அமெரிக்காவில் ஜீவகாருண்யம்
நேற்று நான் ஒரு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆங்கில தொலைக்காட்சித் தொடரை பார்த்தேன். அதன் பெயர் ' good doctor ', அதாவது நல்ல மருத்துவர். நேற்றைய தொடரில் நான் ஆச்சரியமுடன் கண்ட சில காட்சிகளை தொகுத்து கீழே தருகிறேன்.
ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பரிசோதித்து மருத்துவர்கள் அவருக்கு வேறு இருதயத்தை பொருத்தவேண்டும் என்று தீர்மானித்து, அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையை துவக்குகின்றனர். அவரது மார்பு பகுதியை திறந்து மாற்று இருதயத்தை பொருத்தவேண்டும் என்னும் தருணத்தில், அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் மருத்துவர் அந்த மாற்று இதயத்தை பரிசோதித்துவிட்டு அதில் பழுது இருக்கிறது என்று சொல்லி இதயமாற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து செய்யாமல், திறந்த அந்த நோயாளியின் மேற்பகுதியை மீண்டும் மூடிவிடுகிறார்.
நோயாளி அப்போதிருந்த நிலையில் இன்னும் ஐந்து நாட்களுக்குள் மாற்று இருதயம் பொறுத்தப்படாவிட்டால் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் வேறொரு சகமருத்துவர் ' பன்னியின் இருதயத்தைக்கூட நாம் மனிதருக்கு பொருத்தமுடியும்' என்று சொல்ல அறுவை சிகிச்சை செய்யும் முக்கிய மருத்துவர் அதை நல்ல யோசனை என்று சொல்லிவிட்டு உடனடியாக ஒரு பன்றியின் இருதயம் தேவை, உடல் நலத்துடன் உள்ள ஒரு பன்றியை உடனடியாக கொண்டு வந்து கொடுத்து அதற்கு தகுந்த தொகையையும் கொடுப்பதாக விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
அடுத்த நாளே ஒரு குடும்பத்தினர் அவர்களுடன் ஒரு பன்றியை கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி வருகின்றனர். மருத்துவர்கள் பன்றியை சோதித்து அதன் இருதயத்தை நோயாளிக்கு பொருத்தலாம் என்று தெரிவித்தனர்.
முக்கிய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் இணைந்து பணியாற்றிவரும் ஒரு பெண் மருத்துவர் 'பன்றியை கொன்று அதன் இதயத்தை எடுத்து மனிதனுக்கு பொருத்துவது' என்கிற முடிவை எதிர்க்கிறார். அப்படி செய்வது தார்மீகம் அல்ல மற்றும் அது மருத்துவ நியதிகளுக்கு புறம்பானது என்று கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட முக்கிய அறுவை சிகிச்சை மருத்துவர் அந்த பெண் மருத்துவரை வேலையிலிருந்து நீக்க முடிவெடுத்து அதை அவரது உயர் மருத்துவரிடம் சொல்கிறார். அந்த உயர் மருத்துவர் ' இந்த பெண் மருத்துவருக்கு இதுதான் வாழ்க்கையில் அவரது முதல் அறுவை சிகிச்சை. எனவே அவளுக்கு கொஞ்சம் சமாதானம் சொல்லுங்கள் ' என்றதும் அறுவை சிகிச்சை மருத்துவர் அந்த பெண் மருத்துவரிடம் " நீங்கள் இந்த அறுவை சிகிச்சையில் கலந்துகொள்ள தேவையில்லை. ஆனால் எப்படி இது நடத்தப்படுகிறது என்பதை பாருங்கள்" என்கிறார்.
அடுத்தநாள் பன்றிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு, அதன் உடலை கிழித்திட அறுவை சிகிச்சை மருத்துவர் கருவியை எடுத்து இயக்கும் நேரத்தில் ஒருவர் ஓடிவந்து ' தகுந்த மனித இருதயம் வந்துசேர்ந்துவிட்டது' என்றதும் அந்த பன்றியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்.
அதைப்பார்க்கும் அந்த பெண் மருத்துவர் ஒருவித திருப்தி கொள்கிறார்.
பின்னர் அறுவை சிகிச்சை மருத்துவர் அந்த பெண் மருத்துவரிடம் "மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக எலிகள் கொல்லப்படுவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் தானே? என்று கேட்கும்போது அந்த பெண் மருத்துவர் சொல்கிறார் " வேறு நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் இப்போது எலிகளை வைத்து சோதனை செய்வதும் நிறையவே குறைந்துவிட்டது". இந்த கூற்று அறுவை சிகிச்சை மருத்துவருக்கு அதிக அதிருப்தியையே தருகிறது.
இதனுடன் இந்த தொலைக்காட்சியின் ஒரு பாகம் முடிவடைந்தது.
பரவலாக அசைவம், குறிப்பாக பன்றி மாமிசம் உண்ணும் அமெரிக்காவில், ஜீவகாருண்யம் எனும் உயர்ந்த மனித பண்பாடு ஒரு தொலைக்காட்சித்தொடர் வாயிலாக காண்போர்களுக்கு உணர்த்தப்படுகிறது. எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்த விஷயம் இதுதான்.
'சந்திராயன் ஒன்றும் பெரிய சாதனை இல்லை' என்று நான் நேற்று எழுதிய கட்டுரையை தொடர்ந்து இந்த கட்டுரையை இந்த தளத்தில் பகிர்வதில் நான் மேலும் திருப்தி அடைகிறேன்.
கருணைமிகு வள்ளலார் நமக்கு வழங்கிய ' ஜீவகாருண்யம்' ' கொல்லாமை' என்கிற தெய்வீக வழிகளில் நாம் அனைவரும் பயணிக்க நான் என் வாசகர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மட்டுமின்றி உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடனும், மனிதனை தெய்வீக வழியில் இட்டுச்செல்லும் இந்த அன்பு குறிக்கோள்களை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.