தன்னாசை அம்பாயுள் புக்கு விடும் - பழமொழி நானூறு 363
நேரிசை வெண்பா
கொண்டொழுகு மூன்றற் குதவாப் பசித்தோற்றம்
பண்டொழுகி வந்த வளமைத்தங் - குண்டது
கும்பியிலுந் திச்சென் றெறிதலால் தன்னாசை
அம்பாயுள் புக்கு விடும். 363
- பழமொழி நானூறு
பொருளுரை:
தான் கொண்டுஒழுகுகின்ற மூன்றற்கும் உதவி செய்த லில்லாத வேட்கைத் தோற்றம் முன்னர் நல்வினை செய்தமையான் வந்த செல்வத்தை அங்குத் தானே பயன்படுத்திக் கொண்டு அவ்வாசை நரகச் சேற்றில் உதைத்துச் சென்று வீழ்த்தலால் ஒருவனுடைய ஆசையாகிய அம்பு ஆயுளைப் புகுந்து கெடுத்து விடும்.
கருத்து:
பிறர்க்குதவி செய்தலில்லாத ஆசையே ஒருவனை நரகத்துள் அழுத்தவல்லது.
விளக்கம்:
கொண்டு ஒழுகும் மூன்று - விருந்தினரைப் புறந்தருதல், தெய்வத்திற்குச் சிறப்புச் செய்தல், இரவலர்க்கு ஈதல் முதலிய கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டியவற்றை.
பசித்தல் விரும்புதலாதலின் வேட்கையாயிற்று.
ஆசை கடமையையும் தவிர்த்து, செல்வத்தின் பயனாக விளையும் பிறர்க்கு ஈதலையும் நீக்கி, நரகத்துள் அழுத்தும். ஆதலின், ஒருவனது ஆயுளை அம்பாக நின்று அழித்தொழித்து விடும்.
இரண்டும் துன்பஞ்செய்தலில் ஒக்குமாயினும். ஆசை மறுமையினும் துன்பம் விளையுமாறு செய்தலின், 'ஆசை அம்பு' என உருவக வாய்பாட்டாற் கூறப்பட்டது.
'தன்னாசை அம்பாயுள் புக்குவிடும்' என்பது பழமொழி.