கடைசி பயணம்

கடைசி பயணம்
உறவுக்காரர் தூரத்து சொந்தம் வகையில் மாமா ஆக வேண்டும், எங்கள் காலனியில் சற்று தள்ளி இருக்கிறார். அவரது வயது எழுபது இருக்கும், விடியற் காலையில் இறந்து விட்டதாக வேலைக்கு கிளம்பும்போது செய்தி கிடைத்தது.
சரி எப்படியும் மதியமாகிவிடும் எடுப்பதற்கு என்னும் நம்பிக்கையில் வேலைக்கு சென்று விட்டேன். அங்கு போய் மதியம் வரை வேலை செய்து விட்டு எங்கள் சூப்ரவைசரிடம் மதியம் மேல் விடுமுறை கேட்டு விட்டு, உறவுக்காரரிடம் போன் போட்டேன் பாடிய எடுத்தாச்சா? அவர் இல்லை என்று சொல்லவும், வீட்டுக்கு வந்து உடை மாற்றி அவர் வீட்டுக்கு சென்றேன். இரண்டு மூன்று தெருக்கள் தள்ளித்தான் அவரது வீடு.
வீட்டிற்கு போகும்போது உடம்பை வெளியில் கிடத்தி சடங்குகள் செய்து கொண்டிருந்தார்கள். சரியான சமயத்திற்கு வந்து விட்டதாக மனதுக்குள் பாராட்டிக் கொண்டு அவர்களுடன் “கிரிமிட்டோரியம்” செல்ல காத்திருந்தேன்.
இது உண்மையில் உடல்களை எரிக்கும் இடமா? என்று கேட்கும் அளவுக்கு அந்த இடம் முழுவதும் சுத்தமாகவும், சுற்றி வர பூங்காக்களும் அமைக்கப்படிருந்தது.
உள்ளே ஒரு உடல் தகனமாகி கொண்டிருந்தது. அடுத்து இவரது உடல் தயாராக வைக்கபட்டிருந்தது. சுற்றி வர நாங்கள் நின்று கொண்டிருந்தோம். நிற்க முடியாதவர்கள் பூங்கா பக்கம் சென்று அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர்.
அப்பொழுது பெரும் ஊர்வலத்துடன் ஒரு உடல் கொண்டு வரப்பட்டது.
அவர்களின் ஆட்டம் பாட்டம் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க, முன்னால் வந்த நான்கைந்து பேர்களில் என் மானேஜரும் இருப்பதை கண்டதும் திகைத்து போனேன்.
இப்பொழுது பெரும் கேள்வி எழுந்தது, காத்திருக்கும் உடலை விட்டு விட்டு அவரிடம் போய் விசாரிக்கலாமா? அப்படி விசாரிக்க போனால் அருகில் இருக்கும் மாமாவின் வாரிசுகள் நம்மை பற்றி என்ன நினைக்கும்?
அதே நேரத்தில் மானேஜரும் என்னை நன்றாக உற்று பார்ப்பது தெரிந்தது, என்ன செய்யலாம்? நான் கம்பெனியில் நிரந்தரமாக இருக்க வேண்டு மென்றால் அந்த ஆளின் கருணை கடாட்சம் தேவை. அதனால் உடலை நெளித்தேன்.
அரவம் காட்டாமல் மெல்ல மெல்ல கூட்டத்தை விட்டு நகர்ந்து அவர் அருகில் சென்றேன். அப்பொழுதுதான் என்னை பார்ப்பது போல பார்த்தார். மனதுக்குள் “எமகாதகன்” எப்படியும் பார்த்திருப்பான், நடிக்கிறான் மனதுக்குள் நினைத்து கொண்டாலும் மெல்ல முகத்தை வருத்தப்படுவது போல வைத்து எப்ப ஆச்சு சார்?
இன்னைக்கு காலையிலதான்.
இறந்தது யார் என்று எப்படி கேட்பது?
தயங்கியபடியே வயசு எவ்வளவு ஆச்சு சார்?
எண்பது இருக்கும், சொன்னாலும், யார் என்பதை சொல்லமாட்டேன் என்கிறாரே?
மணி, அடுத்து எரிக்க போறது உனக்கு உறவா?
தலையாட்டினேன்.
இல்லை, உன் “டைமத்தான்” நான் கேட்டேன், ஏற்கனவே “புக்” ஆயிடுச்சுன்னுட்டாங்க, எல்லாரும் முடிச்சுட்டு கிளம்பனும், பாவம் சென்னை, பெங்களூர்ல இருந்தெல்லாம் வந்திருக்காங்க
என்ன சொல்ல வருகிறார்? மனதுக்குள் கேள்வி எழுந்தாலும், அவங்களே “டைம்” எல்லாம் புக் பண்ணிட்டாங்க சார்.
அப்படியா..இழுத்தார், நீ சொன்னா….?
சார்..அந்தளவுக்கு எனக்கு நெருக்கம் கிடையாது சார்,
சரி..இழுத்ததில் ஏமாற்றம் தெரிந்தது.
அதற்குள் என் உறவுகளிடம் பரபரப்பு தெரிந்தது, நான் சட்டென அங்கிருந்து அவர்கள் இருக்குமிடம் சென்று உடலை தூக்கி தகனமேடையில் வைக்க சென்று விட்டேன்.
மாமாவின் உடம்பை உள்ளே தள்ளி அது எரிய ஆரம்பித்ததும், ஒவ்வொருவராக வெளியே நகர்ந்தோம். எனக்கு ஒரே குழப்பம், மானேஜரிடம் நிற்பதா அல்லது நகர்ந்து சென்று விடுவதா என்று.
இருந்தாலும் மானேஜர் மனதில் வைத்திருப்பார், இந்த நிகழ்ச்சியை என்று நினைத்து கொண்டவன் மெல்ல மெல்ல நகர்ந்தபடியே காம்பவுண்டுக்கு வெளியே வந்தேன்.
அதற்குள் எப்பொழுது கருப்பு? என்று ஒருவர் அறிவிக்க, அதை கேட்க கூட நான் உள்ளே செல்லவில்லை.
வண்டி நிற்குமிடம் வந்து வண்டியை எடுத்து அந்த இடத்தை விட்டு வந்த பின் கொஞ்சம் நிம்மதி வந்தது.
சுடுகாட்டில் எல்லாம் சமம் என்றுதான் சொல்கிறார்கள், அது செத்தவனுக்கு வேண்டுமானால் இருக்கலாம், உயிரோடு இருப்பவர்களுக்கு இந்த இடம் கூட இடைஞ்சல்கள்தான் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Aug-24, 2:32 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kadasi payanam
பார்வை : 68

மேலே