மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர் பிறருடைமை மேவார் - பழமொழி நானூறு 372
நேரிசை வெண்பா
மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புட்கலாம் மால்கடல் சேர்ப்ப!
கடலொடு காட்(டு)ஒட்டல் இல். 372
- பழமொழி நானூறு
பொருளுரை:
கூடு பொருந்திய மடல்களோடு பறவைகள் விரவா நின்ற பெரிய கடலையுடைய நெய்தல் நிலத் தலைவனே! கடலோடு துரும்பு பொருந்துதல் இல்லை.
அதுபோல, தமது உடம்பு ஒடுங்கும்படி பசித்தாராயினும் மாட்சிமை உடையார் பிறர் பொருளைத் தாம் கொள்ளத் தொடங்க விரும்பார்.
கருத்து!
பெரியோர் பிறர் பொருளை விரும்பார்.
விளக்கம்:
பசிப்பினும் என்பது தாங்க முடியாத இறுதிநிலை; கடல் துரும்பினைத் தன்னோடு கொள்ளாது ஒதுக்குதல்போல் பெரியோர் பிறர் பொருளை விரும்பாது நீக்குவார்கள்.
'கடலொடு காட்டு ஒட்டலில்' என்பது பழமொழி.

