அழிப்பது கொல்வதாகாது

ஒரு வாத்தியார் கருப்பு பலகையில் ஒரு சாக் பீஸ் கொண்டு சில சொற்களை எழுதுகிறார். சிறிது நேரத்திலே, அவர் எழுதியதை அழித்துவிட்டு வேறு சொற்களை எழுதுகிறார். அவர் எழுத்துக்களை கொல்லவில்லை.
சிறு பள்ளி மாணவர்கள் அவர்களது நோட் புக்கில் பென்சிலால் எழுதுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்கள் எழுதியதை பார்த்து, சில திருத்தங்கள் செய்யச்சொல்கின்றனர். அப்போது மாணவர்கள் ஒரு ரப்பர் கொண்டு, தப்பாக எழுதியவற்றை அழித்துவிட்டு சரியான வார்த்தைகளையே சொற்றொடர்களையோ எழுதுகிறார்கள். மாணவர்களும் எழுத்துக்களை கொல்வதில்லை.
பலர் நெற்றியில் திருநீறு அல்லது திருமஞ்சனம் அணிகிறார்கள். வேர்வை காரணமாகவோ, அல்லது நேரம் கடந்துபோவதன் காரணத்தினாலோ அல்லது அவர்கள் மீண்டும் குளித்திடும்போது அவர்கள் நெற்றியில் அணிந்த திருநீறோ அல்லது திருமஞ்சனமோ அழிந்துபோகின்றன. இவர்களும் திருநீற்றையோ திருமஞ்சனத்தையோ கொல்லவில்லை.

இதைப்போலவேதான் உணவுக்காக நாம் தாவரங்களை அழிப்பது. பிற ஜீவராசிகளை உடலால் தாக்கி துன்புறுத்தாமல், நமது இயற்கையான பசியை போக்கிக்கொள்ள தாவரங்களை உண்பது ஒருவித அழித்தலே தவிர கொல்லுதல் இல்லை. தாவரங்கள் ஓருயிர்க்கொண்ட ஜீவராசிகள். ஆதி மனிதன், அறிவில் முதிர்ச்சி அடைவதற்கு முன்பு, மிருகங்களை கொன்று தின்று வந்தான். அப்படி விலங்குகளை கொல்வதற்கு முன்பாகவே, அவன் தன் மானத்தை முக்கியமாகக் கருதினான். எனவே, இலைகளை கொண்டு தன் பாலுணர்வு உறுப்புகளை மறைத்தான். இயற்கையே, அவனுக்கு தாவரத்தின் இலைகளை பயன்படுத்தும் வழியை கற்றுத்தந்தது. பல நாட்கள் மிருகங்களைக் கொன்று பசியாறி வந்த மனிதன், அதே இயற்கையின் துணையுடன், தாவரங்களை வளர்த்து அதன் மூலம் அவனுக்கு தேவையான உணவினை பெற்றுக்கொள்ளும் அறிவுவளர்ச்சியும் அடைந்தான்.

எனவே, அவனது அறிவு நன்கு சுரக்க ஆரம்பித்ததும்தான் அவன் தாவரங்களை பயிரிட்டு அதனையே உணவாக பயன்படுத்தும் முறைகளை அறிந்துகொண்டான். அதன்படி தாவரங்களான மரம் மற்றும் செடிகொடிகளை பயன்படுத்தத் துவங்கினான். அப்படி என்றால், அவன் ஏன், அவனது அறிவு குறைவாக சுரந்த காலங்களில் அவன் செய்த மிருக கொலையை, இன்னமும் தொடர்ந்து செய்யவேண்டும்? மனிதனது உன்னதமான அறிவின் வளர்ச்சியினால், அதன் மூலம் பெருகிய திறமையாலும் எவ்வளவோ விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் நாம் பெருமை கொள்ளும் வகைகளில் முன்னேறியிருக்கிறோம். இருப்பினும், மிருகவதை செய்து உணவாக்கிக் கொள்ளும் கலாச்சாரத்தை, எப்படி நற்பண்புகளை கடைபிடிக்கச்சொல்லும் மனித குலம் ஏற்படுத்தியது?

நாய்களை ஆசையுடன் வளர்க்கிறோம், பூனைகளையும் வீட்டில் நேசிக்கிறோம். பச்சைக்கிளிகளை அன்புடன் பராமரிக்கிறோம். ஏன், வீட்டில் உள்ள கோழிகளை சேவல்களை நாம் ஒருபோதும் "இவைகளை கொன்றுதான் நான் வாழப்போகிறேன்" என்று நினைத்து வளர்ப்பதில்லை. எவ்வளவோ வீடுகளில் சிறுவர்கள், ஆட்டுக்குட்டிகளுடன் விளையாடுகிறார்கள். பசு மற்றும் எருமை மாடுகளை இன்றும் பலர்வீட்டில் அவற்றின் பாலுக்காக பராமரிக்கிறார்கள். சிலர் இவற்றிற்கு பேரிட்டு, இவற்றுடன் கொஞ்சி குலாவி, மகிழ்கின்றனர். அத்தகைய நேரங்களில் "இந்த மாடு பால் கொடுப்பதை நிறுத்தியவுடன், கசாப்பு கடைக்கு அனுப்பிவிடுவேன்" என்று எவரேனும் நினைப்பதுண்டா? அழகிய வகைவகையான வண்ண அரிதான மீன் வகைகளை வீட்டில் aquarium பெட்டியில் வளர்ப்பதில்லையா? அந்த மீன்களை நாம் எப்போதாவது நமக்கு உணவாகிக்கொள்வோம் என்று எண்ணியதுண்டா? ஏன், மீன் கோழி ஆடு மற்றும் மாடு இவைகளை நமது மூன்று அங்குல நாக்கின் ருசிக்காக கொல்லவேண்டும்? எப்படி விரத காலங்களில் மற்றும் இறைவழிபாடு செய்யும் சிறப்பு நாட்களில் வீட்டில் சைவம் மட்டுமே சமைத்து உண்கிறோமோ, அதையே வருடம் முழுவதும் செய்தால், நாம் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லையே. மாறாக, கள்ளம்கபடமற்ற இப்படிப்பட்ட ஜீவராசிகளை, நாம் அவர்கள் இயற்கையின் சூழலில் அவைகளை சுதந்திரமாக, துன்புறுத்தாமல், வாழவிடக்கூடாது? பிற உயிரையும் தன்னுயிர் போல கருதவேண்டும் எனும் மனித நேய கூற்றினை ஏன் நாம் நடைமுறையாக்கக்கூடாது? தயவு செய்து சிந்தித்து பாருங்கள்.

உங்களின் சிந்தனைக்கு ஒரு உதாரணம்:

நீங்களும் உங்கள் குடும்பமும் ஒரு சுற்றுலா பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு நீர்வீழ்ச்சியை சென்று பார்க்கிறீர்கள். அந்நேரத்தில் பயங்கரமான, இடியோடும் மின்னலோடும் கூடிய மழை பெய்கிறது. உங்களுடன் இருந்த சக சுற்றுலா பிரயாணிகள், மழையிலிருந்து தப்ப, அங்கும் இங்கும் ஓடிவிடுகின்றனர். உங்களுடைய சுற்றுலா பேருந்தோ, அந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் கூட இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று ஓடுகிறீர்கள். ஆனால் மழையிலிருந்து காத்துக்கொள்ள சரியான இடம் கிடைக்கவில்லை. வழியும் திசையும் கூட சரியாக கண்களுக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு காட்டு பகுதியின் உள்ளே இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நல்ல பசி. அந்த நேரம் பார்த்து மழை யும் நின்றுவிட்டது. உங்கள் யாரிடமும் கொரிப்பதற்கும் உண்பதற்கும் ஒன்றுமே இல்லை.
பேருந்து நடத்துனருடன் தொடர்பு கொண்டு பலகாரம் வரவழைக்க, உங்களிடம் செல்போன் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட தருவாயில், ஒரு கோழியும் ஒரு ஆட்டுக்குட்டியும் உங்களருகில் வருகின்றன என்று வைத்துக்கொள்வோம். மிகவும் பசியால் நீங்கள் அனைவரும் துடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் தீ பற்றவைக்க ஒரு தீக்குச்சி பெட்டியும் இருக்கிறது. அருகில் காய்ந்த மரச்சருகுகளும் இருக்கிறது. உங்களிடம் ஒரு கூர்மையான கத்தியும் இருக்கிறது. பசி முற்றிக்கொண்டே போகிறது. சிறிது தூரத்தில், தோட்டம்போன்ற ஒரு இடம் தென்படுகிறது. உங்களின் பெரிய மகன் அங்கே சென்று பார்த்துவிட்டு " அப்பா, இந்த தோட்டத்தின் மரங்களில் நிறைய காய்களும் (தக்காளி, வெண்டைக்காய், காரட், வெண்டைக்காய் போன்றவை) கனிகளும் (மாம்பழம், கொய்யா பழம், சப்போட்டா போன்றவை) உள்ளன. நாம் அவற்றை பறித்து உண்ணலாமா?" என்கிறார். நீங்களும் அங்கே சென்று பார்க்கிறீர்கள். தோட்டக்காரர் எவரையும் காணவில்லை. அப்போது நீங்கள் கீழ்வரும் இரண்டில் எதை செயல்படுத்துவீர்கள்?
1. தீ பற்றவைத்து அங்கேயுள்ள கோழியை அல்லது ஆட்டினை அறுத்து அந்த தீயில் சுட்டு, பின் அதனை உணவாகக் கொள்வது. ஒரு வேளை தோட்டக்காரன் வந்து கோழிக்கோ, ஆட்டுக்கோ பணம் கேட்டால், அவனுக்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது.
2. தோட்டத்தில் விளைந்துள்ள காய் கனிகளை பறித்து உண்ணலாம். ஒரு வேளை தோட்டக்காரன் வந்தால் அவனுக்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது.

உங்களில் அதிகமானவர்கள், இரண்டாவது யுக்தியைத்தான் தேர்வு செய்வீர்கள். சரிதானே? ஏன் அப்படி செய்கிறீர்கள்? ஏனென்றால், முதலாவதாக, உங்களுக்கு கோழி மற்றும் ஆடு போன்ற ஒரு ஐந்தறிவு உயிரினை கொல்ல மனம் வராது. வீடுகளில் நீங்கள் சமைத்து உண்ணும் மாமிசம் கடைகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. எனவே உங்களுக்கு, நேரடியாக ஒரு உயிரை கொல்ல வாய்ப்பும் கிடையாது. இரண்டாவதாக, கோழியை அல்லது ஆட்டினை அவற்றின் அவலம் நிறைந்த சத்தத்தை கேட்டுக்கொண்டு கொல்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எவ்வளவுதான் விருப்பமுடன் நீங்கள் இறைச்சியை சுவைத்து சாப்பிட்டாலும், அதற்கு மூலகாரணமான ஆடு, உங்கள் முன் துடித்துக்கொண்டே வெட்டப்படுவதை 90 %ம் அதிகமான மக்கள் விரும்பமாட்டார்கள்.
மேற்கூறிய உதாரணத்தில் உங்களில் பெரும்பான்மையானவர்கள் தோட்டத்தில் உள்ள காய் பழங்களை பறித்து உண்டுவிட்டு, தேவைப்பட்டால் அந்த தோட்டக்காரருக்கு உரிய பணம் கொடுத்துவிட்டு, அவர் உதவியுடன் உங்கள் பேருந்து காத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு செல்வீர்கள். பேருந்தும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது என்று எடுத்துக்கொள்வோம்.

அப்படியானால், உங்களின் ஆழ்மனதில், நம்மைப் போன்றே ஆடி ஓடி நம்முடன் உறவாடும் பிராணிகளை, நீங்கள் நிச்சயம் கொல்வதற்கு முயற்சி செய்யமாட்டீர்கள். சொல்லப்போனால், அவைகளை முடிந்தவரை கொல்லாமல் இருப்பதற்குத்தான் முயற்சி செய்வீர்கள். இதற்கும் உங்களில் பெரும்பான்மையினர் "ஆமாம்" என்றுதான் நிச்சயமாக கூறுவீர்கள். இதற்கு காரணம் என்ன என்பதை கற்று அறிந்த சான்றோர்களான நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். மனிதாபிமானம். சரி, இப்போது என் கட்டுரையை தொடர்கிறேன்.

தாவர உணவும் கிடைக்காத ஒரு சூழ்நிலையில், மனிதன் இறந்துவிடுவான். ஏனெனில், நீரும் காற்றும் கொண்டு, மனிதனால் உயிர் வாழ முடியாது. ஆகவே, எப்படி மனிதன் காட்டை அழித்து நாட்டை ஆக்கினானோ, எப்படி குகையை அழித்து சாலைகள் அமைத்தானோ, எப்படி குன்றுகளை தகர்த்து கல்லாக்கினானோ, அக்கல்லை அழிக்காமல் அழித்து, அற்புதமான சிலைகளை உருவாக்கினானோ, அதே வகையில்தான், தாவரங்களை வளர்த்தும், பயிரிட்டும், மாமிசத்துடன் தாவர உணவையும் உண்டு, மனிதன் வாழ்ந்து வருகிறான். உலகில் 90 % விழுக்காடு (சுமாராக) மக்கள், மிருகங்களை கொன்று உணவுக்காக பயன்படுத்துகின்றனர். மீன் முதற்கொண்டு மான் வரை, எண்ணற்ற மாசு மருவற்ற உயிர்களைக் கொன்று அவர்களின் இறந்த உடலை சமைத்து, அதிக அளவில, நாவின் சுவைக்காக சாப்பிடுகின்றனர். இந்தச் செயல் அகிம்சை வழியில் நடப்பது அன்று. என்ன, நான் கூறுவதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா? எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும் என்ற சமுதாயத்தின் கொள்கையை ஒப்புக்கொள்பவர்கள், அசைவம் உண்பவர்கள் என்றால் அவர்களை எப்படி உண்மையான அன்பு செலுத்துபவர்களாகக் கருதமுடியும்?

வாசகர்களே, தயவு செய்து சிந்தியுங்கள். நான் ஒரு வருடத்திற்கு முன் இந்த பகுதியில் பதிவு செய்த எனது " தவிர்ப்போம் அசைவம், சுவைப்போம் சைவம்" என்ற கட்டுரையின் நீள்மைதான் (extension) இப்போது பதிவு செய்துள்ள இந்த கட்டுரை. என்னுடைய கருத்து என்னவெனில், எப்போது நாம் மிருக உயிர் வதைகளை தவிர்க்கிறோமோ, அப்போதுதான் நாம் உண்மையிலேயே அன்புபாராட்டும் சமுதாயமாக இருக்கமுடியும். அப்படிப்பட்ட சமுதாயத்தில்தான் சகமனிதர்களை நாம் கொல்லாமல் இருப்போம். இந்நாளில், தனி ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்வது சாதாரணமாகி விட்டது. மதம் என்னும் பேரில், பலர் மதம் பிடித்த யானைகள் போல நெறிமுறைகளை புறக்கணித்துவிட்டு பிற மனித உயிர்களை கொல்கின்றனர். இரு மனித இனங்களுக்கு இடையே உள்ள பகை, இரு நாடுகளுக்கிடையே நடக்கின்ற, நிறுத்தமுடியாத, முடிவுக்கு வராத போர்களாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இப்படி நடந்து கொண்டிருக்கும் போரில் எவ்வளவு லட்சம் மனித உயிர்கள் இதுவரை மடிந்திருக்கின்றன, தெரியுமா?

அன்பு என்னும் வார்த்தைக்கு உதட்டளவில் மட்டுமின்றி மனதளவிலும் இன்னம் முக்கியத்துவம் கொடுத்திடுவோம். கருணை என்ற மனித மாண்பின் விதையை, நன்னிலம் என்னும் நம் உள்ளத்தில் விதைத்திடுவோம். அதன் மூலம், ஒழுக்கம் என்ற செடியை உருவாக்கி, அறம் எனும் மொட்டுக்கள் பூத்துக் குலுங்கி, அமைதி என்னும் பெரிய மரமாக வளர்த்திடுவோம். இப்படி உருவான மரங்களிலிருந்து கிடைக்கப்பெறும் சுவையான கனிகள், உண்மையான மனிதநேய மகிழ்ச்சி அல்லாமல், வேறு என்னவாக இருக்கமுடியும்?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Aug-24, 10:33 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 86

மேலே