உண்பர், நண்பர், விருந்து

உண்பர், அவரின் நண்பர் அழைப்பு விடுத்தால், விருந்து உண்ணச் சென்றார். காலையில் எட்டுமணிக்கெல்லாம் நண்பர் வீட்டிற்கு சென்றாகிவிட்டது. சூடான இட்லி நாலு, சட்டினியுடன், மணம் கமழும் சூடான பில்டர் காப்பியும் கிடைத்தது.
உண்பர்: ஆஹா, என்ன ஒரு சிற்றுண்டி! மதுரை மல்லிபோல வெள்ளை இட்லி, சூடு பறக்க! ஒரிஜினல் கும்பகோணம் டபுள் டிகிரி காபீ, ஆவி பரபரக்க!
நண்பர்: நன்றி உண்பா! என் மனைவியை பார், இதையெல்லாம் செய்து நமக்கு கொடுத்துவிட்டு வேர்வை விறுவிறுக்க இருக்கிறாள்!
உண்பர்: அப்படி என்றால், மதியம் நான் உங்கள் இருவருக்கும் பரிமாறிவிட்டு பின்னர் சாப்பிடுகிறேன்.
நண்பர்: உங்களுக்கு எதற்கு சிரமம்?
உண்பர்: இது சிரமம் இல்லை, ஒரு தருமம்.
மதியம் நண்பரின் மனைவியின் கைமணத்துடன் கூடிய அருமையான விருந்து சமைக்கப்பட்டது. உண்பர், நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பரிமாறத்தொடங்கினார். நெய் மணக்கும் சூடான கேசரியை கொஞ்சம் அதிகம் உண்டதால், நண்பரின் மனைவிக்கு வேர்த்து விறுவிறுத்தது. நெய்போட்டு பருப்பு சாதத்தை, ஐந்தாறு கவளங்கள் அதிகம் சாப்பிட்டதால் அவரின் உடம்பு வெலவெலத்தது. சின்ன வெங்காயம் மற்றும் இளசான முருங்கைக் காய் போட்ட, தேங்காய் விட்டு அரைத்த சாம்பாரை, அரை லிட்டர் ஊற்றிக்கொண்டதால் அவருடைய கைகள் குறுகுறுத்தது. சிகப்பு மிளகாய் பூசணி மோர் குழம்பு அருமை. அதையும் அவர் அரை லிட்டர், தாராளமாக ஊற்றிக்கொண்டு சாப்பிட்டதால் அவர் நெஞ்சம் படபடத்தது. பின்னர் மணம் கமழும் தக்காளி ரசம் சாதத்துடன், ஆறு பொறித்த அப்பளங்கள் அவர் வாயில் போனதால் (வயிற்றுக்குத்தான் போனதா இல்லையா எனத்தெரியாது) அவர் இருதயம் துடிதுடித்தது. கிருஷ்ணா கோல்ட் ட்ராப் எண்ணெயில் வறுத்து வதக்கிய பொன்னிறமான ஒரு கிலோ உருளைக்கிழங்கு, ரசம் சாதத்திற்கு முன்னமேயே காலியாகிவிட்டது. இடையில், தடையின்றி பருப்பு வடை போடப்பட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், உண்பரின் நண்பர் மட்டும் மிகவும் குறைவாகவே சாப்பிட்டார் (பாவம், மீதம் இருந்தால்தானே சாப்பிடமுடியுயும்).
பொன்முறுவலாக வறுத்த சேமியாவில், தாரளமாக நெய் முந்திரி மற்றும் திராட்சை பழங்கள் போடப்பட்டிருந்தது. அது தனக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்று, ஜாடையில் சொல்லிவிட்டு, நண்பரின் மனைவி இலையில் நாலு கரண்டி ஊற்றச்சொன்னார். உண்பர் ஊற்றிக்கொண்டே இருந்தார் (மொத்தம் பதினாறு கரண்டி). பெண்மணி ருசித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். இறுதியில், கெட்டியான புளிப்பு இல்லாத அரை கிலோ தயிருடன்நூறு கிராம் சாதம் சேர்த்துக்கொண்டு, எலுமிச்சங்காய் ஊறுகாயை மட்டுமே தொட்டுக்கொண்டு, எதையும் விட்டுவைக்காமல் சாப்பிட்டுவிட்டு, ஒரு வழியாக முடித்தார். உண்பர் துடித்தார். பசியே இல்லாததுபோல் நடித்தார் நண்பர் முழித்தார்.
அடுத்த பத்து நிமிடத்தில் நண்பரின் மனைவி, ஒரு பெரிய பாத்திரத்தில் ஆவி பறக்க எதையோ மூடி எடுத்து வந்தார். உண்பர் ருசிப்பதற்கு தயாரானார். அவருக்கு பரிமாறப்பட்டது, கோதுமை கஞ்சி (காஞ்சி போன வயிறுக்கு கஞ்சி), எலுமிச்சங்காயின் உருவமே தெரியாத எலுமிச்சை ஊறுகாய்.
உண்பர் பாவம், என்ன செய்வார். பசிக்கு கிடைத்ததை பசி தீரும்வரை சாப்பிட்டார்.
நண்பரின் மனைவி, வருத்தமான குரலில் உண்பரிடம் சொன்னார் " எங்களுக்கு பரிமாறும்போது, எல்லா உணவுவகைகளிலும் கொஞ்சம் உங்களுக்கு எடுத்துவைக்க சொல்லவேண்டும் என்று நினைத்தேன். சொல்ல மறந்துவிட்டேன். அடுத்த முறை உங்களுக்கு பரிமாறிவிட்டுத்தான் நான் சாப்பிடுவேன்”
உண்பர் சொன்னார் "பரவாயில்லை. என்ன, நான் கடைசியில் ஊறுகாய் பரிமாறும்போதாவது, நான்கைந்து எலுமிச்சங்காய் ஊறுகாய் துண்டுகளை, கொஞ்சம் பதுக்கி வைத்திருக்கவேண்டும். அதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தம்"

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (31-Aug-24, 12:50 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 42

மேலே