சுவாமி விவேகானந்தர் வழியில் பாரத மக்களே முன்னேறிச் செல்லுங்கள்
அறிவாற்றல் பொருந்திய தூய்மை மிக்க 100 இளைஞர்கள் முன் வாருங்கள் …இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்…
நீங்கள் உண்மையில் எனது குழந்தைகளானால் எதற்கும் அஞ்ச மாட்டீர்கள் சிங்கங்களாக திகழ்வீர்கள். இந்தியாவையும் உலகம் முழுவதையும் நாம் விழிக்க செய்ய வேண்டும் கோழைத்தனம் கூடவே கூடாது.
இவ்வாறெல்லாம் உங்களை அழைக்கும் மாமனிதர் வேறு யாருமல்ல …. சுவாமி விவேகானந்தர்..
அவர் வழி செல்ல நாம் ஆயத்தமா ? ..
சுவாமி விவேகானந்தர் வழியில் பாரத மக்களே முன்னேறிச் செல்லுங்கள் என்ற தலைப்பின் கீழ் பேசுதல் நான் பெற்ற வரம்…
எதிர்கால இந்தியா நமது உழைப்பை பொறுத்துதான் அமைந்திருக்கிறது .இந்திய தாய் இப்பொழுது உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். இந்தியாவை முன்னேற்றம் அடைய செய்ய விரும்பினால் ,நமது நாட்டு பாமர மக்களுக்காக , நாம் வேலை செய்தாக வேண்டும்
நாட்டின் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிய செயல்களில் ஈடுபட்டால் தேசத்தின் வளர்ச்சி தானாகவே வந்தடையும்…
சமுதாயமாகிய பெரிய மரத்தின் வேர் முதற்கொண்டு உச்சி கிளை வரையில் உள்ள முழு அளவிலான சீர்திருத்தமே நான் பெரிதும் விரும்புகின்றேன்..
கடந்த நூறு ஆண்டுகளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் எல்லா சீர்திருத்தங்களும் வெறும் அலங்காரமாக தான் இருக்கின்றன... உண்மையா இல்லையா ? என்பதை நம் மனம் தான் ஆராய வேண்டும்.
நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டு மக்கள் பெ ற்றிருக்கும் கல்வி , அறிவாற்றல் ஆகியவற்றை பொருத்தே இருக்கின்றது.. ஆனால் , இன்று நாம் பெற்றிருப்பது உண்மையான கல்வியா? உண்மையான அறிவாற்றலா?
மதத்தாலும், இனத்தாலும், பொருளாதாராத்தாலும் பாகுபட்டு கிடக்கும் நம்மில் எது உண்மை? எது பொய் ? என்பதை கண்டறிவதே சிக்கல்...
கல்வியைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் விவேகானந்தர் மனப்பாங்கு எப்படி இருந்தது என்பதை அறிவோம்...
நாம் முன்னேற, நமது நாடு முன்னேற , கல்வி ஒன்றே இப்போது நமக்குத் தேவை …கல்வி, தன்னம்பிக்கை இவற்றின் மூலமே நம்முள் மறைந்து இருக்கும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்த முடியும்… வெறும் விஷயங்களை சேகரிப்பது கல்வி இல்லை.
வாழ்க்கையின் நோக்கம் என்ன ? அதன் பயன் என்ன ? என்பதை அறிவதே உயர்தர கல்வியின் குறிக்கோளாய் இருக்க வேண்டும். சுயநலம் ஒழுக்கக்கேடு, சுயநலமின்மையே நல்லொழுக்கம்… இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்கக் கூடிய ஒரே இலக்கணம்.
மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரண தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்…
தான் யார் என்பதை அறிவது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்..
அத்தகைய உண்மையான கல்வி, பொய்மை களைந்த ஆன்மீகப் பாகுபாடற்ற உண்மையான கல்வியை நாம் பெறுதல் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும்
அடுத்ததாக மதம்..
மதம் மனிதனை பண்படுத்துவதற்காக தானே தவிர , பிரிவினை படுத்துவதற்காக அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.. பாமரனை பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்தும் நோக்கமே மதம்..
மதம் எங்கே வியாபாரம் ஆகி, வியாபார முறையில் நடைபெறுகிறதோ அங்கே ஆன்மீகம் அழிந்து போகிறது..
மூடநம்பிக்கை மனிதனுக்கு பெரும் பகை… அதை விட கொடுமை மதவெறி...
தூய்மையும், ஒழுக்கமுமே எப்பொழுதும் மதத்தின் முக்கிய நோக்கங்களாக அமைய வேண்டும்...
உண்மையில் நீங்கள் கடவுளை கண்டிருந்தால் யாருடனும் சண்டையிட மாட்டிர்கள்..
அன்பு நிலைத்திருக்கும் …உங்களை ஆட்டுவிக்கும்....
அத்தகைய அன்பு நிறைந்த மதக் கொள்கைகளைக் கொண்டு, மக்களிடம் பிளவுகள் அற்ற மனப்பான்மையை விதைத்தால், நாளைய பாரதம் செழித்தோங்கும்..
உங்கள் மதம் உண்மையான ஆன்மாவை வளர்ப்பதாக அமைய வேண்டும்..
பயிற்சி பெற்ற மனமும் , மனிதனும் தவறு செய்வதே இல்லை….மனம் என்னும் கருவி மூலமே அனைத்தையும் நாம் அறிகிறோம். நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை...
உங்கள் குழந்தைகளுக்கு தைரியமாக வாழ கற்றுக் கொடுங்கள். அதன்படி வளர்க்கவும் செய்யுங்கள்… பலவீன எண்ணத்தை சடங்கு சம்பிரதாயங்களையும் அவர்களுக்கு புகட்டாதீர்கள் …தைரியத்தோடு தன்னம்பிக்கையோடும் வாழுமாறு பழக்குங்கள்...
நாம் திருந்திய வாழ்க்கை நடத்தினால் உலகம் திருந்தி செம்மையுறும்...
பிறரை வெறுத்து ஒதுக்குவதன் மூலம் எந்த மனிதனும் , எந்த சமூகமும் , எந்த நாடும் முன்னேற முடியாது என்பதை உணர்ந்து , நமது ஒற்றுமையை நிலை நாட்ட விவேகானந்தரின் அறிவுரைகளை ஏற்று வாழ்வோம்…
மீண்டும் சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகளோடு உங்களை அழைக்கிறேன் …
நீங்கள் உண்மையில் எனது குழந்தைகளானால் எதற்கும் அஞ்ச மாட்டீர்கள் , சிங்கங்களாக திகழ்வீர்கள். அறிவாற்றல் பொருந்திய தூய்மை மிக்க 100 இளைஞர்கள் முன் வாருங்கள் …இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்... இன கலவரம் அற்ற, மதக்கலவரமற்ற பிற உயிர்களையும் தன் உயிர் போல் நேசிக்கும், உண்மையான ஆன்மீகம் நிறைந்த மனிதர்களை உருவாக்குவதே விவேகானந்தரின் பாதை …அந்தப் பாதையில் நாமும் நடந்து பிறரையும் நடக்கச் செய்வோம்...
பாரத மக்களே முன்னேறிச் செல்லுங்கள் அவர் வழியில்........நன்றி வணக்கம்…..