“என்கவுண்டர்”

“என்கவுண்டர்”

உயிரோட பிடிக்கத்தான் முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை, பல முறை எச்சரித்தும் தப்பித்து ஓடி கொண்டே இருந்தான். வேறு வழியிலை சுட வேண்டியதாகி விட்டது.
அப்படி இருந்தாலும் நீங்கள் காலில் சுட்டுத்தானே பிடித்திருக்க வேண்டும்? நிருபர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து கேள்வியை கேட்டார்.
உண்மைதான், அவன் காலில்தான் சுடுவார்கள் என்று தெரிந்திருந்தானோ என்னவோ வளைந்து வளைந்து ஓடினான், அதுவும் அவன் ஓடிய இடம் புதர்காடு அதிகமான இடம், எங்களால் இடுப்புக்கு கீழ் குறி வைத்தாலும் அதை புதர்கள் மறைத்தபடியே இருந்தது. அப்படியும் தோளின் கீழ்தான் சுட்டோம், ஆனால் அவன் சட்டென திரும்பிவிட்டான், அது மார்பில் பட்டு விட்டது. விஸ்வனாதன் பேட்டியை முடித்து கொள்வதாக அறிவித்து கிளம்பி விட்டார்.
சல சலவென்று எழுந்த நிருபர் கூட்டம் நாளை எப்படி அவர்களின் பத்திரிக்கையில் எழுதப்போகிறார்கள்? என்பதை யோசித்தபடியே தனது அறைக்கு சென்றார் விஸ்வனாதன்.
அறைக்குள் அவர் எதிரே நின்றிருந்த நால்வரையும் பார்த்தார், அவர்கள் இறுகிய முகத்துடன் அவரை பார்த்தபடி நின்றனர்.
பார்த்தீங்கள்ள, இவங்களை சமாளிக்கறது ரொம்ப கஷ்டமுன்னு, உதயன் உங்க தலைமையில அனுப்பும் போதே பத்திரிக்கைகாரனுங்க என்ன எழுதுனானுங்க? அவர் “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்”, அனேகமா உயிரோட குற்றவாளிய பிடிச்சுட்டு வர்றது சந்தேகம்தான்னு. அதே மாதிரி ஆளை முடிச்சுட்டு வந்து நிக்கறீங்க.
உதயன் தலைகுனிந்து நின்றான். ஏதோ இந்த அளவுக்காவது நிலைமை சமாளிக்கப்பட்டதே.
எதிர்பார்த்தது போலவே மறு நாள் பெரும்பாலான பத்திரிக்கைகள் உதயனால் அந்த கைதி “என்கவுண்டர்” செய்யப்பட்டிருக்க வேண்டும், அதை மறைக்க அவன் தப்பியோடியதாக நாடகம் ஆடுகிறார்கள் காவல்துறையினர் என்று எழுதியிருந்தன.
வீட்டில் நுழைந்தவுடன் அவன் மனைவி இவன் முகத்தில் தென்பட்ட இறுக்கத்தை கண்டவுடன் வேறு எதுவும் பேசாமல் காப்பியுடன் வந்து நின்றாள்.
இரு வந்திடறேன், பின்புறம் சென்று முகத்தில் தண்ணீரை அடித்து கயிற்றில் தொங்கி கொண்டிருந்த துண்டால் முகத்தை அழுந்த துடைத்தான். மனம் சற்று தளர்ந்தது போல் இருந்தது. முன்புறம் வந்தவன் அவள் கையிலேயே வைத்திருந்த காப்பியை வாங்கி கொண்டு பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அலைச்சலுக்கு பின் அவன் கிடைத்தான். அதுவும் அந்த ஊரின் எல்லையில் ஒரு மரத்தின் கீழ் குறுகி படுத்திருந்த நிலையில் பார்த்தார்கள்.
மெல்ல மெல்ல அவனை நால்வரும் வளைத்தபடி நெருங்கினார்கள்.
முகத்தில் சுற்றி வந்த கொசுவை விரட்ட “ஸ்சு” தானாக கையை வீசியபடி கண்ணை திறந்தவன் முன்னால் திடகாத்திரமாய் நான்கு பேர் அவனை பார்த்தபடியே.
புரிந்து கொண்டானோ என்னவோ மெளனமாய் எழுந்து உட்கார்ந்தான். எந்த பரபரப்புமில்லாமல் சிரித்தபடியே வந்துட்டீங்களா?
நீதான் ராசியப்பனாடா? அவன் தலையாட்டினான். சட்டென முகத்தில் அறைய போனான் நால்வரில் ஒருவன். உதயன் அவன் கையை தடுத்து வேணாம், அவன் நம்மளை பாத்து ஓட பார்க்கலை,
இதை கவனித்த ராசப்பன், விடுங்க சார் அவரு அடிக்கட்டும், நான் பண்ணுன தப்புக்கு என்னை அப்பவே கொன்னிருக்கணும்,
அப்புறம் ஏண்டா தப்பிச்சு மூணு நாளா ஒடுன, எங்களையும் அலைய விட்டே? மற்றொரு போலீஸ்காரன் கேட்டான்.
அவன் செத்த உடனே போலீஸ் ஸ்டேசனுக்குத்தான் போகணும்னு நினைச்சேன், ஆனா.., ஏதோ சொல்ல வந்தவன் சட்டென நிறுத்திக் கொண்டான்.
அதை கண்டு விட்ட மற்றொரு போலீஸ்காரன் ஆனா..என்னடா மரியாதையா உண்மைய சொல்லிடு, உள்ளே கொண்டு போனா தோலை உரிச்சுடுவாங்க.
அது எதுக்குங்க? நான் தான் அவனை கொண்ணேன்னு சொல்லிட்டேனுல்லை, அப்புறம் எதுக்கு?
ராஸ்கள் வாயாடா பேசறே? முன்னர் அறைய போன போலீஸ் இப்பொழுது அறைந்தே விட்டான்.
பாவம் ஒரே அறையில் அவன் சற்றி தள்ளி போய் விழுந்தான். விழுந்த நிலையிலேயே சாப்பிட்டு இரண்டு நாளாச்சு, சிரிக்க முயற்சி செய்தான்.
உதயன் மனதுக்குள் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போல் ஆகிவிட்டது, இருந்தால் பதினைந்து பதினாறு வயதிருக்குமா? இவனது பத்து வருட அனுபவத்தில் இவனிடம் தெரிந்த முகத்தில் குற்றக்களை எதுவும் செய்யாத முகம்.
இளமையிலேயே இறந்து போன தம்பியின் முகம் மனதுக்குள் வந்தது.
அவனை கை கொடுத்து எழுப்பியவன், வாடா சாப்பிடலாம், இவர்கள் ஐவரும் அந்த காட்டை தாண்டி வண்டி பாதைக்கு நடந்து வந்தனர்.
சாதாரண் ஓட்டல் ஒன்று இருந்தது. கடைக்காரனிடம் என்ன இருக்கு? அவன் இட்லி தோசை இருக்கிறது என்றான். நால்வருக்கும் இலையை போட சொன்னவன், அவனுக்கும் ஒரு இலை போட சொன்னான்.
கிட்டத்தட்ட ஐந்தாறு இட்லிகளை சாப்பிட்டிருப்பான், பாவம் செய்து விட்ட கொலைக்கு பயந்து ஓடி ஓடி சாப்பிடாமலேயே இருந்திருக்கிறான்.
உதயனுக்கு அவன் மீது பரிதாபம் வந்திருந்தாலும் மனதை கட்டுப்படுத்தி இருந்தான். செல்போனில் அலுவலகத்துக்கு தகவலை தெரிவித்தான். வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னான்.
பாத்து, அவன் ஒரு கொலை மட்டும் பண்ணவனா தெரியலை, நிறைய பேரு அவன் கூட இருந்ததா தகவல் கிடைச்சிருக்கு, அதனால தப்பிச்சு ஓடிடாம அப்படியே கூட்டிட்டு வந்திடுங்க.
இவனா? உதயனுக்கு சிரிப்பு வந்தது, அதே நேரத்தில் அவன் மீது பரிதாபமும் வந்திருந்தது. இனி தகவலை விசாரிக்க அவன் உடலை சித்திரவதை செய்வார்கள். தாங்குவானா? இந்த ஒரு கொலையோடு இவனை முடித்து விடுவார்களா இல்லை…?
என்ன சார் என்னை பிடிச்சிட்டோமுன்னு சொல்லிட்டீங்களா? வெள்ளெந்தியாய் கேட்டான், சார் அன்னைக்கு நான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி செஞ்சிருக்க கூடாது சார், ஆனா அப்படி செய்யலையின்னா என் கழுத்து குரவளையை நெருச்சிருப்பான் சார், அவன் குரவளைய பிடிச்சிருக்கறப்ப எனக்கு தப்பிக்கறதுக்காக வலது கைகிட்ட கிடந்த கல்லை எடுத்து அவன் தலை ஓங்கி அடிச்சேன் சார், அவன் பிடி தளந்துருச்சு, அடுத்த அடியில சாஞ்சிட்டான் சார், அழுதான்.
மெளனமாய் அந்த கிராமத்தை விட்டு நடந்தார்கள், கருமை சூழ்ந்திருக்கும் இருட்டு, மரங்களும் புதர்களூமாய் அடர்ந்து இருந்த பகுதி கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தள்ளி இந்த காட்டுக்குள் மறைவாக ஜீப்பை நிறுத்தி விட்டு இவனை கண்டு பிடிக்க தேடி வந்திருந்தார்கள்.
ஜீப் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்ததும், நால்வரில் ஒருவன் ஜீப்பை சுற்றி வந்து ஓட்டுநர் இருக்கைக்கு செல்ல படி மீது கால் வைக்க போனான்.
சார்..
ஓடுங்க, யானைங்க பக்கத்துல நிக்குது, கத்தினான் ராசப்பன், இவர்களின் சலசப்பில் மிரண்ட யானை ஒன்று பெரும் பிளிறலுடன் இவர்களை நோக்கி வேகமாக வர,
சிதறியபடி ராசப்பனை கண்டு கொள்ளாமல் ஓடினார்கள்

கண் மூடி கண் திறக்கும் நேரம் நடந்து விட்ட நிகழ்ச்சி, தொலை தூரம் ஓடிய பின்பே அவர்களுக்கு ஞாபகம் வந்தது தங்களுடன் ராசப்பன் வரவில்லை.
குற்றவுணர்ச்சியுடன் அவர்கள் மீண்டும் அந்த இடத்துக்கு வந்த பொழுது முணங்கள் சத்தங்களுடன் புதருக்குள் ஒரு உருவம் கிடந்ததை
கவனித்தார்கள்.
பதட்டத்துடன் அருகே சென்று பார்த்தபோது ராசப்பன் வலியினால் முணங்கியபடி கிடந்தான்.
“ராசப்பா” பதட்டத்துடன், நால்வரும் அவனை தூக்கி கீழே கிடத்தும்போதே அவன் உயிர் போய்க்கொண்டிருந்ததை கண்களில் கண்டார்கள்.
சார்.. அந்த வேதனையிலும் சிரித்தான், நான் போறேன் சார்,. எனக்கு தண்டனை கிடைச்சிடுச்சு சார். யானை என்னை தூக்கி வீசிடுச்சு சார்.
கிட்டத்தட்ட நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி ராசப்பன் இறந்து விட்டான் என்று இப்பொழுது சொன்னால், போனில் தகவல் கொடுத்த பின்னால் இது எப்படி நடந்தது? என்று கேள்வி எழுந்து அதற்கு அடுத்து இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்று வந்தால்..!
கடைசியில் அவர்கள் எடுத்த முடிவு…!
உதயனின் பெயர், செய்யாத செயலுக்காக பொது வெளியில் பேசப்பட்டது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Sep-24, 2:56 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே