கற்றொன் றறிந்து கசடற்ற காலையும் மற்றதன்பாற் றேம்பல் நன்று - பழமொழி நானூறு 373
இன்னிசை வெண்பா
தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்;
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று. 373
- பழமொழி நானூறு
பொருளுரை:
தெளிவாக அறிந்த அறிவுடையாரைத் தேடி வைப்பதல்லாமல் திறமையில்லாத முதிர்ந்தவர்களை ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள் காரியம் முடியவேண்டுமென்ற கருத்துடையார்;
ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும் குணமில்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு மெலிதலே நல்லது.
கருத்து:
காரியம் முடியவேண்டுமென்று நினைப்பவர்கள் சிறந்த அறிவு பெற்றவர்களையே அதனைச் செய்ய நிறுத்துதல் வேண்டும்.
விளக்கம்:
நட்டாரிடத்துக் குணமில்லையாயின் தாம் பிழைத்தன பொறுத்தல் முதலியன அவர்கண் இல்லையாம். ஆகவே, அத்தகையோர் நட்புக் குறைதலே நல்லது. நட்புக் கொள்வதற்கு ஆராய வேண்டுவனவற்றுள் தலை சிறந்தது குணமேயாம். கல்வி வேண்டுவதில்லை.
குணமில்லாரிடத்துக் கொண்ட நட்புப் பயன்தராது ஒழிதல் போல,அறிவிலாரிடத்து ஒப்புவித்த காரியம் முடிதல் இல்லையாம்.
'கற்றொன் றறிந்து கசடற்ற காலையும் மற்றதன்பாற் றேம்பல் நன்று' என்பதுபழமொழி!