குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம் - பாடல் 67
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-
தலைவன் பாங்கனைச் சார்தல்.
பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்
தலைவ னுற்ற துரைத்தல்.
கற்றறி பாங்கன் கழறல்.
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
பாங்கன் கிழவோற் பழித்தல்.
கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.
(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.
இதுவுமது.
பாங்கன் றன்மனத்தழுங்கல்.
இதுவுமது
பாங்கன் தலைவனோடழுங்கல்.
எவ்விடத் தெவ்வியற் றென்றல்.
அவனஃ திவ்விடத்திவ்வியற் றென்றல்.
பாங்கன் இறைவனைத் தேற்றல்.
குறிவயிற் சேறல்.
இறைவியைக்காண்டல்.
இகழ்ந்ததற்கு இரங்கல்.
தலைவனை வியத்தல்.
தலைவியை வியத்தல்.
தலைவன்றனக்குத் தலைவி நிலை கூறல்.
தலைவன் சேறல்.
தலைவியைக் காண்டல்.
கலவியின் மகிழ்தல்.
புகழ்தல்.
பாங்கியொடு வருகெனப் பகர்தல்.
பாங்கிற்கூட்டல்.
(இ-ள்) தலைவன் தலைவியை ஆயத்துச் செலுத்துதல்; ஆயம் – மாதர் கூட்டம்.
கட்டளைக் கலித்துறை
அணியே பசும்பொன் னொராயிரங் கோடிகொண் டாக்கினடு
மணியே யமைத்தில ரேற்சிறப் போவணங் கார்சிரத்தைத்
துணியே தரப்பொருங் கோழிக் குலோத்துங்க சோழ(ன்)வெற்பிற்
பணியே நினக்குச் செயுமாயம் போந்தருள் பான்மொழியே! 67
இவற்றுள் முன்னைய மூன்றுஞ் சார்தல் கேட்டல் சாற்றலென்னு மூன்றற்கும், பாங்கன் கழறல் முதல் கிழவோன்வேட்கை தாங்கற் கருமை சாற்றலீறாகிய நான்கும் எதிர்மறைக்கும், பாங்கன்றன் மனத் தழுங்கல்முதல் தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறலீறாகிய பதுனொன்றும் நேர்தற்கும், தலைவன்சேறல் முதல் புகழ்தலீறாகிய நான்கும் கூடற்கும், தலைவன் றலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தலும் தலைவன் றலைவியைப் பாங்கிற் கூட்டலுமாகிய இரண்டும் பாங்கிற் கூட்டற்குமுரியன.
8-பாங்கிற்கூட்டமுற்றிற்று.