அம்மா வந்திருக்கிறாள்
அம்மா வந்திருக்கிறாள்
-----------------------------------------------
நவநீதாவை அழைத்திருந்தேன்
வழக்கம்போல வீட்டுக் காரியங்களை,
தோட்டக் காரியங்களைப் பேசி முடிச்சிட்டப் பிறகு அம்மா அன்று சொன்னது நினைவிற்கு வந்தது.
ரமேஷ் அண்ணாவிற்கு பணம் அனுப்பியாச்சா எனக் கேட்டேன்.
இதோ கொஞ்சம் முன்னாடிதான் போன்பே நம்பர் வாங்கி இருக்கேன்
அனுப்பிடறேங்க என்றாள் .
ரமேஷ் அண்ணன்
தாய் தந்தை வைத்தப் பெயர் ஸ்ரீனிவாசன். எனக்கு தாய் மாமன் மகன்.
போனமுறை பெரியம்மாவைப் பார்த்துவிட்டு அதிகநாட்கள் கழித்து அம்மா வந்திருந்தாள்.
வந்ததிலிருந்து அவள் முகம் ஏதோபோல் இருந்தது.
அவளிடம் அதைப்பற்றிக் கேட்பது அவளுக்குப் பிடிக்காது.
அப்பாவிற்கே அந்த உரிமையைக் கொடுத்துவைத்திருக்கிறாள்
அவளிடம் கேட்க அப்பாவும் இன்று இல்லையே.
சரி அவளாக சொல்லட்டுமே என அமைதித்திருந்தேன்.
எப்போதும் அவள் தான் எங்களுக்கு ஆணை பிறப்பிப்பாள்.
எதுவாகினும் அவள் வசமிருந்தே வரட்டுமே.
போனத் திருவிழாவிற்கு எல்லோரும் கிராமம் சென்று காப்புக் கட்டிவிட்டு இருந்த சமயம்தான் இதெல்லாம்
நடந்துகொண்டிருந்தன.
கோயில் பூஜாரிக்கு விதை நேர்ந்துவிட்ட இரவு அம்மா உறங்காமல் உழன்றுகொண்டிருந்தாள்.
நள்ளிரவில் படுக்கைப் புரள்விலிருந்து
எழுந்தவள் ஏதோபோல் பாவித்திருந்தாள்.
அவள் தடுமாற்றங்களை உற்று கவனிக்கிறேன் என்பது அவளிற்குத் தெரிந்திருக்கிறது.
என்னை அழைத்தாள்.
என்னம்மா என்று அருகி
அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கேட்கிறேன்.
சர்வம் அடக்கி விம்மத் தொடங்கியவளுக்கு மூச்சு முட்டிவிடும்போல் இருக்க
என் கைகளை குழந்தைபோல் பிடித்துக்கொண்டாள்.
சொல்லும்மா என்ன ஆச்சு என்றேன்.
இல்ல வருஷா வருஷம் பிறந்தவீடு
பக்கமிருந்து வரும் திருவிழா அழைப்பும்
புடவைக்காசும் வரலை. எல்லோரும்
இம்முறை போறாங்க என்னையும்
பெரியம்மாவையும் இவங்க அழைக்கலை ன்னு சொன்னாள்
இனியும் இதெல்லாம் வேணுமா ம்மா
இனியாவது அவங்களைப் பத்தி நினைக்காம . அந்த புடவையும் திருவிழாவும் வேணாம்னு விட்டிடலாம்தானே ம்மா .
உங்களுக்கு இங்க என்னக்குறை
ஆணையிட்டா செய்றதுக்கு
நாங்க இவ்ளோ பேரு இல்லையா,
இனி அந்த வீட்டுக்கும் ஊருக்கும்
உங்களுக்கும் என்னம்மா சம்மந்தமிருக்கு என்றேன்.
சொன்னா உனக்குப் புரியாதுடா விடு என்றாள்.
ஒருநாள் அம்மா அவள் ஊரில் ஒரு சாவிற்குப் போய்விட்டு ஊர்க்காரர்கள் வீடுகளில் தோழிமார்களைக் கண்டு பேசியதில் நேரம் போயிற்று. நல்ல மழை. இரவு எட்டரைமணிபோல் இருக்கும். கிராமம் என்பதால் திரும்பிவர பஸ் இல்லை.மழையில் தொப்பலாய் நனைந்திருக்கிறாள். பிறந்தவீட்டிற்குப் போனால் பாட்டியை
நினைவு கூர நிறைய இருக்கும்
என்றவள் அப்படியேச் சென்று அந்த வீட்டின் கதவுகளைத் தட்டினாள். அத்தை வந்து திறந்துவிட்டாள். இதே ரமேஷ் அண்ணன்தான் ஒரு டம்ளரில்
சூடாய் காப்பிக் கொண்டு வந்தான்.
காப்பி டம்ளரைக் கையில் கொடுக்கும் முன்பு. அம்மாவும் அண்ணனும்தான் இறந்துட்டாங்களே இனி தங்கறதுக்குன்னு இங்கெல்லாம்
வராதே என அத்தை மெதுவாய் சொல்லளானாள். கையிலிருந்த காப்பி டம்ளரை குடிக்காமல் போலும் அப்படியே
வைத்துவிட்டு அதே மழை இரவில்
கதவைத் திறந்து வெளியில் நடந்துகொண்டே போய் மறைவதை
ரமேஷ் அண்ணன் செய்வதறியாது
பார்த்துக்கொண்டே நின்றதை
பலக்காலம் கழித்து என்னிடம்
ஒருநாள் சொல்லியிருக்கிறான்
இதெல்லாமே நினைக்க நினைக்க ஏதோபோல் மனதும் தொண்டையும்
வற்றிக் கிடந்து அதுவருளும்.
அவ்வப்போது நினைக்காமலும் இருக்கமுடிவதில்லை.
இம்முறை அவள் பிறந்த ஊரிலிருந்து
ரமேஷ் அண்ணனும், ஊர்க்காரர்களும்
அழைத்திருந்தார்கள். ஊர்க்கோயிலை மறுகட்டமைக்க அந்த ஊரில் பிறந்த பெண்களுக்கு தலா 5000 ரூபாய் வீதம் வரி வித்திருக்கிறார்கள்.
என்னிடம் அழுதுக் கொண்டே கேட்கிறாள். அந்த ஊருக்கும் எனக்கும்
என்ன சம்மந்தமிருக்குன்னு கேட்டியே
அந்த ஊரில்தானே நான் பிறந்தேன்
அந்த மண்ணில்தானே வளர்ந்தேன்
என் வீட்டின் ஒவ்வொரு செங்கலையும்
தொட்டுத் தொட்டு இது என் வீடு என்று
உருகி உருகி என் நாட்களை நினைவில்
செதுக்கி உயிரை ஆதாரமாக்கி இருக்கிறேன். இதோ அழுகிறேன். என்னைப் பெற்றவர்களின் சவதாகமும்
அங்கேதானே நேர்ந்தது. இப்போ என்ன சொல்ற அங்கிருந்து என்னை மதிச்சி
வரி கேட்டிருக்காங்க.
செத்துட்டா பிறந்த வீட்டிலிருந்து அண்ணன் தம்பிகள் அவங்க இல்லேன்னா அவர்களுடைய பிள்ளைகள் என ஊர்க்காரர்களைக்
கூட்டிக்கொண்டு "கஞ்சைக்குக்கை எனும் கூடையில் பலகாரமும்,
"பண்ணபட்டை" எனும் அவள்
சவத்திற்கு போர்த்திவிடும்
புடவையும் அவர்கள் தானே கொண்டுவரணும் இல்லேன்னா
கட்டை வேகாதே. இவங்க வராமல்
போனாலும் பங்காளி மக்களாவது
ஊர்க்காரங்களோடு வருவாங்கதானே
என நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கேவிடும் காட்சியை ஏதோபோல் வியந்து பார்த்துக் கொண்டு நின்றேன்.
ஆனால் இன்றளவும் அவர் வழி வருடாந்திரம் திருவிழாவிற்கு வரும்
அழைப்பிற்காயும் ஒரு புடவைக்காயும்
காத்திருப்பாள் அம்மா.
விதி இன்றுதான் மூடிய கதவுகளைத் திறந்திருக்கிறது.
நான் நவநீதாவிடம் 25,000 அம்மா பேரில்
ரமேஷ் அண்ணனுக்கு போன் பே செய்திடு என்றுவிட்டு கைப்பேசி யிணைப்பினை துண்டிக்கிறேன்.
பைராகி