குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.
அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;
அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு
முன்னிலை யாக்கல்.
மெய்தொட்டுப் பயிறல்.
(இ-ள்) தலைவன் தலைவி சரீரத்தின் ஓருறுப்பைத் தீண்டிப் பழகுதல்; அஃதாவது: கூந்தலிலுள்ள வண்டுகளை யோட்டுதல் போலத் தோளைத் தொட்டுரையாடல்.
கட்டளைக் கலித்துறை
கோடாத நீதிச்செங் கோலான் குலோத்துங்கன் கோழிமின்னார்
தோடார் மலர்க்குழல் சூழ்வண்டு காடுய்ய பாட(ல்)செய்தும்
பீடார்பொற் றாமரைச் சங்கமுற் றும்பெருங் காவியங்க
ளூடா டியுமிவர் நூலைய மேது முணர்ந்திலிரே! 8

