பாரதி
முண்டாசு கவியழகே,
முறுக்கு மீசை பாரதியே-
முத்தமிழின் சொல்லெடுத்து
மூச்சாக வாழ்ந்தாயே!
வீர சுதந்திரம் வேண்டும் என்று முழங்கிய பாரதியே - இன்று வந்த சுதந்திரம் வழி மாறி போவதை வேடிக்கை பார்ப்பீரோ?
தாயின் மணிக்கொடி பறப்பதை பார்க்க விரும்பிய பாரதியே - இன்று கொடியினை ஏற்றவே படையுடன் வருவதை சுதந்திரம் என்பீரோ?
அடிமை வாழ்வே வேண்டாம் என்று பாடிய பாரதியே - இன்று
தேசத்தின் பெருமையை நீசர்கள் விற்பதை வாடிக்கை என்பீரோ?
காசியில் புலவர் பேசும் உரை கேட்க கருவி தான் கேட்டீரே - இன்று
வாட்ஸ்அப் ஈமோ பேஸ்புக் உண்டு
சாட்டிங் தான் வருவீரோ?
ஜாதி மதங்களைப் பார்ப்போம் என்று பொங்கிய பாரதியே - இன்று
ஜாதி சான்றிதழ் வாங்கவே
நீரும் லஞ்சமும் தருவீரோ?
காவியம் செய்யவும் காடுகள் வளர்க்கவும் சொல்லிய பாரதியே - இன்று
காடுகள் அழித்து கோடிகள் குவிப்பதை
கூவித்தான் தடுப்பீரோ?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு உரைத்திட்ட பாரதியே - இன்று
உயிர்கள் அனைத்தும் ஒன்றாய் இணைய உதவிடுவாய் பாரதியே!

