கடவுள் நம்பிக்கை
கடவுள் நம்பிக்கை
கடவுள் நம்பிக்கை உனக்கு இருக்கிறதா என்றால் “இருக்கிறது” என்பேன். ஆனால் அதே நேரத்தில் எது கடவுள் எனும் கேள்வியை கேட்கும்போது…!
கடவுள் நம்பிக்கை கொண்ட எல்லா மனிதர்களையும், “கடவுளே இல்லை” என்ற கோட்பாட்டை கொண்டவர்களுக்கும் உலகத்தில் வாழ வழி செய்து கொடுத்து கொண்டிருப்பது “இயற்கை” என்னும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாதது போல இருக்கும் பெரு வெளி அல்லது “காலம்”
உடனே கேள்வி எழும் அந்த இயற்கையை படைத்தவர் கடவுள்தானே? நன்றாக கவனியுங்கள் இந்த கேள்வி எழுவது இந்த பூமியில் வாழும் மனித இனங்களில் எல்லா மதத்தவர்களிடமிருந்தும் இந்த கேள்வி எழத்தான் செய்கிறது. அப்படியானால் அவரவர்கள் வழிபடும் கடவுளே இந்த இயற்கையை படைப்பதற்கு காரணமாக இருக்கிறார் என்பதாக நம்புகிறார்கள். அதே நேரத்தில் “கடவுள் இல்லை” என்பவர்கள் கூட இயற்கையை மீறிய சக்தி உலகில் இல்லை என்பதை ஒத்து கொள்கிறார்கள்.
பூமி அந்தரத்தில் சுழல்கிறது, அதனுள் பல லட்சம் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் எப்படி சாத்தியம்? ஏதோ கடவுளின் சக்தி இருப்பதால்தானே? இந்த கேள்வி கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து வருகிறது. கடவுள் இல்லை எனும் கோட்பாட்டை கொண்டவர்கள் இதற்கு அறிவியல்தான் காரணம், “ஈர்ப்பு” விசை மட்டுமே ஒன்றை ஒன்றை சுழல செய்து அதனதன் பாதையில் செல்கிறது என்று வாதிடுவார்கள்.
கடவுள் இருக்கிறார் என்பதற்கு அவரவர்கள் மதங்களிலிருந்து ஏராளமான இதிகாசங்களும், புராணங்களும் கதைகளும், ஏன் தெய்வங்களும் படைக்கப்பட்டு மனிதனால் வழிபடப்படுகிறது. இவைகளுக்கு அடிப்படை “நம்பிக்கை” என்னும் அடிப்படை தத்துவம்தான்.
‘உருவ வழிபாடு’ என்பது கூட எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவரவர்களுக்கு தகுந்த வடிவில் தங்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் கடவுளின் உருவங்கள் படைக்கப்பட்டு வழிபட்டு கொள்கிறார்கள். இத்தகைய நம்பிக்கைகள் மனிதர்கள் தோன்றி பல யுகங்கள் கழிந்து அதன் பின்னரே வந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் மனிதர்கள் இயற்கையைத்தான் வணங்கியிருக்க வேண்டும். காரணம் எந்த முகாந்திரமும் இல்லாமல் மழை, காற்று தீ, புயல், மின்னல், பெரு வெள்ளம் இவைகளை அவர்கள் எதிர் கொண்டிருக்க வேண்டும், அவைகளிடமிருந்து தப்பிக்க அவைகளையே வணங்குதலுக்குரியதாக ஆக்கியிருக்க வேண்டும்.
அதன் பின்னரே அவர்களுக்குள் ஒரு ஒழுங்குமுறை தோன்றி எப்படி இயற்கை இடர்களை சமாளித்து கொள்ள முடியும் என்பதனை கற்றிருக்க வேண்டும், அடுத்து சமைத்த உணவுகள், குடியிருக்க குகைகளை தவிர்த்து, இவர்களே குடிலை உருவாக்கி கொள்ளுதல் போன்றவைகளை பழக்கமாக்கி இருக்கவேண்டும். போகப்போக உழவு தொழிலையும், உணவு பயிர்களை கண்டறிந்து பயிர் செய்யவும் முயன்றிருக்க வேண்டும். அதன் பின்னர் “கால மாற்றங்களை” கணக்கிட்டு அதற்கேற்றவாறு பயிர் விதைக்கவும், அதன் ‘பயனை பெற’ இயற்கை துணை நிற்க வேண்டும் என்று வேண்டியிருக்க வேண்டும்.
மனிதன் இயற்கையின் போக்குகளை சரி வர சமாளித்து வாழ பழகியபின் அவைகளை தெய்வமாக கொண்டாட தேவைகள் குறைந்து போயிருக்க வேண்டும். (இன்றும் பழங்குடி மக்கள், மற்றும் உலகத்தின் ஒரு சில பகுதிகளில் மக்கள் இயற்கையைத்தான் வணங்கி கொண்டிருக்கிறார்கள்.) தங்களுக்கென்று கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், அதனை நெறிமுறைப்படுத்த தெய்வங்கள் தோன்றியிருக்க வேண்டும். (உலகத்தில் பல மதங்கள் பல தெய்வங்கள்)
சரி…மனிதர்களை விட்டு விடுவோம், மற்ற உயிரினங்களுக்கு வாருங்கள். அவைகள் மனிதனுக்கு முன் தோன்றியவைகள் கூட இருக்கின்றன. ( மனிதனே அதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்னும் கூற்றும் உண்டு ) அவைகளுக்கு இன்றளவும் கடவுள் என்பது இயற்கைதான். இயற்கைதான் அவைகளின் வாழ்க்கையின் சூழ்நிலைகளை தீர்மானிக்கிறது. உலகத்தில் மனித ஜீவராசிகளை விட மும்மடங்கு அதிகமானது மற்ற உயிரினங்கள். அவைகள் இன்றளவும் இயற்கைப்படியே பிறக்கின்றன, வாழ்கின்றன, மடிகின்றன. அவைகளுக்கு இயற்கையை வெல்லும் ஆற்றல் ஏற்படாவிட்டாலும், இயற்கையோடு ஒத்த வகையில் வாழ அறிவு வந்திருக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத ஒரு ஒட்டுண்ணி (பாக்டீரியா) கூட மனித அல்லது மற்ற விலங்குகள் உடலில் ஒட்டி தன்னை வளர்த்து கொள்ளும் பக்குவம் பெற்றிருக்கிறது. விலங்குகள், மற்ற உயிரினங்கள், ஏன் தாவரங்கள் எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழ இயற்கை வழி செய்து கொடுத்திருக்கிறது. பறவைகள் இயற்கைக்கு தகுந்தவாறு கூடுகளை கட்டி கொள்ளுதல், இனபெருக்கத்திற்காக நாடு விட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் செல்வது, இப்படிப்பட்ட செயல்களை எப்படி செய்கிறது? எந்த அறிவியல் கருவிகளையும் துணைக்கு அழைகாமல் “காற்றின் திசை” கால சூழ்நிலை, பருவ மாற்றங்கள்” இவைகளை தன் அறிவுக்கு ஏற்றவாறு அதோடு இணைந்து இந்த செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறது.
குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகள், மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் அதற்கு தக்கவாறு அதன் உடலமைப்பு மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி மனிதனை தவிர மற்ற உயிரினங்களுக்கு தெய்வம் என்பது இயற்கைதானே.
மழை இயற்கை கொடுக்க அது ஓடும் நதியாகி எல்லா உயிரினங்களும் அதை பருகி உயிர் வாழ இயற்கையே நதியாகி செல்கிறது. மற்ற உயிரினங்கள் யோசிக்காத செயலான அந்த நதியை தடுத்து அணையை அல்லது குளம் வெட்ட இப்படி ஏற்பாடுகளை மனிதன் ஏற்பாடு செய்து கொள்கிறான். இது இயற்கையை சமாளிக்க அல்லது தனக்கு உபயோகமாக்கி கொள்ளும் மனிதனின் சாமார்த்தியம் தானே..!
இப்படி இருக்கையில் அவன் தன்னுடடைய பழைய பரிமாணத்தின் படி அவைகளை தெய்வமாக்கி அவைகளுக்கு பெயரை உருவாக்கி வழிபடுகிறான். என்றாலும் அந்த நதியை வைத்துதான் மின்சாரம், வேளாண்மை, மற்றும் குடிநீர் போன்றவற்றின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான்.
மனிதன் இயற்கையை மீறி சில காரியங்களை செய்து கொண்டே இருந்தாலும், இயற்கை ஒரு சில நேரங்களில் பொறுமையை மீறி வெளிப்படுத்தத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் இயற்கையின் கோபத்தை தாங்க முடியாமல் வேதனைப்பட்டாலும், சில நாட்களில் அதை மறந்து மீண்டும் இயற்கையையே துன்புறுத்தலுக்கும், வழி மறித்தலுக்கும் உட்படுத்தி கொண்டுதான் இருக்கிறான்.
முடிவுரையாக கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? என்னும் கேள்விக்கு என்னால் ஆணித்தரமாக “இருக்கிறது” என்று சொல்ல முடிந்தாலும், அதற்கு சாட்சியாக நான் வழி படும் கடவுளாக உருவங்களை காட்ட முயல்கிறேன், அதற்கு உதாரணமாக அந்த கடவுள்களின் துணையால் எனக்கு ஏற்பட்ட இடர்கள் எங்கனம் போக்கப்பட்டது என்றும் உதாரணம் காட்டுகிறேன். என்னை போல பல மதத்தவர்கள் அவர்களின் கடவுள்களை காட்ட முற்படுகின்றனர். உதாரணங்களையும் காட்ட முற்படுகின்றனர். இதில் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் “எல்லாமே அறிவியல்” கோட்பாடுகள் என்று குறிப்பிட்டு காட்டுகின்றனர். என்றாலும், அதற்கும் முன்னால்..அதாவது மனித உயிர்கள் தோன்றாத காலத்திலிருந்து எனும் கேள்வியை வைக்கும்போது..!
இது இன்னும் “கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா என்னும் கேள்விதான் விளைகிறது.