தமிழர் வரலாற்றினை கனடா மண்ணில் காவியமான விஜயாலயனுக்கு

காவிய நாயகனுக்கு... கவிவரிகள் சமர்பணம்..
தமிழர் வரலாற்றினை வீரத்தினை பறைசாற்றிய கனடா மண்ணில் காவியமான விஜயாலயனுக்கு தலைசாய்து...

தமிழர்களின் காவிய நாயகர்கள் வரிசையில்
இணைந்துகொண்ட எங்கள் உரிமையான சொத்துக்கு தலைவணங்கி
அவன் புகழ் என்றும் நிலைக்க
என் உள்ளத்தில் உள்ள குமுறல்களை
செதுக்கி நிக்கின்றேன் இந்த சிம்மசொப்பனுக்கு..

வீரத்தின் வித்தொன்று விருட்சமானது கனடாவில்
முல்லையில் பூத்த பூவொன்று உதிர்ந்து போனது கனடாவில்
உன் வீரத்திற்கு தலைவணங்குகின்றோம்.

வீரம் விளைந்த பூமியில் பிறந்து விஜயாலயன் என்ற நாமத்துடன்
அன்னிய தேசமதில் வீரனானாய்.
முள்ளியவளை காட்டா விநாயகர் அரசமரத்தை சுற்றியும்
பெருந் தெருக்களில் கால் பதித்த பாதம்
இன்று சாதனை வீரனாய் ஓய்ந்து போனது.
சிறு வயதில் நீ குறிபார்த்த இலக்கு கரம் பிடித்த துப்பாக்கியும்
கனேடிய தேசத்தில் - உன்னை இரும்பு மனிதனாக்கியது
உன் வீரத்தை பறை சாற்றுவோம்.
வீரம் விளையாடிய மண்ணில் -
பிறந்த வீரனே தேசம் கடந்தும் வீரனாய் வாழ்ந்து விட்டாய்.

உன் பாதம் பதித்த தெருக்கள் உன்னை கண்டு குலாவிய முகங்கள்
இன்று பூ சொரிகின்றன புலம்புகின்றோம்
உன் வீரமதை பார் போற்றும் வீரமதை வாய் விட்டு சொல்ல முடியவில்லை.

தமிழுக்கு பெருமை சேர்த்த - தமிழ் மகனாய்
கனடாவின் வீரத் தமிழ் மகனாய் கனேடிய தேசத்திற்கே பெருமை சேர்த்தாய்
தாய் தமிழ் உறவுகள் உன் வீரத்தை பறைசாற்றுகின்றோம்.
உன் கட்டழகு உடலும் - நீ கண்ட வளர்ச்சியும்
காலனவனுக்கு கூட பொறுக்கவில்லை
இதற்கு தானோ என ஏங்குகின்றோம்.
உன் கருக்கொண்ட அன்னையவளின் வயிறு கொதிக்கிறது
வீரனை பெற்றெடுத்த வீரத்தாய் என பெருமை கொள்கின்றோம்.
என்றும் சிரித்த முகத்தில் உன் சிறு பிள்ளை தனத்தில்
இத்தனை வீரப்பிறப்பா
வீரத் திருமகனாய் விழி மூடி தூங்கு - உன் பாதம் தொழுகின்றோம்.
உன் குருதியில் ஊறிய வீரத்தால் கனடாவில் தேசிய வீரனானாய்
உன் மாமன்கள் காட்டிய பாதைகள்
உன்னை சாகச வீரனாக்கியது
பரணி காட்டிய பாதையில் - தரணியில் வீரனானாய்
தமிழன்பன் சுவாசம் பட்டதாலே
தமிழ் பற்று கொண்டாய்
வீரம் உன் பரம்பரையில் ஊறிய -
ஊற்று உன் வீரத்தை பறைசாற்றுகின்றோம்.

சாகசங்கள் பல நிகழ்த்தி சாதனை வீரனானாய்
ஆகாயத்தில் இருந்து குதித்தும்
அச்சமின்றி துச்சமென வேகம் கொண்ட வேங்கையானாய்
போரின் வியூகனாய் - பாரில் நீ பதித்த கால்கள் இன்று ஓய்ந்து போனதுவோ
இன்று கனேடிய தேசம் கூட உன்னை இழந்து தவிக்கிறது.

வீரனின் வீரத்தை என்றும் பறைசாற்றி நிக்கிறது கனேடிய தேசம்
நீ கண்மூடி தூங்கினாலும் கல்லறைகள் வரிசையில் காவல் தெய்வமானாய்
கனேடிய மண்ணின் மாவீரனாய் நினைவிற் கொள்கின்றோம்.

கனேடிய இராணுவத்தின் வியூகம் வகுத்த ஆசிரியனாய்
போர் கல இயக்குனராய் பரசூட் வீரனாய்
நேட்டோ அணியிணைந்து நேச நாடுகள் எல்லாம் சென்ற வீரனாய்
கனேடிய மக்களின் பாதுகாவலனாய்
பொலிஸ் அதிகாரியாய்
உன் பாதைகளின் வளர்ச்சி காலனவனுக்கு கூட பொறுக்கவில்லை.

சரித்திர நாயகனாய் - இன்று கண் மூடித் தூங்கும் வீரனே
நீ வீழ்ந்தாலும் வீரன் என்ற நாமத்துடன் வீரத் திருமகனாய்
நீ தூங்கு கனேடிய தேசம் உன் வீரத்தை பறைசாற்றி நிக்கும் -
தமிழ் வீரத்தை பெருமை கொள்ள வைத்த தீரனாய் உன் வீரத்தை பறைசாற்றுகின்றோம்.

எழுதியவர் : செ.சுமந்தன் (அந்தணன்) (9-Sep-23, 5:05 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 27

மேலே