கைவண்மை பூண்ட புரவலர் சீர்வரைய ஆகுமாம் செய்கை - பழமொழி நானூறு 381

நேரிசை வெண்பா

இரவலர் தம்வரிசை யென்பார் மடவார்
கரவலராய்க் கைவண்மை பூண்ட - புரவலர்
சீர்வரைய வாகுமாம் செய்கை சிறந்தனைத்தும்
நீர்வரைய வாநீர் மலர். 381

- பழமொழி நானூறு

பொருளுரை:

இரப்போர் நிலைக்குத் தக்க அளவினதாகக் கொடுப்பதே கொடை என்று சொல்கின்றவர்கள் மூடர்களே யாவார்கள்.

நீர்ப்பூவின் வளர்ச்சியும், உயரமும் நீரின் அளவினதாயிருக்கும்.

அதுபோல, கையிலுள்ளதை மறையாதவர்களாகிக் கைவண்மையையுடைய அரசர்கள் செய்யும் கொடைச் செயலும் மற்றும் சிறந்த எல்லாச் சிறப்புக்களும் அவ்வரசர்களின் செல்வச் சிறப்பின் அளவினதாயிருக்கும்.

கருத்து:

கொடுப்போன் தன்னிலை நோக்கி ஈக என்றது இது.

விளக்கம்:

நீரளவே ஆகும் நீராம்பல். அதுபோல, அரசர்களுடைய கொடை முதலியன அவ்வரசர்களின் செல்வச் சிறப்பின் அளவினதாயிருக்கும். ஆதலால், கொடை என்பது கொடுப்போர் அளவினதேயாம். இரண்டும் உவமைகளாய் வலியுறுத்தி நின்றன.

'நீர்வரைய வாம் நீர் மலர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-23, 8:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே