வரலக்ஷ்மி விரதம் பிறந்த விதம்

சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஒரு தீபாவளி பண்டிகையின்போது லட்சுமி வீட்டில் சந்தித்து கொள்கின்றனர். சரஸ்வதி, பிரம்மாவை பற்றி நன்கு புகழ்ந்து பேசினாள் "என் கணவர்தான் அனைத்து உயிர்களையும் படைக்கிறார். எனவே பிரம்மதான் உயர்ந்தவர்".

பார்வதி பதிலளித்தாள் "என் கணவர் அந்த உயிர்களை அழித்தால்தான் பூமியில் மீண்டும் நீங்கள் புதிய உயிர்களை உருவாக்க இடம் கிடைக்கும். எனவே என் கணவர்தான் உண்மையில் அதிக சக்தி உள்ளவர்"
அருகில் இருந்த லக்ஷ்மியை இருவரும் பார்த்து ' ஏம்மா லட்சுமி, நீயே சொல்லுமா, பிரம்மா பெரிய ஆளா அல்லது சிவனா?"

லட்சுமி இருவரையும் நன்கு உற்று நோக்கினாள் " சரஸ்வதி, நீ உயிர்த்துடிப்புடன் வாசிக்கும் வீணை ஓசியில் கிடைத்ததா?'. " இல்லையில்லை, செல்வம் இருந்தால்தான் வீணை கிடைக்கும் " என்று மற்ற இருவரும் கூறினர். பார்வதியை லட்சுமி கேட்டாள் "பார்வதி, உன் கணவரின் கையில் இருக்கும் வேல் மற்றும் குடுகுடுப்பை, காற்றிலே மிதந்து வந்ததா. மற்ற இருவரும் ஒரே குரலில் "இல்லை, இல்லை. தனம் இருந்தால்தான் வேல், குடுகுடுப்பை, எங்கள் தலைக்கு போட்டுக்கொள்ள ஷாம்பு இதுபோன்ற எல்லா பொருளும் கிடைக்கும்".

பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். "எங்களது பீத்தல், தற்பெருமையை உனது நுண்ணறிவால் முறியடித்துவிட்டாய். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழும் நாட்களில், செல்வமும் பொருளும் இல்லையெனில் எந்த மனிதனும் நலமுடன் வாழ முடியாது. உங்களது கூர்மையான அறிவால், நல்லவிதமாக எங்களை நாங்கள் புரிந்துகொள்ள உதவினீர்கள்".
இப்படி சொல்லிவிட்டு, சரஸ்வதி பார்வதி இருவரும் தனிமையில் ஐந்து நிமிடம் கிசுகிசுவென்று ஏதோ பேசிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் லட்சுமி இருவருக்கும் கோதுமை அல்வா, ரவா உருண்டை, ஜாங்கிரி மற்றும் மிக்சர், தேன்குழல் பேக் செய்தாள்.

மற்ற இருவரும் லட்சுமியை பார்த்து புன்முறுவல் பூத்த வண்ணம் " வரும் காலங்களில், உனக்கு ஒவ்வொரு வருடமும் "வரலக்ஷ்மி நோன்பு' என்ற சிறப்பு பூஜை செய்து, பாரத தேசத்தில் உள்ள சுமங்கலிகள் யாவரும் மகிழ்வார்கள். நீயும் அவர்களுக்கு முடிந்த பொருட்செல்வங்களை அளித்திடுவாயாக" என்றனர்.

"ஒய் நாட், சுயூர், ஐ வில் டேக் கேர் ஆப் தோஸ் லேடீஸ்" என்று லட்சுமி சிரித்துக்கொண்டே பதிலளித்துவிட்டு, பட்சண பொட்டலங்களை அவர்களுக்கு கொடுத்தாள்.

மற்ற இருவரும் ஒரே குரலில் "தாங் யூ சோ மச். நீ பண்ணும் இனிப்புகள் எல்லாம் நெய் மணத்துடன் சுவையாக இருக்கும் "என்று சொல்லிவிட்டு, பொட்டலங்களை நைசாக பிரித்து பார்த்தபடி, அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Aug-24, 10:09 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 79

மேலே