என்னுயிரென்பேன் கண்டீர்

#என்னுயிரென்பேன் கண்டீர்..!

திருப்பதி லட்டும் தோற்குமடி
தேந்தமிழ் மொழியின் முன்னாலே
விருப்புகள் அற்றோர் ஆர்தான்சொல்
வேண்டிப் பெறுவார் பொன்போலே..!

இரசகுல் லாவினை சுவைப்பதுபோல்
இரசித் திருப்பார் இனியதமிழ்
வரவினை யளிக்கும்
கைத்தொட்டால்
வகைவகை பண்ணாய்
வலியதமிழ்..!

கம்பன் களித்தான்
காப்பியத்தில்
கனிரச மளித்தான்
கைப்பதத்தில்
கொம்பன் தமிழுக்கு
அவனானான்
கூறியே மகிழ்வார்
பல்விதத்தில்..!

சிலம்பைச் செப்பும்
சிங்காரி
செந்தமிழ் அவளாம் கைகாரி
வலமே வருமவள் அலங்காரி
வையம் போற்றும்
பேர்க்காரி..!

வள்ளுவன் அவனின் கைப்பிடித்தாள்
வரைந்தாள் குறளினை
வடிவழகி
வள்ளுவன் இன்னும் வாழ்கின்றான்
தெள்ளுத் தமிழாள்
கைத்தழுவி..!

எங்கும் தமிழ்மகள்
நடனந்தான்
எழில்மகள் அவளுக் கிணையுண்டா
தங்கம் மங்கும் அவள்முன்பாய்
தைரியம் தானவள்
துணைகொண்டால்..!

பத்தரை மாற்றுத் தங்கந்தான்
படித்தார்த் தமக்குப்
பலன்தருவாள்
வித்தக ராக்கும் வேதமவள்
விரைவாய்த் தொழுநீ இனித்திருநாள்..,!

தொட்டவர்க் கெல்லாம்
மரணமில்லை
தொழுதோர்க் கெல்லாம் இன்பநிலை
எட்டுத் திக்கும் புகழோடு
இறந்தும் வைப்பாள்
வாழும்நிலை..!

பாரதி யுடனே பாவேந்தர்
பைந்தமி ழாளைச் சுமந்தவர்தாம்
தேரது வாகிச் சுமக்கின்றாள்
தம்மைச் சுமந்தார் தம்மைத்தான்..!

வாழ்ந்திட வைப்பாள்
தமிழன்னை
வையத்தில் என்றும் இதுஉண்மை
தோழமை கொள்வாய் தமிழிடத்தில்
தோற்கட்டும் மரணம் நம்மிடத்தில்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (27-Jun-24, 4:13 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 619

மேலே