எதுவும் மாறிவிடவில்லை
அன்பான மகனவன்
அயல்நாட்டு வேலையிலிருக்க
அணுவளவும் ஆடம்பரமின்றி
அவர்வாழ்வு தொடர்ந்திருக்க
கேப்பைக்களி கூழையின்னும்
கேட்டுவாங்கி தினமுன்னும்
தந்தையின் குணத்திலின்னும்
தடுமாற்றம் ஏதுமில்லை!
வத்தக்குழம்பு சோறே
வாய்க்குவாய்த்த வரமென்னும்
வயதான தாயவளின்
வாழ்க்கையில்தான் மாற்றமில்லை
கேள்விக்குறியாய் கூன்கொண்டு
வேள்வியென வாழ்வுக்கோண்டு
வயக்காட்டு கழனியிலே
வாழ்நாளை கழிகின்றார்
மகனனுப்பும் மாதபணத்தை
மடியில்தான் முடிஞ்சிவைத்து
மகன்மனது மகிழும்படி
மனையொன்று வாங்கித்தந்தார்
தன்மான பிழைப்போடு
தரணியில் இவர்மாண்பு
எள்ளளவும் சேதமில்லை
ஏழைக்குணம் மாறவில்லை!