இன்னிசை இருநூறு - வாழ்த்து 9

இன்னிசை வெண்பா

சிந்தித்து வாழ்த்துதூஉஞ் சிந்தித்து வாழ்த்துதூஉ
நந்தா வறத்தை யிறைவனை நாடுயிர்க்கு
முந்துறத் தன்னையு மேனைய மூன்றையும்
தந்தே துணையா தலான். 9

நந்தா – அழியாத, மூன்று – பொருள், இன்பம், வீடு

தெளிவுரை:

அழியாத அறத்தினை சிந்தனை செய்து, அதனால் வாழ்த்துகிறோம். இறைவனைத் தேடி அடைய முயலும் உயிர்களுக்கு முதலில் தன்னைக் கொடுத்தும், பிறகு பொருள், இன்பம், வீடென்னும் மூன்றையும் கொடுப்பதற்குத் துணையாயிருக்கும் அழிவில்லாத அறத்தினை, சிந்தித்தவனாய்ப் போற்றி வாழ்த்துகிறோம் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

இவ்விடத்தில் பரிமேலழகரின் உரைப் பகுதிகளிலிருந்து சிலவற்றைத் தெரிந்து நினைவு கூறுதல் நல்லதெனச் சொல்ல விழைகிறேன்:

அதன்படி, அறமாவது, அற நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழி்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற்கான பயனுடையன; ஒழுக்கம்போல மக்கள் உயிர்க்கு உறுதி பயக்கும் சிறப்புடையன அல்ல; அன்றியும், அவைதாம் நூலானே அன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுபவை;

ஆகையால், அவற்றை ஒழித்து, இங்கு தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடை ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்ட்து.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது 08 கடவுள் வாழ்த்து,

என்ற குறளுக்கான விளக்கத்தில் ‘பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்று குறிப்பிடுவதையும் ஞாபகத்தில் கொள்வோம்.

மேலும் மற்றோரிட்த்தில் தத்தமக்கு இயலும் வகையில் அறம் ஆகிய நல்வினையை இடைவிடாது அஃது இயலக்கூடிய இடத்திலெல்லாம் செய்க என்கிறார்.

இயலுந்திறம் என்பது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல் என்றும், எய்தும் இடம் எனக் கொள்ளப்படுபவை மனம், வாக்கு, காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் ஆகும். இதனால், அறஞ்செய்யும் வழிவகைகள் கூறப்பட்டது என்றும் சொல்வார்.

இவற்றையெல்லாம் சிந்தித்தே இப்பாடல் ஆசிரியர், அறத்தைப் போற்றுகின்றார் என்று கொள்ளவும் வேண்டும்.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த ஒன்பதாம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (17-Nov-23, 12:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே