இயற்கை சீற்றங்கள்

இயற்கை அழகு நிறைந்த வயநாடு இப்போது அதே இயற்கையின் சீற்றத்தால் இழந்து நிற்கிறது அதன் அழகை!
இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாகத் திகழும் ஹிமாச்சல் பிரதேசம், இயற்கையின் சீற்றமான மழையால் நூற்றுக்கணக்கான மக்களை பறிகொடுத்து நிற்கிறது!
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திரப் பிரதேசத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன் ஒரு சாமியாரின் காலடி பட்ட மண்ணை வணங்க கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டதால் உண்டான நெரிசல் முன்னூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி வாங்கியது! இது செயற்கை யின் கொடூரம்!
சமீபத்தில் பங்களாதேஷில் நடந்த மாணவர்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் நானூறுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவும் செயற்கையாக நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமே!
ஆக மொத்தம், இயற்கையும் செயற்கையும் ஒன்று மாற்றி ஒன்று மனித இனத்தை சூறையாடி வருகிறது.
இத்தகைய நிகழ்வுகளுக்காக நாம் இயற்கையை குற்றம் சாட்டமுடியுமா? முதல் இரண்டு சம்பவங்களும் இயற்கையின் சீற்றத்தால் விளைந்தவை என்றாலும் அத்தகைய எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கு மனிதர்களே முக்கிய காரணம்.
வயநாடில் மலைகளைக் குடைந்து போடப்பட்ட சாலைகள், அங்குள்ள நிலங்களில் அளவிற்கு அதிகமான மக்கள் குடியிருப்புகள் உற்பத்தி ஆனது போன்ற விஷயங்கள் இயற்கைக்கு ஏற்றதாக அமையவில்லை. இதன் விளைவாக இந்த மலைகள் சார்ந்த நிலங்களில் சிறிது சிறிதாக தொய்வு ஏற்படத் துவங்கி, சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அது பூதாகாரமான நிலச்சரிவுகளாக உருவெடுத்தது.
இதைப் போலவே, புவி சூடாவதின் விளைவுகளால் நிலம் மற்றும் கடலின் வெப்பம் அதிகமாவதால், இமாச்சலப் பிரதேசத்தில் அளவுக்கு அதிகமான மழை , அதனால் ஏற்படும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்த வண்ணம் உள்ளது.
இறுதியில், ஆய்ந்து பார்த்தால், இப்படி நிகழும் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களுக்கு அடிப்படை காரணம் மனிதர்களே.
மனிதர்களே, இதை ஏன் புரிந்து கொள்வதில்லை? ஏன், இயற்கையை சீண்டி விட்டு பிறகு அந்த இயற்கையின் பிடியில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கிறீர்கள்?
உங்களது சுற்றுப்புற சூழலை சரியான முறையில் சமன்பாடு செய்யுங்கள். இனியாவது வீடுகளை பெருக்கவும், தொழிற்சாலைகளை வளர்க்கவும், காடுகளை அழிக்காதீர்கள். காட்டில் வாழும் விலங்குகளை பொழுதுபோக்கிற்கும், பணத்தை சேர்ப்பதற்கும் கொல்லாமல் இருங்கள்.
கார்பன் தடயங்களை குறைக்க உங்களால் முடிந்த அளவு உதவுங்கள். பெரிய வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்வது , பெட்ரோல் டீசலுக்கு பதில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உபயோகிப்பது போன்ற வழிகளில் நாம் கார்பன் தடயங்களை நிச்சயமாக குறைக்க முடியும்.
நம் நாட்டில் ஜனத்தொகை விபரீதமான அளவில் பெருகிவிட்டது. இன்னும் பத்து வருடங்களில் நம் ஜனத்தொகையை 140 கோடியிலிருந்து 100 கோடியாய் குறைக்க ஒவ்வொரு குடிமகனும் சபதம் எடுத்துக் கொண்டால், ஏதேனும் வழிகளில் அது நிச்சயம் சாத்தியம் ஆகும். ஜனத்தொகை குறையக் குறைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகும். மருத்துவ வசதிகள் அதிகரிக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலான நிலம் கிடைக்கும். அப்படி அமைந்திடில் அது வீட்டிற்கும் நாட்டிற்கும் மிகவும் நலம் தானே ?
வருகின்ற சுதந்திர தினம் அன்று ,நாம் அனைவரும் இது போன்ற நாட்டுக்கும் உலகிற்கும் நலம் விளைவிக்கும் செயல்களைச் செய்ய உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.

வாழ்க பாரதம்
வாழ்க வையகம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Aug-24, 10:05 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 181

மேலே