திரைப்படப்பாடல்கள்
திரைப்படப்பாடல்கள் என் நினைவின் அழிக்கமுடியாத பதிவு. நான் ஐந்து வயதிலேயே அந்த நேரத்து திரைப்படப்பாடல்கள் சிலவற்றை முனுமுனுபேன். என் அம்மா என்னிடம் கூறுவாள் " நீ ஐந்து வயதிலேயே 'பனியில்லாத மார்கழியா' 'அத்திக்காய் காய் காய் ' ' என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' போன்ற பாடல்களை அடிக்கடி உனக்குள்ளாகவே பாடிக்கொண்டிருப்பாய்".
ஆனால் பிறப்பில் எனக்கிருந்த ஒருவித கூச்சமோ நாணமோ எதனால் என்று தெரியாது, நான் பிறர்க்கு எதிரில் பாடமாட்டேன். என் வீட்டில் அந்த நேரத்தில் வானொலி இல்லை. வீட்டிற்கு வெளியே வந்து எதிர் வீட்டின் வானொலியிலிருந்து தவழ்ந்து வரும் திரைப்படப்பாடல்களை கேட்பேன். எங்கள் வீட்டின் பின் புறத்தில் ஒரு சிறிய ஓட்டு வீடு இருந்தது (outhouse). அந்த வீட்டிற்குள் சென்று உள்ளிருந்து ஜன்னல் பக்கம் காதை வைத்துக்கொண்டு நின்றுகொண்டு பக்கத்துக்கு தெருவின் வீட்டின் வானொலியிலிருந்து வரும் சினிமா பாடல்களை கேட்பேன். அதன் பிறகு எனது எட்டு வயதில், பல நாட்கள் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று அவர்கள் வீட்டு வானொலியில் திரைப்படப்பாடல்களை கேட்பேன்.
1972 ல்தான் என் பதிமூன்றாம் வயதில் எங்கள் வீட்டின் வானொலி பெட்டி வாங்கினார்கள். என் ஐந்து வயது தொடங்கி பதினைந்து வயதுவரை நான் கேட்ட திரைப்படப்பாடல்கள் பலவும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்துவிட்டது. எனக்கு அன்றும் இன்றும் அபிமான பாடகர் TMS, அபிமான பாடகி பி சுசீலா. இவர்கள் இருவரும் தனித்தனியே மற்றும் இணைந்து பாடிய பல பாடல்களை இன்றும் BGM (பின்னணி இசையுடன்) நான் நினைவில் வைத்திருக்கிறேன்.
சொல்லப்போனால் நான் TMS ஐயாவை ஒரு தெய்வமாகவே நினைத்திருந்தேன். அவர்போலவே நானும் பாடவேண்டும் என்று நினைப்பேன். இந்த பாடல்களை இன்றும் நான் பாடுகையில் கேட்பவர்கள் "அப்படியே TMSஐ போல பாடுகிறாய்" என்பார்கள். TMS மட்டும் இல்லை, AM ராஜா, PB ஸ்ரீனிவாஸ், Spb மற்றும் யேசுதாஸ் பாடல்களையும் அவர்கள் பாடுவதைபோல் நினைத்துக்கொண்டு பாடுவேன்.
உங்களுக்கு சந்தேகம் இருப்பின் 'ஸ்டார்மேக்கர்' மற்றும்
'ஸ்முயூல்' ஆன்லைன் ஆப்புகளில் சென்று 'ராம்டியர்' என்கிற பெயரில் தேடினால் நான் பாடிய பழைய பாடல்களை கேட்கமுடியும்.
நான் TMS, MS விஸ்வநாதன், SPB இவர்களை நேரில் சந்தித்திருக்கிறேன். TMS மற்றும் SPB ஆட்டோகிராப் இன்றும் என்னிடம் இருக்கிறது. MSV யை நேரில் சந்தித்தபோது அவரைப்பற்றி நான் அமைத்த ஒரு ஆங்கில கவிதை நடையை அவருக்கு வழங்கினேன். அதன் நகல் இப்போதும் என்னிடம் உள்ளது.
1984 ஆம் ஆண்டு நான் வேலைநிமித்தமாக வடஇந்தியா சென்று கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் அங்கு பணிபுரிந்துவிட்டு அதன் பின்னர் ஹைதெராபாத்தில் முப்பது வருடங்கள் பணி செய்ய நேர்ந்ததால், தமிழ் திரையிசை பாடல்கள் பாடுவதையும் கேட்பதையும் எப்படியோ விட்டுவிட்டேன். 1970-1975 இடைப்பட்ட காலத்தில் நான் வானொலியில் ஹிந்தி திரைப்பாடல்கள் பலவற்றை கேட்டு ரசிப்பேன். அந்த சமயத்தில் பாடல்களுக்கென்றே பிரபலமான 'ஆராதனா' ' கட்டி பதங்' ' அமர் பிரேம் ' ' 'பிரேம் பூஜாரி' 'மேரா நாம் ஜோக்கர்' ' பாபி' 'கைடு' 'அன்தாஸ்' படப்பாடல்களை வானொலியில் ரசித்து கேட்டதால், வடஇந்தியா சென்றபிறகு அதிகமாக ஹிந்தி பாடல்களை கேட்க ஆரம்பித்து தமிழ் திரைபாடல்களை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டேன்.
ஹைதெராபாத்தில் 2017 ஆம் வருடத்தில் 'ஸ்முயூல்' ஆன்லைன் ஆப்பிள் பாடத்துவங்கினேன். அப்போதிலிருந்து அதிக அளவில் தமிழ் பாடல்களை பாடி வருகிறேன். ஓரளவுக்கு இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் எனக்கு தெரியும்.
இன்று எவ்வளவோ புது படங்கள் பாடல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆயினும் எனக்கு என்னமோ அவற்றில் மனம் லயிப்பதில்லை. எப்போதோ ஒரு முறை சில புதிய பாடல் மனதிற்கு பிடித்தமாதிரி இருக்கிறது. இன்றும் பழைய பாடல்கள் பாடுவதில்தான் எனக்கு விருப்பம்.