இன்று மூத்த குடிமகன்கள் தினம்

இன்று உலகம் மூத்த குடிமகன்களின் தினத்தை அனுசரிக்கிறது. கொண்டாடுகிறது என்பதை விட அனுசரிக்கிறது என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என நான் நினைப்பதால். வருடத்தில் ஒருமுறை அனுசரிக்கப்படும் எந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் பொதுவாக அந்த ஒரு தினம் மட்டுமே இருக்கும். சுற்றுப்புற சூழல் தினம், மனித நேய தினம், நண்பர்கள் தினம், பெண்கள் தினம், தாய்மார்கள் தினம், தந்தையர்கள் தினம் போன்ற பல நிகழ்ச்சிகளை நாம் குறிப்பிடலாம்.
அந்த வகையிலே இன்று உலகமெங்கும் மூத்த குடிமகன்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஏற்பாடு செய்பவர்களும் சரி, அனுசரிபவர்களும் சரி அல்லது கொன்டாடுபவர் எவரேனும் இருந்தாலும் சரி, அவர்களில் நூற்றில் 99 % மூத்த குடிமகன்களாகத்தான் இருப்பார்கள்.
ஏனெனில், மற்றவர்கள் அவர்களை கண்டுகொள்வதில்லையே, அரசாங்கம் உட்பட. அறுபது வயதை கடந்தவர்களில் அதிகமானவர்கள் வீட்டிலோ அல்லது மூத்த குடிமகன் இல்லங்களிலோ அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ அடங்கி ஒடுங்கி பணிந்து வாழ்பவர்கள்தான்.
சில வீடுகளில், மூத்த குடிமகன் ஒருவர் அதிக அளவில் பணமுடிப்புடன் பதவி ஓய்வு பெறுகிறார் என்றால், அந்த பணமுடிப்பின் மதிப்பை கணக்கில் கொண்டு அந்த நபருக்கு அதற்கேற்றவாறு மரியாதையும் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஒரு வேலை அவரிடம் பணமுடிப்பு இல்லை அல்லது பணமுடிப்பில் நிதி மிகவும் குறைவாகவே உள்ளது எனும்பட்சத்தில், அந்த நேரத்திலிருந்தே அந்த மூத்த குடிமகனை குடும்பத்திலிருந்து ஓரம் கட்டி, மரியாதையையும் சலுகைகளையும் கொடுக்காமலோ அல்லது உதட்டளவில் கொடுப்பதுதான் இருக்கும்.
அந்த மூத்த குடிமகன் நிறைய சம்பாதித்திருக்கலாம், அந்த பணம் எல்லாம் அவர் குடும்பம் நலமுடன் வளமுடன் வாழ அவர் செலவிட்டிருக்கலாம். ஆனால், இதையெல்லாம் யார் நினைத்துப்பார்க்கிறார்கள்? பதவி ஓய்வு பெறுகையில் பாங்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, அவரது வீடு என்ன விலைக்கு போகும், அவருக்கு வேறு என்ன சொத்து இருக்கிறது, இதுதானே ஒருவரின் ஓய்வு கால வாழ்க்கையில் அவரது மரியாதை மற்றும் மதிப்பின் அளவை நிர்ணயிக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, அதிகம் குடித்து குடித்தே பணத்தை விரயம் செய்துவிட்டு, பதவி ஓய்வு பெரும் நபர்களின் கதி என்ன என்பதை நினைத்துதான் பார்க்கமுடியுமா? இப்படிப்பட்டவர்களுக்கு அந்த குடியைவிட்டால் வேறு யாரும் நல்ல துணையாக இருக்கமாட்டார்கள்.
வயதான காலத்தில் அப்பாவை தன்னுடன் வைத்துக்கொண்டு, மரியாதையுடன் நடத்துகின்ற மகன்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படிப்பட்ட மகன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
வெளிநாட்டில், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் பலர் கல்யாணமும் செய்துகொண்டு அந்நாட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும்போது மட்டும், பெற்றோரை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கூட்டிச்செல்வார்கள். அவர்களின் தேவை நிறைவேறியவுடன் (அதிகமாக போனால் ஆறு மாதங்கள்) இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுகின்றனர். நமது பெற்றோர்கள், அவர்களின் பிள்ளைகளை விட்டுக்கொடுக்காமல் "என் மகன் எங்களை அப்படி பார்த்துக்கொண்டான். என் மகள் எங்களை அப்படி கவனித்துக்கொண்டாள்" என்று பெருமை பேசுவார்கள். இப்படி பெருமை பேசும் நிறைய பெற்றோர்கள் தனிமையில் வாழ்ந்து, தனிமையில் இறக்கிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.
ஒருவரின் பிள்ளையோ பெண்ணோ அவரின் பெற்றோர்களை எவ்வளவுதான் அன்பாக கவனித்துக்கொண்டாலும், வாழ்க்கையில் ஒரு நேரம் வந்து சேரும். அப்போது, அவர்களின் அருகில் இருந்து அவர்கள் நலத்தை பராமரிப்பவர்கள், அந்த வயதான ஜோடியாகத்தான் இருக்கும் அல்லது முதியோர் இல்லத்தில், பணம் பெற்றதற்கு ஏற்றாற்போல் உள்ள கவனிப்புதான் இருக்கும்.
ஒரு உண்மை சம்பவத்தை இப்போது பகிர்ந்துகொள்கிறேன். என் அம்மாவின் அக்கா, என் பெரியம்மா, வயது 95 இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எப்படி தெரியுமா? தனியாக. முதியோர் இல்லத்திலா? இல்லை, அவரது சொந்த இல்லத்தில் தான். அவருக்கு ஒத்தாசை செய்ய யார் இருக்கிறார்கள்? என் பெரியம்மா இருக்கும் தெருவில் போவோர் வருவோர்தான் அவருக்கு அவ்வப்போது ஏதாவது உதவிகள் செய்து செல்கின்றனர். என் பெரியம்மாவின் மகன் ஒருவன் வேறு வீட்டில் அவனது மனைவியுடன் வாழ்கிறான். அவன் மனைவிக்கும் என் பெரியம்மாவுக்கு ஒத்துப்போகாததால், பெரியம்மா அவள் மகனுடன் வாழ இயலவில்லை. ஆயினும், மனைவியை எதிர்த்துக்கொண்டு அவன் மாதாமாதம் என் பெரியம்மாவை அழைத்துச்சென்று அவரது பென்சன் பணத்தை வாங்கி கொடுக்கிறான். வாரத்திற்கு ஒருமுறை பெரியம்மாவை பார்த்துவிட்டு, அவருக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்துவிட்டு செல்கிறான்.
என் பெரியம்மாவின் பெரிய பலம், அவரது உறுதி மற்றும் தைரியம். அவருக்கு எப்போதுமே தலைவலி பிரச்சினை, ரத்த அழுத்தமும் இருக்கிறது. அவரது கணவர் இறந்து இருபது வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. பெரியம்மாவின் ஒரே துணை, தொலைக்காட்சி பெட்டிதான். இப்போது அதிகநேரம் அவரால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க இயலவில்லை. இரண்டு கண்களிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் ஆபரேஷன் நடந்தது.
அவரது மகள்களில் ஒரு மகள் அம்மாவிடம் பாசம் அதிகம் வைத்தவள். வேறு ஊரில் இருக்கும் அவள்தான் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை என் பெரியம்மா வீட்டிற்கு ஆவலுடன் மூன்று, நான்கு நாட்கள் தங்கிவிட்டு செல்கிறாள்.
அடிக்கடி காபி குடிப்பதால் பெரியம்மாவுக்கு இரவில் சரியான தூக்கமே கிடையாது. எனக்கே (65) இரவு தூக்கம் அதிகநேரம் பகைவனாகவும், ஒரு சிலமணிகள் மட்டும் நண்பனாகவும் இருக்கையில், என் பெரியம்மாவின் கதையை என்ன சொல்ல? இந்த தளர்ச்சியிலும் பெரியம்மா தனது எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்கிறார். பாத்ரூம் செல்வது, குளிப்பது, உடைகளை மாற்றிக்கொள்வது, காபி போட்டுக்கொள்வது, சமைப்பது போன்ற கடமைகளை அவரே தன்னந்தனியாக செய்து வருகிறார். அவ்வப்போது உடம்புக்கு முடியவில்லை என்றால், எதுவும் செய்யாமல் கட்டிலில் படுத்துவிடுகிறார். அப்படிப்பட்ட தருணங்களிலும் ஒரு முறை எப்பாடுபட்டாவது காபி போட்டுகொண்டுவிடுவார். இவர் இன்ஸ்டன்ட் காபி பொடியை விரும்புவதில்லை. எப்போதும் பில்டர் காபி தான். இதனால் வேலையும் கொஞ்சம் அதிகம்.
எனது தாயார் இருந்தபோது , என் பெரியம்மா அவ்வப்போது சென்னை வந்து அவரை பார்த்துவிட்டு செல்வார். என் தாயின் பிரிவுக்குப்பின் என் பெரியம்மா மிகவும் தனிமை படுத்தப்பட்டுவிட்டார். நானும் என் மனைவியும் வருடத்திற்கு இரண்டு முறை சென்று பெரியம்மாவை பார்த்துவிட்டு வருகிறோம். இப்போதிருக்கும் நிலையில் பெரியம்மா வண்டி எப்போது வரைக்கும் ஓடும் என்று தெரியவில்லை.
இப்போதுள்ள நிலையில் 70 வயதில் எந்த ஒருவருக்கும் உடல் உபாதைகள் அதிகமாகிவிடுகின்றன. வளர்ந்த வெளிநாடுகளில் உள்ளதுபோல, மூத்த குடிமகன்களுக்கு அரசு மூலம் உடல் நல பாதுகாப்பு காப்பீடு திட்டம் எதுவும் இல்லை. இதனால், பணம் உள்ளவர்கள் மாத்திரமே வயதான காலத்தில், உடல்நல காப்பீடு திட்டத்தில் வருடாந்திர பணம் செலுத்தி, அதன் மூலம் ஓரளவுக்கு மருத்துவ வசதி பெறமுடியும்.
வயது முதிர்ந்து, தள்ளாமை அதிகமாகி முடியாமல் போகும்போதுதான் மூத்தகுடிமகன்கள் பலர் வாழ்வின் அச்சுறுத்தும், புரட்டியெடுக்கும், கொடுமை தரும் தருணங்களை எதிர்கொள்கின்றனர். அப்படிபட்ட தருணங்களில் அவர்கள் இப்படித்தான் நினைத்துக்கொள்வார்களோ என்னமோ " இப்படி முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு , சித்திரவதைகளை அனுபவிக்காமல், இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே, என் உயிர் பிரிந்து போகவேண்டும்"

இளைஞர்களே, உங்கள் தாய் தந்தையருக்கு அவர்களின் வயதான முதிர்ச்சியற்ற காலத்தில் அவர்களை சரிவர கவனித்துக்கொள்ளுங்கள். இன்று இருபது வயதை கொண்டாடும் கட்டிளங்காளையாரும் வஞ்சியரும் இன்னும் நாற்பது ஆண்டுகள் கழிந்தால் அறுபதை கடந்தே ஆகவேண்டும். அந்த நேரத்தில் உங்களின் பிள்ளைகள்தான் உங்களை கவனிக்கவேண்டும். அது மட்டும் அல்ல, பிரதிபலன் எதிர்பார்க்காமல் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான நன்றி அவர்களை வயதான காலத்தில் பார்த்துக்கொள்வதுதான். எப்படி உங்கள் குழந்தைகளை கவனமுடன் அன்புடன் வளர்க்கிறீர்களோ அதைப்போலவே உங்கள் பெற்றோரையும் அவர்களது உடல்தளர்ந்த காலத்தில் கவனியுங்கள்.
மூத்த குடிமகன்களே, இப்போதிலிருந்து உங்கள் பணத்தையும் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். பணம் உதவுவது போல பிள்ளைகள் உதவாது, வேறு எவரும் உதவமாட்டார்கள். உங்களின் கடைசி தேவைகள் வரைக்கும் உங்களிடம் பணம் இருக்கவேண்டும். வேறு சொத்துக்கள் இருப்பின், தங்கத்தை தவிர, அவற்றை காலாகாலத்தில் விற்று காசாக்கி வைத்துக்கொள்ளுங்கள். வயதான காலத்தில், இந்த பாழும் உடம்பு எப்போது படுத்தும் என்றே தெரியாது என்பதால், உங்கள் பேங்க் பாலன்ஸ் எப்போதும் வளமுடன் இருக்கட்டும்.
இந்த வயதிலும் நீங்கள் உங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யுங்கள். உங்களால் முடிந்த சிறு தொகையை ஏழை எளியவர்க்கு கொடுங்கள். எந்த ஒரு நிலையிலும் பிறருக்கு கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி போல் வராது. முடிந்தவரை அடுத்தவரின் உதவியை நாடாமல் இருங்கள் (என் பெரியம்மா போல).
உங்கள் உடல் அதிகம் ஒத்துழைக்காமல் போனாலும், மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். எண்கள் புதிர், வார்த்தை புதிர் போன்ற புதிர்களை போடுங்கள். உங்களுக்கு பிடித்த பாடல்களை வாய் திறந்து அனுபவித்து பாடுங்கள். இசைக்கருவி வாசிக்கத்தெரிந்தால், வாசியுங்கள். முடிந்தால் உங்கள் ஓவியத்தை நீங்களே தீட்டுங்கள். உங்கள் தொடர்பை விரும்புபவர்களிடம் நன்றாக கலகலவென்று பேசுங்கள். கடைசி நேரத்தில் நல்ல மகிழ்ச்சி மற்றும் சுவையான உணர்வுகளை மட்டுமே நாம் நம்முடன் கொண்டுசெல்வோம்.
தினமொரு தடவை இறப்பை நினைப்போம். ஆனால் ஒரு போதும்இறப்பை நினைத்து பயம் கொள்ளவேண்டாம். 'நான் நல்ல முறையிலேதான் இறப்பேன்' என்று நம்பிக்கை கொள்ளுங்கள். அதன்பிறகு எல்லாமே விதி எனும் ஆண்டவன் காட்டும் வழி.

ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Aug-24, 4:44 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே