அவலோதிகம் யாப்பு மென்பொருளின் அமைப்பும் பயன்பாடும்
'அவலோதிகம்; யாப்பு மென்பொருளின் அமைப்பும் பயன்பாடும்
முனைவர் த.சங்கரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
சேலம்-106.
முன்னுரை
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வகைமையைக் கொண்டது. இது இன்று வளர்ந்து தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் நான்காவதாகக் 'கணினித்தமிழ்' என்ற ஒன்று உருவாகி தமிழ் மென்மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்துவருகிறது. காலம் கடந்து இன்று தமிழ்மொழி இலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் புத்தாக்கம் பெற்று வந்துகொண்டிருக்கின்றது. இந்த இலக்கிய வளர்ச்சியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் 'கணினித்தமிழ்' வளர்ந்து வருகின்றது. அந்த வளர்ச்சியால் தமிழ் கற்றல், கற்பித்தல், இலக்கணம், இலக்கியம், இணையம் என்று பல தமிழ் மென்பொருள்கள் உருவாகியுள்ளன. அவற்றில் 'அவலோகிதம்' என்ற தமிழ் இலக்கண மென்பொருளின் அமைப்பையும் அதன் பயன்பாட்டினைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இலக்கியமும் இலக்கணமும்
'மொழியைச் செம்மையாக பேசவும் எழுதவும் துணைபுரிவது இலக்கணமாகும். இலக்கணம் மொழியின் அமைப்பையும், அழகையும் உணர்த்துகிறது. எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போன்று இலக்கியங்களிலிருந்து எடுக்கப்படுவது இலக்கணமாகும்.'1
இலக்கியம் தாய்; - இலக்கணம் சேய், இலக்கியம் மாங்கனி - இலக்கணம் தீஞ்சுவைச்சாறு, இலக்கியம் பெருவிளக்கு - இலக்கணம் ஒளி, இலக்கியம் எள் - இலக்கணம் எண்ணெய். இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் இடையேயான உறவுமுறையைப் பிணைப்பு முறையை முன்னோர் அறிந்து தெளிந்திருந்தனர். இதனாலேயே
'இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்'
எனக் கூறினர். எனவே, இலக்கியப் பெருந்தருவின் நிழலில் எழுந்து நிற்பதே இலக்கணம் என்பது பெறப்படும். இலக்கியமும் இலக்கணமும் வேறுபட்ட நிலையுடையன அல்ல, ஒரு வழிப்பட்ட ஒற்றுமையுடையனவே ஆகும்.
தமிழ் இலக்கணப் பிரிவுகள்
தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று பிரிவில் இலக்கணங்களைக் கூறியுள்ளார். பொருளதிகாரம் மிகவும் விரிவுடையது. இப்பகுதியில் பொருள், உவமை, யாப்பு என்பன பற்றியும் கூறியுள்ளார். இம்மூன்றையும் பொருளிலக்கணம், அணியிலக்கணம், யாப்பிலக்கணம் என மூன்று தனி இலக்கணங்களாகக் கொண்டால் எழுத்தும் சொல்லும் இணைந்து தொல்காப்பியம் ஐந்திலக்கண நூலாகும். தமிழ்மொழியைக் கற்பதற்கு உள்ள மென்பொருள்களைப் போன்று யாப்பு இலக்கணத்தைக் கற்கவும் பயன்படுத்தவும் உருவாக்கப்பட்ட இணைய மென்பொருள் 'அவலோகிதம்;' யாப்பு இலக்கண மென்பொருள் ஆகும்.
யாப்பு அறிவான் மென்பொருள் 'அவலோகிதம்'
தமிழ்மொழிக்கே தலைக்கவசமாக விளங்கக்கூடிய இலக்கணத்திலும் கணினித்தமிழ் சாதனை படைத்துள்ளது. யாப்பு என்பதற்குக் 'கட்டுதல்' என்று பொருள். செய்யுள்களை இலக்கண முறைப்படி எழுத்து, அசை, சீர், அடி, தொடை எனப் பிரித்து காட்டுவத்றகு ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு 'யாப்பு அறிவான்' என்று பெயர். இந்த யாப்பு அறிவான் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றுள் எந்தப் பா வகையைச் சார்ந்தது என்று அறிவிப்பதோடு ஒரு மரபுக் கவிதையை உள்ளீடு செய்தால் அந்த செய்யுளைப் பிரித்துப் இனம்காட்டுவது போன்ற பணிகளையும் செய்கிறது. இதற்கு யாப்பு அறிவான் என்று பெயர்.
தமிழ் யாப்பு அறிவான்களாக அவலொகிதம், வெண்பாநிரல் போன்ற மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 'அவலோகிதம்' என்ற மென்பொருளை வினோத் ராஜன் என்பவர் உருக்கினார்.
அவலோகிதம் மென்பொருளின் அமைப்பு
அவலோகிதம் ஒரு தமிழ் யாப்பு மென்பொருள் ஆகும். உள்ளிடப்பட்ட உரையினைத் தமிழ் யாப்பு விதிகளின்படி ஆராய்ந்து – எழுத்து. அசை, சீர், தொடை ஆகிய உறுப்புகளைக் கணக்கிட்டு. இவற்றைக்கொண்டு உள்ளீட்டின் பாவகையினைக் கண்டறிந்து, மேற்கூறிய யாப்புறுக்களையும் பாவிதிகளின் பொருத்தத்தையும் வெளியிடும். இதில் யாப்பிலக்கணம் கற்கவும் வழி உள்ளது.
வெண்பா, ஆசிரியப்பா, தரவுகொச்சகக் கலிப்பா, வஞ்சிப்பா, குறட்டாழிசை, குறள்வெண்செந்துறை, வெண்டாழிசை, வெள்ளத்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம், ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம், கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சித்துறை ஆகிய பாவகைகளை அவலோகிதம் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
'அவலோகிதம் - ஒரு தமிழ் யாப்பு மென்பொருளாகும். உள்ளீடு செய்யப்பட்ட உரையினை தமிழ் யாப்பு விதிகளின்படி ஆராய்ந்து – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய யாப்பு உறுப்புகளை வெளியிடும். இவற்றைக்கொண்டு உள்ளீட்டின் பாவகையினையும் கண்டுகொள்ளும். பண்டைய தமிழ் மஹாயான பௌத்தர்கள் தமிழ்மொழியை அகத்தியருக்கு உபத்தியருக்கு உபதேசித்தவராகக் கருதிய சர்வ புத்தர்களின் மஹாகருணையின் உருவமாக விளங்கும் பகவான் போதித்த அவலோகிதேஸ்வரின் பெயர் இம்மென்பொருளுக்கு இடப்பட்டுள்ளது.'3 இம்மென்பொருள் ஐந்து பகுதிகளை உடையது.
1. ஆராய்க
2. சொல் தேடல்
3. பா வகைகள்
4. கற்க
5. குறிப்புகள்
1.ஆராய்க
'ஆராய்க' என்னும் முதல் பகுதியில் பாவினை உள்ளீடு செய்யும் வழிமுறைகளும், உள்ளீடு செய்யப்படும் பாவில் அமைந்துள்ள எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றை ஒருசேர அறியும் வழிமுறைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் பயனாளர் விரும்பும் பாவகையினைத் தேர்ந்தெடுத்தால் அந்த பாவினை உள்ளீடு செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
2.சொல் தேடல்
'சொல் தேடல்' என்னும் இரணடாம் பகுதியில் பயனாளரின் மூலச்சொல்லுடன் சிறந்த ஓசை நயத்துடன் பொருந்தக்கூடிய பல்வெறு செற்களை இங்குப் பயனாளர் தேட முடியும்.
தொடை என்னும் பகுதியில் எதுகை, மோனை, இயைபு, முதல் எழுத்துக்கள், இறுதி எழுத்துக்கள் போன்ற அடிப்படையில் சொல் தேடல் செய்ய முடியும்.
எழுத்தெண்ணிக்கை என்னும் பகுதியில் - சம அளவு, குறைவாக, அதிகமாக
மாத்திரை எண்ணிக்கை என்னும் பகுதியில் - சம அளவு, குறைவாக, அதிகமாக
வாய்ப்பாடு என்னும் பகுதியில் - தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்
தளை என்னும் பகுதியில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை, வஞ்சித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை முதலிய வௌ;வேறு பன்முக வாய்ப்புகள் உள்ளன.
இவற்றுள் ஒன்றைப் பயனாளர் தேர்வு செய்து 'தேடுக' விசையை அழுத்தினால் பயனாளருக்குத் தேவையான சொல்லினைத் தேடிப் பெற முடியும்.
3.பா வகை
பயனாளர் உள்ளீடு செய்யும் பா வகையினை வேறொரு பாவகையான விதிகளுக்கு உட்பட்டு மாற்ற முடியும். பயனாளரின் பாவானது பா விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்று உடனடியாகக் காட்டிவிடும். மாறிய பாவின் மூலச்சான்றைத் திரும்பப்பெற 'மிளமை' என்ற விசையைச் சுட்ட வேண்டும். பாவினை அவலோதிகம் கொண்டு ஆராய 'ஆராய்க' என்ற விசையைச் சுட்ட வேண்டும். மேலும் இந்த பகுதியில் வெண்பா, வெண்பாவினம், ஆசிரியப்பா, ஆசிரியப்பாவினம், கலிப்பா, கலிப்பாவினம், வஞ்சிப்பா மற்றும் வஞ்சிப்பாவினம் போன்ற அனைத்துப் பாவினங்களுக்கான விளக்கங்களும் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
4.கற்க
'கற்க' என்னும் நான்காம் பகுதியில் மரபுப்படி செய்யுளையும் பாட்டையும் எழுதத் தேவையான குறைந்தபட்ச தகவல்கள் ஒவ்வொன்றையும் கற்கும் வகையில் தனித்தனி பகுதியாகப் பிரித்து வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தளை, தொடை, பா, வெண்பா, பாவினம் போன்றவற்றைக் கற்பதற்காக கீழ்கண்டவாறு விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொன்றுக்குமான விளக்கங்கள் பேச்சு வழக்கில் கற்பித்தல் நோக்கத்தோடு தரப்பட்டுள்ளன.
சான்றாக 'எழுத்து இதுதாங்க எல்லாதுக்கும் அடிப்படை, எழுத்தில்லாம எதாச்சும் எழுதமுடியுமா? செய்யுள்ள பொருத்த வரைக்கும் எழுத்துக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.'
5.குறிப்புகள்
'குறிப்புகள்' என்னும் ஐந்தாம் பகுதியில் எழுத்து. அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவின விதிகள் போன்றவை பயனாளர் கற்பதற்காகக் தனித்தனி விசைகளாக விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பயனாளருக்குத் தேவையான விசைகளைத் தெரிவு செய்தவன் மூலம் அந்தப் பகுதிகளுக்கான முழுமையான விளக்கங்களை அறிந்து கொள்ள முடியும்.
இதனைப் பதிவிறக்கம் செய்ய வசதியாக 'பதிவிறக்கம்' என்னும் பகுதியும், இந்த மென்பொருள் பற்றி அறிந்துகொள்ளப் 'பற்றி' என்னும் பகுதியும் உள்ளது.
அவலோதிகம் யாப்பு மென்பொருளின் பயன்கள்
யாப்பிலக்கண மென்பொருளான இது ஒரு இணையப் பயன்பாட்டு மென்பொருளாகும்.
ஒரு செய்யுளில் உள்ள யாப்பின் உறுப்புகள், பா வகை போன்றவற்றை அறிய இம்மென்பொருள் பயன்படுகின்றது.
யாப்பிலக்கணத்தின் வழியாக ஒரு புதிய செய்யுளையும் கவிதையையும் இயற்றவும் இது பயன்படுகின்றது.
தொல்காப்பியத்தின் வழி யாப்பிலக்கணத்தின் விளக்கங்களை கற்கவும் இம்மென்பொருளில் 'கற்க' என்னும் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு செய்யுளை அசை பிரித்து வாய்பாட்டினை அறிந்துகொள்ளவும் பயன்படுகிறது.
ஒரு செய்யுளை இற்றும் போது ஒரு சொல்லிற்கு இணையாகவுள்ள இலக்கணத்துடன் ஒத்த வேறு சொற்களைத் தேடிப் பயன்படுத்தவும் முடியும்.
'குறிப்புகள்' பகுதியில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்றவற்றின் இலக்கண விளக்கங்களை அறிந்து கொள்ளவும் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
யாப்பு இலக்கணத்தினை ஒரு மென்பொருள் வடிவில் உருவாக்கி உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் பயன்படுத்தும் வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது.
கவிதை, செய்யுள் இயற்றுவோர் குறைந்து வரும் நிலையில், யாப்பிலக்கணத்தினை ஒருவர் கற்று புதிதாக செய்யுள் இயற்றக் கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
மொழியின் வாழ்வும் காலவெள்ளத்தின் போக்கும் அறிந்தவர்கள், மொழி உயிருள்ளது என்றும், வளரும் தன்மைக் கொண்டது என்றும், மாறும் என்றும் கண்டதால் இலக்கணம் செய்யும்போது புறனடை அமைத்தனர். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' எனக் கூறுவர். இத்தகைய இலக்கணம் முன்னோர் அறிந்து தெளிந்து அமைத்த மொழியமைப்பு என்று யாவரும் ஏற்றிப் போற்றும் இயல்பில் அமைந்துள்ளது. தமிழ் இலக்கணங்களில் யாப்பிலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட ஒரே தமிழ் மென்பொருள் 'அவலோதிகம்' யாப்பு மென்பொருளாகும். இணையவழியில் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. பொதுவாக யாப்பிலக்கணம் புரிந்துகொள்வதற்கும் கடினமாகக் கருதும் அனைவருக்கும் யாப்பிலக்கணத்தை எளிமையாக கொண்டுசேர்க்கும் வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது. புதிதாக ஒரு செய்யுளையும், கவிதை எழுதுவோருக்கும் பயன்படும் வகையில் சிறப்பாகவும் எளிமையாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணத்திற்கு பல மென்பொருள்கள் வெளிவந்துள்ள போதிலும் யாப்பிலக்கணத்திற்கு உருவான ஒரே மென்பொருள் சிறப்பு வாய்ந்த மென்பொருளாக 'அவலோகிதம்' திகழ்கிறது என்பது இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.