அதுவே குழிப்பூழி ஆற்றா குழிக்கு - பழமொழி நானூறு 362

நேரிசை வெண்பா

எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
குழிப்பூழி ஆற்றா குழிக்கு. 362

- பழமொழி நானூறு

பொருளுரை:

பலவிதமான எல்லா வகைப் பிறப்புகளிலும் ஈட்டித் தாம் மேற்கொண்ட தீவினையின் விளைவு தம்மேல் சேர்வதற்கு அஞ்சி எவ்வளவு சிறிய தீவினையையும் செய்வதற்கேற்ற துன்பத்தை அடைகின்றோம். அச்செயல் குழியினின்றும் தோண்டப்பட்ட பூழி அக்குழியை நிரப்ப முடியாதவாறு போலும்.

கருத்து:

வினை தம்மால் ஈட்டப்பட்டதே யாதலால், அதன் விளைவை இயைந்து அநுபவிக்கவேண்டும்.

விளக்கம்:

தோண்டப்பட்ட புழுதியையே கொட்டி மூடினும் அக்குழி மூடுதல் இல்லை. அதுபோல, தன்னால் ஈட்டப்பட்ட வினையின் விளைவை இயைந்து அடைதல் இல்லை. அஃது அறிவிலார் செய்கையாம்.

வினை என்றது சஞ்சித வினையை. பயன் என்றது சஞ்சித வினையின் பயனாய்ப் பிராரத்துவ வினையைக் கழிப்பதற்கு வந்த துன்பங்களாம்.

'குழிப்பூழி ஆற்றா குழிக்கு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-23, 6:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே