வாசிப்பு

வாசிப்பு
இன்றைய சூழ்நிலையில், மக்களை வாசிப்பிற்கு உட்படுத்த அரசு பல இடங்களில் கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவைகளை நடத்தி கொண்டிருக்கின்றன. இதனால் உடனடி பலன் அபரீதமாக கிட்டா விட்டாலும் ஓரளவுக்கு மக்கள் தங்களை “வாசிப்பில்” ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார்கள் எனலாம்.
நாம் எப்படி “வாசிப்பை” இழந்தோம் என்று பார்த்தால் பல்வேறு அறிவியல் வளர்ச்சியின் பரிணாமத்தில்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டது என்பது தெரியும். முப்பது வருடங்களுக்கு முன் எல்லாம் பொது மக்கள் பொழுதை போக்கும் முக்கிய சாதனங்ககளாக கருதுவது சினிமா, நாடகம், இசை, வானொலி, அடுத்து வாசிப்பு என வரிசைப்படுத்தி விடலாம்.
அதற்கு தகுந்தாற்போல் நம் மாநிலத்தில் ஏராளமாக பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிட்டபடியே இருந்தன. எத்தனை எழுத்தாளர்கள், அவர்கள் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள்,மற்றும் இலக்கிய விசயங்கள். இவைகளை அவரவர் விருப்பப்படியே வாசித்து மகிழ்ந்த வாசகர்கள்தான் எத்தனை எத்தனை..!
வாசிப்பில் பாருங்கள் எத்தனை வகை? கவிதைகள் வாசிப்பவர், சிறுகதைகள் வாசிப்பவர், கட்டுரைகள் வாசிப்பவர், நாவல்கள் வாசிப்பவர், இலக்கியங்களை மட்டும் வாசிப்பவர்கள், தினமும் செய்தித்தாள் வாசிப்பவர்கள், அவ்வளவு ஏன் ? கிசு கிசுக்களை மட்டுமே வாசித்து மகிழ்ந்தவர்கள் கூட நிறைய பேர் உண்டு.
வாசிப்பின் குறைபாடு எப்பொழுது தோன்றியிருக்கும்? வீடுகளில் தொலைகாட்சி என்று ஒன்று உள் நுழையும்போது ஆரம்பித்திருக்கலாம்.
ஒரு செய்தியை அல்லது நிகழ்வை காணொளியாக காட்டும் வாய்ப்பு எப்பொழுது மனிதனுக்கு வாய்க்க பெற்றதோ அப்பொழுது அவனுக்கு வாசிப்பின் பயன் குறைந்து போகிறது.
செய்திதாள்களை அன்று ‘வரி விடாமல்’ வாசித்து அதை கண் முன்னால் காட்சிக்கு கொண்டு வந்து அதை பற்றி பல நண்பர்கள் உரையாடி பகிர்ந்த காலமும் உண்டு. ‘காணொலி’ வந்த பின்னால் அந்த நிகழ்வை ஒவ்வொரு வீட்டிற்குள் இந்த தொலைகாட்சியே கொண்டு சென்ற பின்னால் அவனுக்கு அதை பற்றிய வாசிப்பும் வர்ணனையும் தேவையற்று போய் விடுகிறது. அவன்தான் அதை கண் முன்னால் கண்டு விடுகிறானே?
ஒரு கேள்வி எழலாம் அன்றும் சினிமா இருந்ததே? அதன் மூலம் இவைகள் வாசிப்பு பாதிக்கபட்டிருக்கலாமில்லையா?
சினிமா என்பது முற்றிலும் ‘கற்பனை’ என்று சொல்லாவிட்டாலும் ‘யதார்த்தத்தை’ தாண்டிய விசயங்கள்தான் அதிகம் காட்டப்படுகின்றன. அடுத்து அவர்கள் இவைகளை காட்சிப்படுத்த, கதாபாத்திராங்களை வைத்து நடித்து காட்டுகிறார்கள் என்பதும் மக்களுக்கு புரிந்திருக்கிறது.
உதாரணமாக இராமாயணம், மஹாபாரதம், மற்றும் அந்த காலத்து இராசா இராணி கதைகள் தான் திரைப்படங்களில் கோலோச்சியிருந்தன. அதற்கடுத்து பல வருடங்கள் கடந்த பின்பே ‘மனித வாழ்க்கையின் நிகழ்வுகளை’ கொண்ட படங்களாக எடுக்கப்பட்டு வெளி வந்தன. இவைகளும் காதல், மர்மம், மற்றும் சோகம் இவைகளை அடிப்படையாக கொண்ட கதைகளாக தயாரிக்கப்பட்டு அவைகள் காட்சிகளாக்கப்பட்டு அதற்கேற்றவாறு கதாபாத்திரங்களை நடிக்க வைத்து சினிமாக்களாக நமக்கு காட்டப்பட்டன. பிறகு கொஞ்ச காலம் கழித்து மனிதனின் பலதரப்பட்ட உணர்வுகள், அவனது வாழ்க்கை முறை இவைகளை கொண்ட சித்திரங்களாக திரைப்படங்கள் வெளி வந்தன.
‘வாசிப்புக்காக’ வந்த பத்திரிக்கை, நூல்களும் கூட இப்படித்தான், மஹாபாரதம், இராமாயணம் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு வந்தாலும் சீக்கிரம் மனிதர்கள் மேற்கொண்டிருக்கும் இயல்பு வாழ்க்கையை பற்றிய விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டது.
அடுத்து ஒரு நாவலை, அல்லது கதை, கட்டுரை, இவைகளை எழுதும் ஆசிரியர் அதை பற்றிய உண்மைகளையும், வாசகனுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய நிலைமைக்கு உட்படுத்தபடுவதால், ‘நூலை’ எழுதி வெளியிட அவர் கடுமையாக உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
அடுத்து ‘வாசிப்பின்’ வளர்ச்சிக்கு முக்கிய பங்காக ‘இலக்கியங்கள்’ வேகமாக ஈடுபட்டன. ஒரு கதையையே எடுத்து கொள்ளுங்களேன், எத்தனை வகையாக அவை பிரிக்கப்பட்டு வாசகனிடம் போய் சேருகிறது. காதல், குடும்பம், சமூகம், நகைச்சுவை, மர்மம், இன்னும் எத்தனையோ பிரிவுகள். எந்த பிரிவை விரும்புகிறானோ அந்த வாசிப்பிற்கான உலகத்தில் அவன் நுழைந்து கொள்கிறான். அவனுக்கு தேவையான நூல்களை அளிக்க வேண்டிய பொறுப்பு பதிப்பகத்தாருக்கு சென்று விடுகிறது.
இப்படி வேகமாக வளர்ச்சி பெற்று வந்த “வாசிப்பு” பழக்கம் சட்டென தொலைகாட்சிகள் உள் நுழைதல், அதன் மூலம் செய்திகள், அதுவும் நேரடியாக காண்பித்தல், அடுத்து சினிமா, நாடகங்களை அந்தந்த இடங்களுக்கு சென்று பார்த்து வந்த நிலையை மாற்றி இருப்பிடத்திற்கே, அதுவும் வசதியாக உட்கார்ந்து ஏதோவொரு பணியை கவனித்தபடியே பார்க்கமுடியும் என்னும் சூழ்நிலைக்கு கொண்டு வந்த பின்னால் வாசகன் ஒரு நூலை எடுத்து வாசிக்க முயற்சி செய்வது தானாகவே குறைந்து போனது.
அடுத்தடுத்து வந்த கைபேசி, அதனுடைய பரிணாம வளர்ச்சி, உலகத்து மூலை முடுக்கெல்லாம் சென்று காணொலியாக கொண்டு வந்து கொட்டும் பல கைபேசி நிறுவனங்கள், அடுத்து, அடுத்து, என முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், இன்னும் பல தொடர்பு வசதிகள் ஏற்பட்ட பின்னால் “வாசிப்பு” என்பதே மறந்து போவிடுமோ என்னும் நிலைமைக்கு வந்து விட்டது.
இன்றைய காலகட்டத்தில் “வாசிப்பிற்கு” முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் அதனுடைய சுவை, இன்பம், கற்பனை திறன், வாசித்து முடியும் போது ஏற்படும் கிளர்ச்சி இவைகளை எத்தனை வகை அறிவியல் கருவிகள் வந்தாலும் மனிதனுக்கு வாசிப்பின் அனுபவங்களை கொடுக்கமுடியாது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் உணர்ந்து கொண்டு விட்டான். காரணம் ‘வாசிப்பு’ என்பது நம் கண், மனம், மூளை இவைகளை ஒன்றாக ஈடுபடுத்தி செயல்படும் ஒரு செயல்பாடு, அது தராத இன்பம் என்ன இன்பம்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Sep-24, 9:39 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : vaasippu
பார்வை : 3

சிறந்த கட்டுரைகள்

மேலே