எது சுதந்திரம்
எது சுதந்திரம்...?
22 / 09 / 2024
இளைய சமுதாயமே....!
" சுதந்திரம்" ....நீங்கள் தினமும் அங்கலாய்க்கும் ஒரு வார்த்தை. " எங்கள் சுதந்திரம் பறிபோய்விட்டதே....எங்களை கொடுமைப்படுத்துகிறார்களே..டார்ச்சர் செய்கிறார்களே...தூங்ககூட சுதந்திரம் இல்லை...நண்பர்களோடு பேசுவதற்கு ..சுத்துவதற்க்கு கூடசுதந்தரம் இல்லை. ஏன்? நண்பர்களோடு பேசும்போது கூட கழுகு பார்வைகள்...எத்தனை கட்டுப் பாடுகள்? எத்தனை தடைகள்? என்னவோ இன்டர்நேஷனல் குற்றவாளிகளைப் போல் எங்களை நடத்துவதும்...எங்களை... எங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உளவுத்துறை ஏஜென்ட்டுகளை ( எங்களுடன் இருக்கும் சில புல்லுருவிகளைத்தான் சொல்கிறேன்) அமர்த்தி எங்களின் தனியுரிமையை பறித்து விடுகிறீர்கள்? எங்களின் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள். சுதந்திரமாய் விட்டுப்பாருங்கள்...எல்லாவற்றையும் சாதித்து காட்டுகிறோம். இதுதானே நீங்கள் உரத்து கூவிடும் கூவல்கள். ஒரு விதத்தில் ஒத்து கொள்கிறோம். உங்களுக்கு அந்த திறமை...ஐ கியூ( IQ) நிறையாகவே உள்ளது. அதைவிட உங்களின் வேகம் பாகு படுத்திப்பார்க்கும் திறமை...பாராட்டித்தான் ஆக வேண்டும். பாராட்டுகிறோம்.
" சுதந்திரம்"....எது சுதந்திரம்? அதன் அளவுகோல்தான் என்ன? அதன் வரம்புகள்தான் எவ்வளவு? புரிதலில்தான் இருக்கிறது பிரச்சனை. புரிந்து செயல்படுங்கள் என்று சொல்கிறோம்.
ஒரு கேள்வியும் கேட்காமல்...நீங்கள் சொல்வதையெல்லாம்.. நீங்கள் நினைத்ததையெல்லாம் எதிர்பார்ப்பதையெல்லாம் எவ்வாறேனும் நிறைவேற்றிக்கொள்ளத் துடிப்பதுதான் உங்களின் சுதந்திரமா?. பின் விளைவுகளை பற்றி சிறிதும் பயப்படாமலும், பெற்றோர்க்கு ஏற்படும் மன..பண கஷ்டங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமலும், உங்களின் சுயநலத்தை மட்டும் மனதில் கொண்டு செயல்படுவதுதான் சுதந்திரமா? உங்களின் தனியுரிமையில் தலையீடு என்பது நீங்களாய் கற்பனை செய்துகொள்ளும் உங்களின் பிரச்சனை.
ஒரு உண்மையை இங்கு சொல்ல நினைக்கிறோம். உங்கள் தனி உரிமையில் யாரும் தலையிடவும் முடியாது...உங்களிடம் இருந்து யாரும் தட்டிப் பறிக்கவும் முடியாது. புரிந்து கொள்ளுங்கள். புரிந்து செயல்படுங்கள்.
உங்களை நம்புகிறோம். உங்களின் திறமைகளை மதிக்கிறோம். உங்கள் சுதந்தரத்தை போற்றுகிறோம்.எங்களுக்கு என்ன பயமென்றால்..உங்களை சுதந்திரமாய் விட்டுவிட்டால் ஏடாகூடமாய் ஏதாவது செய்து, எதிலாவது மாட்டிக்கொள்வீர்களோ இல்லை நாம் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த மானம் மரியாதையெல்லாம் எங்கே காற்றில் பறக்க விட்டு விடுவீர்களோ என்கிற பயம்தான். அந்த அச்சம்தான் எங்களின் தூக்கத்தை கெடுப்பதுமில்லாமல்.. எங்களை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. உங்களை நெறிப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் சில வரைமுறைகள் உங்களுக்கு வன்முறையாகி விடுகிறது. "டார்ச்சரில்..." போய் முடிந்து விடுகிறது.
உங்களை ஒன்று கேட்கிறோம்? உங்களை சுதந்திரமாய் விட்டால்... எங்களிடம் ஏன் பொய் சொல்கிறீர்கள்? பல விஷயங்களை ஏன் மறைக்கிறீர்கள்? உண்மையாயும் வெளிப்படையாயும் ஏன் இருக்க மாட்டுகிறீர்கள்? உங்கள் ப்ரைவேசியில் தலையிடுகிறோம் என்று எண்ணாதீர்கள்? எங்கள் அனுபவங்களை உங்களிடம் பகிரும்போது ...கேட்க உங்களுக்கு பொறுமை கூட இல்லை...ஏன்? நேரம் கூட இல்லை. " ச்சே ...இவங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஐயோ.. ஆரம்பிச்சிட்டாங்களே...ஆரம்பிச்சிட்டாங்களே..."என்று அலறுகிறீர்களே. இதுதான் சுதந்திரமா? இந்த சுதந்திரத்தால் மேல்நிலை அடைந்தவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில பேர்தான். விரல் விட்டு எண்ணிவிடலாம். கெட்டொழிந்தவர்கள்தான் ஏராளம். ஒப்புக்கொள்கிறீர்களா? ஒப்புக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் உண்மை அதுதான்.
" கை பேசி" வேண்டும். அதுவும் " ஆப்பிள் " ப்ராண்ட்தான் வேண்டும் அடம்பிடித்து வாங்கிவிடுகிறீர்கள். நம் வீட்டின் நிலைமையை பற்றி சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. மற்ற நண்பர்களிடம் இருக்கிறது. நாமும் வாங்கி " கெத்து" காட்ட வேண்டும் என்பதுதான் உங்களது ஒரே லட்சியம். ஒரே குறிக்கோள். சரி..நம் பிள்ளைதானே என்று கடனை உடனை வாங்கி..வாங்கி கொடுத்து விடுகிறோம். அதன் பின் நடப்பதுதான் உச்சம். அதில் என்னென்ன "ஷார்ட்கட் " உண்டோ ( ஸ்க்ரீன் லாக்,,,பேட்டன் என்று ஏதேதோ.. எங்களுக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை ) அத்தனையையும் செய்து, உங்களின் தனி உரிமையை ப்ரைவேசியை நிலை நாட்டி எங்களை ஏமாற்றிவிட்டோம் என்று " கெத்து" காட்டித் திரிவதுதான் உங்கள் சுதந்திரமா? "காஸ்டலி" பைக்தான் வேண்டும் என்று ஆடம் பிடித்து வாங்கி...அதில் எவ்வளவு வேகம் போக முடியுமோ அத்தனை வேகம் போய் உங்கள் வீரத்தை நிலை நாட்டுவதும்...பல சமயம் காலொடிந்து.. கையொடிந்து...படுக்கையில் கிடைக்கும் போதும், சில சமயம் உங்கள் இன்னுயிரை விட்டு விடும்போது, பெற்ற வயிறு என்ன பாடுபடும் என்று நினைத்து பார்த்திருக்கிறீர்களா? கடைசிவரை படுக்கையில் கிடைக்கும் நிலை வந்துவிட்டால், அப்பவும் நாங்கள்தானே உங்களை காப்பாற்ற வேண்டும். நாங்கள் காப்பாற்றுவோம். அது வேறு விஷயம். ஆனால் இதுதான் உங்கள் சுதந்திரமா?
" செல்பி " மோகம் இப்போது தலை விரித்து ஆடுகிறது. எதை செய்தாலும் உடனுக்கு உடன் வாட்சப்பில் பகிர்ந்து கொல்லுகிறீர்கள். நல்லதை... சந்தோஷத்தை... பகிர்ந்துகொண்டால் சரி. உங்கள் போட்டோக்களை பகிர்தல், உங்களின் அந்தரங்க விஷயங்களை பகிர்தல், ஒளிவு மறைவின்றி காதலை பகிர்தல் ஏன் சில சமயம் காதலியையும் பகிர்தல்.. அதற்கு சாட்சி பொள்ளாச்சி...மதுரை..போன்ற சம்பவங்கள். இன்னும் வெளிச்சத்திற்கு வராதது எவ்வளவோ? இதுதான் உங்கள் நாகரீகமா?.இதுதான் உங்கள் சுதந்திரத்தின் வெற்றியா? இதையத்தனையும் நீங்கள் அனுபவிப்பதோ இல்லை மாட்டிக்கொண்டு முழிப்பதோ எங்களது வியர்வையும்..ரத்தமும்தான். தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் அது தெரிந்ததுதான். சொல்லிக்காட்ட வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. அத்தனை வேதனையோடும் கண்ணீரோடும் சொல்லும்படி எங்களை இந்த இக்கட்டான நிலைக்கு தள்ளியதும் நீங்கள்தான். வேறு வழியில்லாமல் இதை உங்களோடு பகிர்கிறோம்.
நாங்களும் உங்கள் பருவத்தைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னால் உடனே..வாய்ப்புகளே இல்லாத அந்த காலத்திலேயே நீங்கள் என்னென்ன செய்தீர்கள். உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் நீங்கள் செய்யாததையா? நாங்கள் செய்துவிட்டோம் என்று எங்களுடன் வாதிடுக்கிறீர்கள்.என்ன செய்ய? எங்களால் உங்கள் பருவத்தையும்... நிலைமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விதத்தில் உங்களை கண்டு பரிதாபப் படுகிறோம்.உங்களுக்குத்தான் எத்தனையெத்தனை இடர்பாடுகள்.. முட்டுக்கட்டைகள்.. கவனஈர்ப்புகள்..சவால்கள்.. எங்கள் காலத்திலும் இருந்ததுதான்.இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் அதிகம்தான். அதனால் ஏற்படும் மனச் சிதைவுகள் உங்களுக்கு அதிகம்தான். தோல்விகளை எதிர்கொள்ளும் மனவலிமை எங்களிடம் அதிகமாக இருந்தது. போட்டிகள் குறைவாக இருந்ததும் ஒரு காரணமாகிவிட்டது. உங்களுக்கு போட்டிகளும், சவால்களும் அதிகம்தான். வெற்றியை கொண்டாடும் அளவிற்கு தோல்வியை ஒத்துக்கொள்ள உங்களுக்கு மன வலிமை இல்லாமல் போயிற்றே. அதை ஏற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை. எல்லாவற்றிலும் போராட்டம்தான். போராடித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. அந்த விரக்த்தியில் நீங்கள் எடுக்கும் அவசர.முடிவுகளால்தான் எல்லா குளறுபடிகளும்.. அறிவுப்பூர்வமாக இல்லாமல் உணர்வுபூர்வமான முடிவுகளால்தான் உங்கள் சுதந்திரம் பறிபோகின்றது. நாங்கள் மட்டும் அதற்க்கு காரணமில்லை. சில சமயம் எங்கள் பங்கும் சிறிதளவு உண்டு என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். எதுவானாலும் உங்கள் நன்மையை கருதிதான். நம்புங்கள். பருவத்தில் வரும் உடல் மாற்றங்கள், ' ஹார்மோன்ஸ் ' செய்யும் மந்திர ஜாலங்கள், எதையும் உடனே ...நினைத்த நொடியே கிடைத்திட வேண்டும்..அனுபவித்து விடவேண்டும் என்கின்ற வேகம், மனதினை கட்டுப்படுத்த பொறுமையும் இல்லாமல் போய்விட்டது. ' நண்பன் ' திரைப் படத்தில் வரும் வசனம்போல் ' வாழ்க்கை ஒரு ரேஸ். ரன்..ரன்..ஓடிக்கொண்டே இரு. வேகம் குறைந்தால் மற்றவர் உன்னை முந்தக் கூடும்'. எல்லோரும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். மெதுவாய் ஓடினாலும் ஆபத்து. வேகமாய் ஓடினாலும் ஆபத்து. விழுந்தால் அவ்வளவுதான். விழுந்தாலும் எழுந்துகொள்ள மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டும். நாங்களும் அந்த ரேஸில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். வளர்ந்து விட்ட விஞ்ஞான முன்னேற்றங்கள் எங்களுக்கும் ஒரு சவால்தான். பாவம்தான் நீங்கள். என்ன செய்வது? ஓடுவதை நிறுத்த முடியாதே..
“'செல்போன்" ஒரு விஞ்ஞான அதிசயம்தான். அற்புத கண்டுபிடிப்புதான். உலகையே கைக்குள் அடக்கி விட்ட ஒரு மந்திரவாதிதான். அதை உபயோகிப்பதில்தான் சிக்கல் இருக்கிறது. நன்மைகளோடு சேர்ந்து பல குப்பைகளும் கொட்டிக் கிடக்கிறது. அதன் உபயோகங்கள் பல பலதான்.ஒத்து கொள்கிறோம். அது இல்லையென்றால் ஒரு அணுவும் அசையாது. உண்மைதான். அதிலேயே மூழ்கி முத்தெடுக்கப் போவதாக நம்பி, வெறும் சிப்பிகளை பொறுக்கி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்தான் அதிகம். இந்த உண்மையும் உங்களுக்குத் தெரியும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெற்றியடைந்த சிறுபான்மையினரை உதாரணம் காட்டி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்.எங்களையும் ஏமாற்றுகிறீர்கள். உலகத்தையும் ஏமாற்றுகிறீர்கள்.
உங்களை நம்பவில்லையென்று சொல்கிறீர்களே... எங்கே உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். உங்களை நம்பாமலா நீங்கள் அடம் பிடித்து... டார்ச்சர் செய்து ..' பிளாக்மெயில்' செய்து கேட்ட அத்தனையும் வாங்கிக் கொடுத்தோம்.உங்கள் மேல் இருக்கும் பாசம் ஒரு புறம் ..உங்கள் முகத்தில் பூக்கும் சந்தோஷ பூக்கள் ஒரு புறம், என் குழந்தையிடம் கூட இந்த நவீன வசதிகள் இருக்கிறது என்கின்ற பூரிப்பு மறுபுறம் என்று எங்கள் கஷ்டங்களை மறந்து..மறைத்து உங்களுக்கு வாங்கிக் கொடுக்கிறோம். கையில் கிடைக்கும் வரை சாம...தான..பேத.....தண்டம் என அத்தனை சாகசங்களையும் செய்து வாங்கி விடுகிறீர்கள். கையில் கிடைத்த அடுத்த நிமிடம் நாங்கள் உங்களுக்கு எதிரிகள் ஆகி விடுகிறோம்..' கோட் வேர்ட்ஸ்'... வித்தியாசமான... தனித்துவமான ரிங்க்டோன்ஸ் என்று எங்களை ஏமாற்ற என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வது நீங்கள்தானே. ஒரு விவாதத்திற்கு ஒன்றை சொல்ல நினைக்கிறேன்.' எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.சந்தேகப் படாதீர்கள்.' என்று சொல்கிறீர்களே அந்த நம்பிக்கையை உடைத்தது யார்? சந்தேகம் வரும்படி நடந்து கொள்வது யார்?. .நடு ஜாமத்தில் குசு..குசு..என்று பேசுவது. ம்..ம்.. என்று சத்தம் கேட்க்காமல் பேசுவது, பக்கத்தில் வந்தால் டக்கென்று போனை ம்யூட்டில் போடுவது இல்லையென்றால் ஆப் செய்வது, பார்த்துக்கொண்டிருந்த ஸ்டேட்டஸையோ...ஸ்டோரியையோ மாற்றி விடுவது என்று அத்தனை கேம்களையும் செய்வது யார்? மனதில் குற்றம் இல்லையென்றால் ஏன் அப்படி செய்ய வேண்டும்? செய்வதெல்லாம் செய்து விட்டு..எங்களை சந்தேகப் படாதீர்கள்...எங்கள் சுதந்திரம் பறி போய்விட்டது...எங்கள் தனிமையில் குறுக்கிடாதீர்கள் என்று கூப்பாடு போடுவதில் என்ன பிரயோஜனம்? இல்லை எந்தவிதத்தில் இது நியாயம்?
நாங்கள் உங்களை நம்புகிறோம். உங்களை நம்பாமல் உலகத்தில் யாரை நம்பப் போகிறோம்? நீங்கள் நாங்கள் பெற்ற செல்வங்களல்லவா? எங்களை நம்பாமல் எங்களை துவேஷிப்பதும் துரோகியாக பாவிப்பதும்...நம்பிக்கைத் துரோகமில்லையா? நீங்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் நாங்கள்தானே ஓடோடி வருகிறோம்.நீங்கள் எங்களை நம்புங்கள்.
நாங்கள் கொடுத்த சுதந்தரத்தை விட நீங்களாகவே எடுத்து கொண்ட சுதந்திரம்தான் அதிகம். இன்னொன்றும் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நீங்கள் மட்டும்தான். உங்களால் மட்டும்தான் முடியும். சுதந்திரமாய் இருந்தால்தான் அது சாத்தியப்படும். சுதந்தரத்தை புரிந்துகொள்ளுங்கள். கிடைத்த சுதந்தரத்தை பொறுப்போடும் பொறுமையோடும் உபயோகித்து வாழ்க்கையில் முன்னேறப் பாருங்கள். எதுவும் அளவாய் உபயோகித்தால் அமிர்தம். அளவு மீறினால் விஷமாகிப் போய்விடும். உங்கள் சுதந்திரம் பறிபோகாமல் உங்களுடனே பத்திரமாய் இருக்கிறது.எப்பவும் இருக்கும். நம்பிக்கையோடு சுதந்திரமாய் வானில் பறந்து வாழ்க்கையை ரசியுங்கள்...அனுபவியுங்கள்.நீங்களே கூண்டிற்குள் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். புரியும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.