கோபம்

கோபம்

எதிரில் நின்று கொண்டிருக்கும் மகனை பார்த்தார் சோமய்யன். இப்பொழுது அவன் “சரிங்கப்பா சரிங்கப்பா” என்று தலையாட்டி கொண்டிருந்த மகனாக நிற்பதாக தெரியவில்லை. ஒரு எதிரியை நேருக்கு நேராக சந்திப்பது போல் நின்றிருந்தான். கண்கள் சிவந்து அவரை உறுத்து நோக்கியபடி அவரை விட ஒரு சாண் அளவு உயரமாக இருந்ததால் அப்படி நிற்பது இவரை மிரட்டுவது போல் இவரை மிரட்டுவது போல் இருந்தது.
ஒரு நிமிடம் திகைத்துதான் போனார் சோமய்யன். இதுவரை அதுவும் நேற்று வரை அவர் எது சொன்னாலும் கேட்டு முணங்கியபடியாவது தலையாட்டி சென்று கொண்டிருந்தவன். இன்று அவர் எதிரில் சண்டைக்கு நேருக்கு நேராய் நிற்கிறான்.
அருகில் நின்றிருந்த அவர் மனைவி சாவித்திரிக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நிலைமையை சரியாக்க, அவள் மெல்ல முயற்சித்தாள் “டேய் கோவாலு” இதென்ன அப்பாகிட்ட இப்படி நேருக்கு நேரா வம்பு கட்டிட்டு நிக்கறே” அவன் தோளை தொட்டு அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தாள்.
சட்டென “தோளை குலுக்கி” அவளின் கையை உதற வைத்தான். அந்த உதறலில் அவன் கோபத்தின் வலுவை சாவித்திரி புரிந்து கொண்டாள். பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பதில் அடியெடுத்து வைத்திருக்கிறான். முன்னைப்போல அம்மா கூட அவனை தொட்டு, அடித்து மிரட்ட முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவது போல இருந்தது அந்த தோளின் குலுக்கல்.
சோமய்யனுக்கும் நிலைமை புரிந்து போனது. இவன் பழைய கோவாலு இல்லை. வயதின் வீரியமும், முன் கோபமும் பொங்கி வரும் பருவம். ஏன் இவர் கூட இந்த வயதில் இப்படித்தான் இருந்ததாக ஞாபகம். அதே நிலைமையில் இன்று தன் மகன் கோவாலு இவர் எதிரில் நிற்கிறான்.
இப்பொழுது என்ன செய்வது? சிந்தித்த அவர் மனம் சட்டென “தோல்வியை” ஏற்று கொள்ளும் பக்குவமாய் அங்கிருந்து தலையை தாழ்த்தியபடி நகர்ந்தார். இருந்தாலும் அவர் மனது கறுவியது. ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராய் இருக்கும் அவரை கண்டால் பள்ளி கூட மாணவ மணிகள் ஒதுங்கி பயந்து தயங்கி செல்வார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளை பார்த்து, பார்த்து, அவர் மனம் அதே நிலைமையில் தன் மகனையும் வைத்து இருந்தது. ஆனால் இன்று…!
கல்லூரியில் நுழைந்து முதல் வருடம் படித்து கொண்டிருக்கும் பையன் .இரண்டு மூன்று முறை தெருவில் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி ஆளில்லாத பழைய காம்பவுண்டு சுவரின் மீது உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தபடியே கடந்து போய்க்கொண்டிருந்தவர், மாலையில் பள்ளியில் இருந்து அதே போல் வரும்போது பார்த்து விட்டு “இன்று அவனிடம் கடுமையாக் நடந்து கொள்ளவேண்டும். இது போல “தெருவில்” இருக்க வேண்டாம் என்று வற்புறுத்த நினைத்தார். இரவு ஏழு மணிக்கு மேலிருக்கலாம், வீட்டிற்குள் நுழைந்தவனை அதிகாரமாய் அழைத்தார்.
“டேய் கோவாலு” முடிந்தவரை குரலை கடுமையாக்கி கொண்டு தான் அழைத்தார். பொதுவாகவே அம்மாவை விட அவன் மீது அதிகமான செல்லம் அவருக்கு, கடுமையான வார்த்தைகளோ, கோபமாகவோ அவனிடம் இதுவரை காட்டியதில்லை. இன்று “அப்பா கோபமாக இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக குரலில் கடுமை காட்டி அப்படி அழைத்தார்.
ஆனால் கோவாலு என்ன மன நிலையில் உள்ளே வந்திருக்கிறான் என்பதை கவனிக்க தவறிவிட்டாரோ என்னவோ.! அல்லது எப்பொழுதும் உள்ளே வருபவன் அவர் முன்னறையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தால் அமைதியாக ஒதுங்கி சென்று விடுபவன், இன்று ஏன் இப்படி?
அவரின் குரலை கேட்டவுடன் தலையை நிமிர்த்தி நேராக அவரை பார்த்தவன் வேகமாக அருகில் வந்தான். அவன் வரும் வேகத்தை கண்டே இவருக்கு மனம் ஒரு நிமிடம் துணுக்குற்றது. இருந்தும் ஐம்பது வயதின் அனுபவம் அவரை மிரள செய்யாமல் அவனை நிமிர்ந்து பார்த்து “ஏண்டா இப்படி எங்க பார்த்தாலும் ரோட்டுல நின்னுகிட்டிருக்கே, அதுவும் நாலஞ்சு காலி பசங்களோட.
“காலி பசங்கன்னு” உஙகளுக்கு தெரியுமா? நீங்க பாட்டுக்கு வார்த்தைய விடறீங்க?
அவன் இப்படி கேட்பான் என்று எதிர்பார்க்காததால் விதிர்விதித்து போனார்.
ஏண்டா இவனுங்களை பார்த்தாவே தெரியலை, சரி அவங்களை விடு, நீ எதுக்கு அவங்களோட சுத்திகிட்டிருக்கே?
முதல்ல மனுசங்களை எடை போட்டு பேசுங்க, அப்புறமா இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேளுங்க, வார்த்தைகளில் கோபமும் கண்களில் சிவப்பும் படர்ந்தன.
இதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்த சாவித்திரி தன் கணவன் முன்னால் மகன் சண்டை சேவலாக நிற்பதை பார்த்து அதிர்ந்து போனாள். எப்பொழுதும் சாந்தமான முகமும், அமைதியான சுபாவமும் கொண்டிருந்தவனாக அவனை பார்த்திருக்கிறாள். ஆனால் இன்று அப்பாவுடன் நேருக்கு நேராக..
அவனை விட்டு நகர்ந்து வந்திருந்தாலும் சோமய்யனின் மனம் ஆறவே இல்லை, நாம் பெற்றெடுத்து குழந்தையில் இருந்து வளர்த்து வந்த மகன் இப்பொழுது தன் எதிரே நின்றபடி சண்டைக்கு நிற்கிறான். கொஞ்சம் தாமதித்தாலும் கை வைக்கும் அளவுக்கு நின்று கொண்டிருக்கிறான். நாமும் அவனுக்கு அடங்கி போய் இப்படி கோழையாய் வந்திருக்கிறோம். நினைக்க நினைக்க, அவனை விரோதியாகவே பார்த்து அங்கேயே அவனை புரட்டி எடுத்திருக்கவேண்டும் என்று ஆங்காரமாய் நினைக்க ஆரம்பித்தது.
ஆனால் சட்டென்று ஒரு மனம் அவரை கடிந்து கொண்டது. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நீ பெற்ற பையன் தானே, பாவம் அவன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்று தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்தவனை இப்படியா அழைப்பது? ஒரு வேளை நல்ல பசியில் வந்திருக்கலாம், மதியம் சாப்பிடாமல் பசியில் உள்ளே வந்தவனிடம் தான் நடந்து கொண்டது நியாயமா?
அப்படி என்ன தவறு செய்தோம்? காலி பசங்களோட உனக்கென்ன சகவாசம்? இப்படித்தானே கேட்டோம், அவர்கள் நல்ல பிள்ளைகள்தான் இவன் எடுத்து சொல்லியிருக்கலாம், அதற்கு எதிர்த்து கேள்வி கேட்கிறான்.
இப்படி மன ஆறாட்டத்தால் மனம் தவிக்க, மீண்டும் உள்ளறைக்குள் நுழைய தயங்கியவர், மன போராட்டத்தை கட்டுப்படுத்த “ஹேங்கரில்” தொங்க வைத்திருந்த சட்டையை எடுத்து போட்டு கொண்டு, வேகமாக செருப்பை மாட்டியபடியே தெருவில் இறங்கினார்.
சாவித்திரிக்கு தன் கணவனின் மன நிலை புரிந்துதான் இருந்தது. இப்பொழுது அவர் எதிரில் போய் சங்கடப்படுத்த கூடாது என்னும் நினைப்பு ஒரு புறம் அதே நேரம் எப்பொழுதும் அமைதியாய் இருக்கும்” கோவாலு” திடீரென இப்படி நடந்து கொண்டானே என்னும் பதைபதைப்பு ஒரு புறம்.
இவர்கள் இருவரின் நிலை இப்படியிருக்க, தன் தகப்பன் அங்கிருந்து விலகி சென்ற பின்பும் ஐந்து நிமிடம் அப்படியே நின்றவன் மெளனமாய் பாத்ரூம் பக்கம் சென்று தம் முகத்தில் தண்ணீரை வாரி வாரி அடித்து கொண்டான். மனம் ஒரு விதமாய் அமைதியானது போல் இருந்தது. உடம்பு களைப்பாய் இருப்பதாய் பட்டது. பசியும் எட்டி பார்த்தது. சமையலறைக்குள் எட்டி பார்த்தான். அம்மா அங்கில்லை. உள்ளே நுழைந்தவன் பாத்திரஙகள் ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தான். சாப்பாடும் குழம்பும் தென்பட, தட்டு ஒன்றை எடுத்து வைத்து சாப்பாட்டையும் குழம்பையும் போட்டு கொண்டு முன்னறைக்கு வந்து தொலைகாட்சி பெட்டியை இயக்கி எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டபடியே தொலைகாட்ட்சியை பார்க்க ஆரம்பித்தான்.
தொலைகாட்சியில் “அது ஒரு நாடகாமாயிருக்க வேண்டும்”, கல்லூரிக்குள் ஒரு பெண் நுழைய வகுப்புக்குள் உட்கார்ந்திருந்த மாணவர்கள் “ஹோவென” கூச்சலிடுபதாய் காட்டி இருந்தார்கள், இதை பார்த்த இவன் மனம் இரண்டு மூன்று நாள் முன்பு நடந்த நிகழ்ச்சியை நினைத்து கொதிக்க ஆரம்பித்தது.
அன்று சாமினா இதே போல் வகுப்புக்குள் நுழையும் போது இவனுக்கு முன்னால் பெஞ்சில் உட்கார்ந்திருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். அவள் கூட அதை சாதாரணமாக எடுத்து அவர்களுக்கு “ஹாய்” கை ஆட்டியபடி சென்று அவளது இடத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
பின்னால் உட்கார்ந்திருந்த இவனுக்கு அந்த பையன்கள் மேல் கோபம் கோபமாக வந்தது. “சாமினா” இவன் தெருவுக்கு அடுத்த தெருவில் இருந்து வருபவள். ஸ்கூட்டி வைத்திருக்கிறாள். பள்ளியில் கூட இவனுடன் படித்தவள்தான். அப்பொழுது இவளை பெரிதாக கண்டு கொள்ளாதவன் இப்பொழுது ஏனோ அவள் மீது ஒரு வித பிரேமையில் விழ ஆரம்பித்திருந்தான்.
அந்த பையன்களை இவன் ஒருவனால் சமாளிக்க முடியாது, அதனால் இவன் வயதை ஒத்த தெரு பையன்களுடன் மெல்ல மெல்ல பேசி வகுப்பில் சாமினாவை கலாட்டா செய்தவங்களை “கவனிக்க” நினைத்து அவர்களுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டிருந்தான்.
அப்பா அவர்களை “காலி பசங்கள்’ என்று சொன்னவுடன் எப்படித்தான் இப்படி ஒரு கோபம் அவனுக்குள் எழுந்ததோ? அதற்கு மேல் சாப்பாடு இறங்கவில்லை, எழுந்தவன் தொலைகாட்சியை அணைத்து விட்டு சாப்பிட்ட தட்டை கழுவுமிடம் கொண்டு போய் போட்டுவிட்டு வந்தவன் நேராக தனது படுக்கையில் போய் படுத்து கொண்டான்.
இவனது செயல்களை பார்த்துக்கொண்டேதான் இருந்தாள் சாவித்திரி, தனது மகன் தான் என்றாலும் அவன் தன் கணவனை எதிர்த்து நின்றது மனதுக்கு ஒவ்வாதாதாக இருந்தது.
செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே சென்ற சோமய்யன் எங்கு செல்வது என்று தெரியாமல் நடந்து கொண்டே இருந்தார். கடைசியாக அவர் கால்கள் கொண்டு போய் சேர்ந்த இடம் நூலகம், கடைசி தெருவில் இருந்தது. அதுவும் எட்டு மணிக்கு நூலகத்தை மூடும் முனைப்பில் இருந்தார்.
“வாங்க வாத்தியார் சார்” என்ன இந்த நேரத்துல? அதுவும் மூடும் போது..!
ஒண்ணுமில்லை, சும்மாத்தான், இழுத்தார்
ஏதாவது படிக்கறீங்களா?
இல்லை சார் நீங்க பூட்டுங்க, நூலகருடன் ஒரு இளைஞனும் கூடமாட உதவி செய்து கொண்டிருந்தான்.
இந்த பையனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே..? மனதுக்குள் எண்ணியவர் சட்டென தன் பையனுடன் தெருவில் பார்த்த பையண்களில் இவனும் ஒருவன் அல்லவா?
மூவரும் திரும்பி நடந்தபடி இருக்க அந்த இளைஞன் தயக்கத்துடன் சார்… நீங்க கோபாலோட அப்பாதானே..
ஆமாப்பா,
அவன் கூட பத்தாவது வரைக்கும் படிச்சேன் சார், வீட்டுல கஷ்டம் சார், அதோட படிக்கறதை விட்டுட்டு ‘வெல்டிங்’ கத்துகிட்டு அந்த வேலைக்கு போயிட்டேன் சார். இருந்தாலும் சாயங்காலம் நேரம் கிடைக்கறபோது இங்க வந்து சாரு நல்ல நல்ல புத்தகம் எடுத்து படிக்க கொடுப்பாரு, படிச்சுட்டு அவரோடவே கிளம்பிடுவேன்.
இந்த பையனையுமா நான் “காலிப்பையன்” லிஸ்டில் சேர்த்து கொண்டோம், மனதுக்குள் நெருடல்.
ரொம்ப நல்லது தம்பி, உன்னைய பாராட்டறேன். தன் பையனால் ஏற்பட்டிருந்த மன கோபம் சற்று குறைந்தது போலிருந்தது.
வீட்டிற்கு வரும்போது வாசலிலேயே சாவித்திரி காத்திருந்தாள். கணவன் கோபத்தில் சென்றிருக்கிறானே என்னும் கவலை வேறு.
ஆனால் வீட்டிற்குள் நுழையும்போது சோமய்யனின் மனம் சாந்தமாயிருந்தது. தன் மகனுடன் சுற்றும் தெரு பையன்கள் ஓரிருவர் தவிர மற்ற பையன்கள் “ஏதோவொரு வேலையில்” இருந்தார்கள். அந்த நிம்மதியே அவருக்கு தான் மகனிடம் அப்படி கேட்டது தவறோ என்று நினைக்க வைத்திருந்தது.
உறங்க சென்ற கோவாலுவுக்கு தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வந்து விடவில்லை, அவனது கோபம் நியாயமா? அதுவும் தன்னை பாசமுடன் கவனித்து வளர்த்த் கொண்டிருக்கும் அப்பாவுடன், இப்படி என்றைக்காவது பேசி சண்டைக்கு போயிருக்கிறோமா? நினைக்க நினைக்க மனசு வலிக்க ஆரம்பித்திருந்தது.
காலையில் அப்பாவின் முகத்தை பார்க்க, அவரது முகம் கோபமாக இருப்பதாக தெரியவில்லை, இருந்தாலும் எப்படி அவரிடம் போய் பேசுவது தயக்கம். இந்த இழுபறியிலேயே அவரவர்கள் அவரவர் பணிக்கு கிளம்பி சென்றனர்.
மதியம் வகுப்பில் நண்பர்களுடன் சாப்பிட உட்கார்ந்திருந்தான். டிபன் பாக்சை பிரிக்கும் போதே அம்மாவின் முகம் ஞாபகம் வந்தது. காலையில் இருந்து அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அப்பாவும் பேசவில்லை, மனசு சங்கடப்பட்டது. நேற்று நாம் நடந்து கொண்ட முறை சரிதானா? அவனுள் எழுந்த கேள்வி. யாரோ தோளை தொட திரும்பி பார்த்தான் முன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் மூவரில் ஒருவன்.
“ஏன்ன மாப்பிள்ளை முகம் ரொம்ப டல்லா இருக்கு” ஏதாவது பிரச்சினையா? சொல்லு மாப்பிள்ளை தீர்த்து வச்சுடலாம், அதுக்காக சாப்ப்பிட உட்கார்ந்துட்டு இப்படி யோசனை பண்ணிட்டிருக்க கூடாது.
கோபாலுக்கு வெட்கமாகி விட்டது, “ஸாரி தோஸ்த்” நேத்து அப்பாகிட்ட கொஞ்சம் சண்டை போடற மாதிரி பேசிட்டேன், அதனால அம்மாவுக்கும், அப்பாவுக்கும் என் மேல வருத்தம், இருந்தாலும் காலையில எந்திரிச்சு அப்பா கடைக்கு போய் எனக்கு பிடிக்கும்னு உருளைகிழங்கு வாங்கிட்டு வந்திருக்காரு, அம்மா பாரு பக்குவமா செஞ்சி அடுக்கி வச்சு கொடுத்திருக்கா, இதை பாத்த உடனே மனசு கஷ்டமாயிடுச்சு.
விடு மாப்பிள்ளை, நமக்கு “அப்பா அம்மான்னாலே” தொந்தரவுதான், அதே நேரம் அவங்க இல்லையின்னா நாம இல்லைங்கறதும் நிசம்தான். கவலை விடு,சாயங்காலம் போய் “ஏக்சிகியூஸ் கேட்டுடு” வேணும்னா நாங்களும் வர்றோம்.
ரொம்ப நன்றி தோஸ்த், நானே பார்த்துக்கிடறேன். மனம் நிர்மலமாகி இருந்தது. சாமினா நினைவில் இருந்து சற்று தள்ளி போயிருந்தாள். அதே நேரம் இந்த பையன்கள் மனதுக்கு நெருக்கமாகி இருந்தார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Aug-24, 10:43 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kopam
பார்வை : 78

மேலே