அம்மா அப்பா நூலாசிரியர் கவிஞர் இராஇரவி நூல் மதிப்புரை முனைவர் நசெகிசங்கீத்ராதா

அம்மா! அப்பா!"

நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி

நூல் மதிப்புரை:
முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044-24342810 பக்கம் : 94 விலை : 9௦
எட்டயபுரத்து கவிஞனின் மரபினில் தவழ்ந்து, புரட்சி கவிஞனின் வழியில் நடைபெற்று, பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சிப் பெற்று இன்று ஹைக்கூ கவிதை உலகில் 'ஹைலைட்டாக' முடிசூடா மன்னனாக திகழ்பவர் கவிஞர் ரவி அவர்கள். இன்றைய தமிழ் இலக்கிய உலகில், கவிதை யுகத்தில் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தன்னுடைய கவி மலர்களை இணையதளம் வலை பூக்களில் மலரவிட்டு உலகத் தமிழர்களின் மனதில் எல்லாம் மனம் பரப்பிக் கொண்டிருக்கும் மகத்தான கவிஞர் இரா. ரவி என்றால் அது மிகையல்ல.!

கவிஞருக்கு இது 27வது நூல் 'அம்மா அப்பா' பதிப்பகத்தின் 'மைல்கல்' எனப் போற்றப்படும் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அட்டைப்படமே ஆயிரம் கவிதைகள் சொல்கின்றது. முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் பெண். முற்போக்குச் சிந்தனை உள்ள ஆண். இதுதான் புதியதோர் உலகம் என்று கைநீட்டி தட்டிச் சிரிக்கும் இளைய தலைமுறை. அழகிய அட்டைப்படம்! ஆழ்ந்த கருத்துக்கள்!

இரண்டு கலைமாமணிகள் இந்நூலுக்கு அணிநலம் செய்திருக்கிறார்கள். ஒருவர் எழுத்தாளர் ஏர்வாடியார். மற்றொருவர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். ஏர்வாடியார் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். "எதையும் எல்லோரும் பார்த்துவிட்டுப் போகும்போது கவிஞர் மட்டும் அதைப் பதிவு செய்துவிட்டுப் போகிறார். அவர் கவிதையோடு உலவுகின்றார் என்பதை விட, கவிதையாகவே உலவுகின்றார்.! அவருக்கு கவிதையே உலகு! கவிதையே உறவு!". பேராசிரியர் கு ஞானசம்பந்தன் அவர்கள், கவிஞருக்கு 'குறுங்கவிதை கோமான்' என்று பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார்.

ஒரு சிறந்த படைப்பு என்பது அதற்கான வித்தினை பதிவு செய்ய வேண்டும் அதனை ஆகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார் கவிஞர்.
தனது படைப்பிற்கான வித்து எங்கிருந்து தோன்றியது என்பதை என் னுரையில் சொல்லிச் செல்கிறார். நெல்லை ஜெயந்தா அவர்களின் 'தொட்டிலாசை' நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன் அங்கிருந்துதான் இந்த படைப்பிற்கான ஒளிகீற்று தோன்றியது என்கிறார்.

35 தலைப்புகளில் 108 பக்கங்கள் கொண்ட இந் நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை நான் ஏழு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டேன். அம்மா - 6 தலைப்புகள் அப்பா - 5 பெண் - 6 பெண் குழந்தை - 3 திருநங்கை -2 சமூகம் - 7 கலாம் - 6 = 35

அம்மா

'அம்மா 'உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல். அம்மா உன்னதம்தானே "பாலோடு பாசமும் தந்திட்ட பாரி தேனோடும் மருந்தும் தந்திட்ட ஓரி "(ப.3.)

கடையேழு வள்ளல்களை நம் கண் முன் நிறுத்துகிறார் கவிஞர்.

"தாய்மொழியை சேயுக்கு கருவிலேயே தன் வயிற்றிலேயே பயிற்றுவித்தவள் அம்மா " (ப.4)

பிறந்து மொழி பயின்ற பின்னரெல்லாம் கிடையாது. கருக்கண்ட நாள் முதலே தமிழ்க் கற்று வளர்ந்த தமிழன் என்ற பெருமிதம் கவிதையில் தென்படுகிறது. 'இன்றா அறிகின்றேன் அன்றே எந்தன் அரவணைக் கண்டு கருக்கோட்டியில் கிடந்து கைதொழுதேன் நான். என்ற ஆழ்வாரின் பாசுரம் என் சிந்தையில் வந்து செல்கிறது.

"தாய் நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய்யான மெய் தாய் "
என்கிறார்.

உண்மையோ உண்மை! அழகோ அழகு! சத்தியமோ சத்தியம்! என்று கூறுவது போல் மெய்யான மெய் என்று கூறி இருப்பது கவிதைக்கு அழகு.

"முந்நூறு நாட்கள் அன்னை அவர் படும்பாடு மண்ணில் மறக்க முடியாத துன்பம் பெரும்பாடு "(ப.7)

நம் கண்முன்னே பட்டினத்தாரை அழைத்து வருகிறார் கவிஞர் .

" அன்னையின்றி நீயும் இல்லை! நானும் இல்லை! அகிலமில்லை!(ப.12)

என்று அம்மாவின் அன்பை , ஆளுமையை உரத்த குரலில் உலகுக்குப் பறைசாற்றுகிறார் கவிஞர்.

பெண்களைப் பற்றிய கவிதைகள் "எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது" என்ற தலைப்பில்,

" மண்புழுவாய் நெளிந்தது போதும்! பெண் புலியாய் புறப்படும் நாளும்" (ப.14) என்கிறார்.

"புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும். புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும்"!(ப.14)

என்று பாரதி, பாரதிதாசன் சொல்லாடல்களை வைத்து சொற்சித்திரம் தீட்டிச்செல்கிறார்.

"எழுத்திலும் அநீதி ஆண் நெடில் தொடக்கம் பெண் குறில் தொடக்கம்"(ப. 17 )

எப்படிக் கவிஞர் உற்றுநோக்கி இருக்கிறார் என்று பாருங்கள். இப்பொழுது, ஏர்வாடியார் சொன்னது நினைவுக்கு வருகிறது. நாம் எல்லோரும் பார்த்துவிட்டுச் செல்கிறோம். கவிஞர் பதிவு செய்துவிட்டுச் செல்கிறார். உண்மை தானே!

' பெண்களுக்கு பங்கு அரசியலில் வேண்டுமென்ற' தலைப்பில்

"நான் சமைக்க வேண்டுமா என்று கேட்காதீர்! நானும் சமைக்கிறேன் என்று பகிர்ந்து கொள்ளுங்கள்"!(ப.22)

" உயர் பதவியில் பெண் இருந்த போதும் உப்பிட்டே சமைக்க வேண்டும் இல்லத்தில்"
(ப.21 )
எதார்த்தத்தை தன் கவிதையில் வடித்துச் செல்கிறார் கவிஞர்.

"கற்புநிலை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்" என்றான் பாரதி.! இன்று எதார்த்த உலகில் சமையலறை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் கவிஞர்.
" ரத்தத்தில் ஊறிவிட்ட ஆணாதிக்கச் சிந்தனையை ரத்து செய்துவிட்டு மதியுங்கள் பெண்களை"!.(ப.24)

சாட்டையடி கவிதை இது.!பெரியாரின் பாசறையில் பயின்றவர் என்பதை சுட்டிச் செல்கிறது.

" நல்லதொரு வீணை" என்ற தலைப்பில்,

" ஆணை வரவேண்டும் பெண்ணை செலவென்றும் அறிவிலித் தனமாகப் பேசுவதை முதலில் நிறுத்துங்கள்"!.(ப.26)

ஆண் பெண் என்று பாகுபாடு காட்டுபவரை அறிவிலி என்று வசைப்பாடுகிறார் கவிஞர்.

திருநங்கைகள் பற்றி கவிதையில்,

" கேலியாகப் பேசாதீர்கள் தோழியாகப் பாருங்கள் (ப. 32)

" வாழ்க்கையில் போராட்டம் நமக்கு வாழ்க்கையே போராட்டம் திருநங்கைகள்"!. (ப. 33)

" வழி இல்லாத வாழ்க்கை! வலி மிகுந்த வாழ்க்கை "!.(ப. 30)


திருநங்கைகள் பற்றி உணர்வுப்பூர்வமாக ப்பதிவுகளைச் செய்திருக்கிறார் கவிஞர். நம்மைப் போன்று அவர்களும் ஒரு மனித உயிர் தானே என்பதை உணர்த்திச் செல்கிறார்.


சமுதாயத்தைப் பற்றிக் கூறும் பொழுது,

" தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று, தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று"(ப.39)

என்பதில் எது நன்று, எது நன்றன்று, என்பதை சமூகத்திற்கு அறிவுறுத்துகிறார்.

" அன்னதானம் சிறந்தது என்பார்கள் அனைத்திலும் சிறந்தது கண் தானம் என்பேன்" (ப.க் 43)

பார்வையற்றோருக்கு உணவிடுவததை விட உணவினைத் தேடும் ஒளியைக் கொடுத்தலே சிறந்தது என்பதை இட்டுச் செல்லவில்லை சுட்டிச் செல்கிறார் கவிஞர் .

'உடல் நலம் பற்றிய' கவிதையில், "நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல நீரின்றி அமையாது உடல் நலம் உணர்க" (ப. 47) என்கிறார்.

முயன்றால் முடியும் தலைப்பில் எறும்பு, சிலந்தி, தூக்கணாங்குருவி, பருந்து போன்றவற்றின் வாழ்வியல் உதாரணங்களை கவிதைகளில் எடுத்துரைக்கிறார்.
'வானமகள் நாணுகிறாள்' என்ற தலைப்பில்,

"மேகங்கள் ஓடி விளையாடும் மைதானம் வானம்"!(ப.53)

வானத்தைப் பற்றி எத்தனையோ கவிஞர்கள் பதிவிட்டு இருப்பார்கள் ஆனால் நம் கவிஞர் மேகங்கள் ஓடிவிளையாடும் மைதானம் என்கிறார்.

" ரசித்துப் பாருங்கள் கவலைகள் நீங்கும்! ரசனையோடு பாருங்கள் தகவல் தரும்"!(ப.53)

(ரசித்து- ரசனை) அந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு பொருள் எப்படி வேறுபடுகிறது என்று பாருங்கள் ரசித்துப் பாருங்கள் கவலைகள் நீங்கும் ரசனையோடு பாருங்கள் தகவல் தரும். "முகிலினங்கள் அலைகின்றனவே முகவரிகள் தொலைந்தனவோ" என்ற கவிப்பேரரசு இங்கு வந்து போகிறார்.

அப்பாவைப் பற்றி ஒரு கவிதை கவிஞரின் அளப்பரிய அன்பு அதில் தென்படுகிறது.

"திடீரென ஒரு நாள் அப்பா காணாமல் போனார்! திக்குத் தெரியாத காட்டில் விட்டது போலானேன்"!. (ப. 59)

"உடனிருந்த போதும் உணராத அன்பை உணர்த்தியது பிரிவின்போது"(ப.60)

அன்பினை சொல் இன்றி செயலில் உணர்த்துபவர்.
எப்பொழுதுமே அருகில் இருக்கும் பொழுது அப்பாவின் அருமை தெரியாது தொலைவில் இருக்கும் போது தான் அவரின் உன்னதம் புரியும். அப்பா கவிதை வாயிலாக அதை நமக்கு உணர்த்துகிறார் கவிஞர். ‌

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே' என்ற ந.முத்துக்குமாரின் முத்தான வரிகள் செவிகளில் ஒலிக்கின்றது.

'கலாம்' ஐயா பற்றிய கவிதையில்,

"பந்தா அறியாத பாசக்கார் கலாம்" (ப.63 )

"செயற்கை கோள்கள் ஏவியது மட்டுமன்று செயற்கை கால்களும் செய்து மகிழ்ந்தவர்"
(ப.74)

"ஆத்திகர்களின் புனித இடம் ராமேஸ்வரம் என்பர் நாத்திகர்களின் புனித இடமாக மாற்றியவர்"! (ப. 71)

அப்துல் கலாம் ஐயா அவர்கள் மேல் கவிஞர் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் கவிதைகள் வாயிலாக நமக்கு புலப்படுகின்றன. கலாம் ஐயா அவர்கள் கவிஞரின் கவிதைக்கு கைப்பட எழுதிய பாராட்டு கடிதத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருபவர் கவிஞர்.

நிறைவாகச் சொல்லப்போனால், இலக்கியங்களை அறிவு இலக்கியங்கள் ஆற்றல் இலக்கியங்கள் என இரண்டாகப் பிரிப்பர் ஆற்றல்இலக்கியங்கள், நெகிழ்வுத் தன்மையுடையது,உணர்வுகளை ஊட்டக் கூடியது, உணர்ச்சி வயப்பட்டது. அறிவு இலக்கியங்கள், நுட்பமானது, ஆராய்ந்து பார்க்கத்தக்கது, அறிவுபூர்வமானது.
"அப்பா அம்மா' அறிவு, ஆற்றல் இரண்டும் சேர்ந்தது.இக் கவிதைகள் சமூகம் சார்ந்து அறிவுப்பூர்வமான சிந்தனைகளையும் உணர்வுபூர்வமான சிந்தனைகளையும் ஒருங்கே எடுத்துரைக்கும் உன்னத படைப்பாகத் திகழ்கின்றது. சொல்லப்போனால், வாழ்வியல் நிகழ்வுகளை நாம் கடந்து செல்கிறோம். கவிஞர் நமக்கு கடத்திச் செல்கிறார்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (31-Oct-23, 10:12 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 49

மேலே