அறுமோ குளநெடிது கொண்டது நீர் - பழமொழி நானூறு 380
நேரிசை வெண்பா
பல்லாண்டு மீண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால் - வல்லே
வளநெடிது கொண்ட தறாஅ தறுமோ
குளநெடிது கொண்டது நீர். 380
- பழமொழி நானூறு
பொருளுரை:
மிகுந்த நீரைக் கொண்டதாகிய குளம் இறைத்தால் நீர் வற்றுதல் உண்டோ? இல்லை! அதுபோல், பல ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து குற்றமுடையதாய்க் கிடந்த பொருளை கொடைவல்லான் ஒருவன் செய்யும் நெறியறிந்து அதனை வறியோர்க்கு விரைந்து வழங்குமிடத்து செல்வத்தை மிகுதியாகக் கொண்ட அது கெடுதல் இல்லை!.
கருத்து:
ஈதலாற் செல்வம் குறைபடுதல் இல்லை.
விளக்கம்:
'பழுதாய்க் கிடந்தது' என்றது.செல்வம் தான் ஈயவும், துய்க்கவும் படுவதாயினும், அவை யில்லானிடத்துப் படுதலின், அவை யொழிந்து பழுதுபட்டு நிற்பதை குளநீர்போல அவன் செல்வம் குறைதலில்லை; மேன்மேலும் மிகுதியாம்.
'திறஞ் சேர்ந்தான் ஆக்கம்போல் திருத்தகும்' என்பதனானு மறிக.
'அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி.