கண், காது, மூக்கு, இவைகள் போன்று உருவாகிறது.மூளையும் அப்போது உருவாகி செயல்பட தொடங்குகிறது.
மூளையிருப்பதினால்தான் அறிவிருக்கிறது என்பது உண்மையா? ஒரு செல் உயிரி இரண்டாக, நான்காக, உறுப்புக்களாக உருவாவதற்கு யார் அறிவை கொடுத்தது?
மன அமைதியாக இருப்பவர்களின் முகங்களை பார்த்தோ அவர்களின் செயல்பாடுகளை பார்த்தோ புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான பக்குவத்தை நாம் அடந்திருப்பத்ற்கு வாய்ப்பில்லாததால் அவர்களை “ரொம்ப ஸ்லோ” அல்லது அசமஞ்சம் என்று பட்டம் சூட்டி விடுகிறோம்.
இயற்கை நமக்கு எல்லாமே இலவசமாக கொடுத்திருக்கிறது ஆகாயம், பூமி, காற்று, நீர், மழை, இன்னும் எத்தனையோ. ஆனால் நம்மை நாமே பார்த்துக்கொண்டு இயற்கை கொடுத்த உலகில் வாழ்ந்து மறைந்து போவதற்கு நம்முடைய மனதை இயல்பாக வைத்து கொள்வதற்கு போராடி கொண்டிருக்கிறோம். இது மனித வாழ்க்கையின் பெரிய பலகீனம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Aug-23, 2:30 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 149

மேலே