சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு பகுதி - 77 ~

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு : பகுதி - 77
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆடித்தவசும் ஊத்துமலை ஜமீனும்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

பரிவாரங்களுடன் சங்கரன் கோயிலுக்கு வரும் ஜமீன்தார் அம்பாளை வணங்கி நிற்பார்கள். அதன்பின் அம்பாளை தங்க சப்பரத்தில் அழைத்து வருவார்கள். அப்போது அவருக்கு பிறந்த வீட்டு சீதனமாய் அழைப்புச்சுருள் வைக்கப்படும். அலங்கார சாமான்களுடன் ஜவ்வாது, சந்தனம், விபூதி பைகள், எலுமிச்சை பழமாலை, பட்டு பரிவட்டம், சவுரிமுடி, புஷ்பவகை மற்றும் இதர பொருள்களுடன் கோயிலுக்குள் ஜமீன்தார் பரிவாரங்கள் புடைசூழ செல்வார். பிறகு அம்மனுக்கு தபசு அலங்காரம் செய்து, ஜமீன்தார் முன்செல்ல கோமதியம்மன் வீதிஉலா வருவார். “ஊத்துமலை ஜமீன் தபசு மண்டபத்தில் தங்க சப்பரத்தில் ஆவுடையம்மை, உமையம்மையாக தவம் இயற்றுவார். மாலையில் அம்பாள் தங்கச்சப்பரத்தில் சுவாமியை வலம் வந்து தவப்பயன் அடைவார். அதன்பின் மாலை மாற்றுதல், பரிவட்டம் கட்டுதல், திருக்கண் அலங்கரித்தல் போன்றன நடைபெறும். இவற்றை ஊத்துமலை ஜமீன் வாரிசுகள் முன்னின்று நடத்துகிறார்கள். தபசு காட்சியின்போது பரிவட்டம் கட்டி ராஜதோரணையில் ஊத்துமலை ஜமீன்தார் நிற்க ஒருபுறம் அம்பாள் சப்பரமும், மறுபுறம் சுவாமியின் சப்பரமும் நிற்கும். ஜமீன்தார் பரிவட்டம் கட்டிக்கொண்டு கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தோடு அந்த இடத்தில் எளிமையாகக் காத்திருக்கிறார். தற்போது ஜமீன்வாரிசு பாபுராஜ் என்ற மருதுபாண்டியர் இந்த மண்டகப்படியை முன்நின்று நடத்துகிறார்.

மறுநாள் கோமதி அம்பாள் சப்பரத்தில் பட்டிணப் பிரவேசம் செல்வார். இதற்குத் தேவையான புஷ்ப அலங்காரம் செய்து வீதி உலா வந்து அம்பாளை கோயிலில் கொண்டு சேர்க்கிறார் ஜமீன்தார். மூன்று நாட்களும் எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சிக்குப்பின் பள்ளியறைச் சிறப்பு மண்டகப்படியையும் இவரே செய்கிறார். இதற்காக நிறைக்குடமாக பசும்பால், தேங்காய் பருமன் உள்ள லட்டு, தோசைக்கல் அளவு தேன்குழல், அதிரசம் மற்றும் கனி வர்க்கங்கள், புஷ்பங்கள் வைத்து பூஜிப்பார்கள். அம்பாள் தவப்பயன் அடைந்து தபசு மண்டபத்துக்கு வந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் அனைவருக்கும் பாகுபாடு இன்றி சுருள் பிரசாதம் வழங்குவார். மதியம் அன்னதானம் நடைபெறும். கோயிலில் சங்கரநயினார், கோமதியம்மாள், சங்கரநாராயணர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

தொடரும்....

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (6-Oct-23, 5:34 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 77

மேலே