பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல் - பழமொழி நானூறு 371

நேரிசை வெண்பா
(’ழா’ ழ் மெய்மேல் ஆ உயிர் ஏறிய எதுகை)

ஊழாயி னாரைக் களைந்திட் டுதவாத
கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும்
தீஞ்சொல் மழலையாய்! தேனார் பலாக்குறைத்துக்
காஞ்சிரை நட்டு விடல். 371

- பழமொழி நானூறு

பொருளுரை:

யாழிசையைப் போன்ற இனிமையான மழலைச் சொல்லை உடையாய்!, முறைப்படியே தமக்கு நன்மை செய்வாரை நீக்கிவிட்டு, பயன்படாத கீழ்மக்களைத் தம்மோடு மிகுதியும் சேர்த்தல் தேன் நிறைந்த பலாமரத்தை வெட்டி அவ்விடத்தில் எட்டி மரத்தை வைத்து நீர் முதலியன கொண்டு வளர்த்து விடுதலோடு ஒக்கும்.

கருத்து:

கீழ்மக்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுதல் துன்பத்திற்கு ஏதுவாம்.

விளக்கம்: பயன்படும் பலாமரத்தைக் குறைத்து, இறுதிதரும் எட்டிமரத்தை நட்டுவைப்பது போல், பயன்தரும் அறிவுடையாரை நீக்கிக் கீழ்மக்களைப் பெருக்கிக் கொள்ளல் தனக்கு இறுதி பயக்கும்.

'தேனார் பலாக் குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-23, 7:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே