உங்களுக்காக ஒரு கடிதம் 44
உங்களுக்காக ஒரு கடிதம் 44
15 / 09 / 2024
அன்புத் தோழரே...
மீண்டும் எழுதுகிறேன். மரணம்...என்னை பாதித்த..என்னை சிந்திக்க வைத்த சில மரண நிகழ்வுகளைப் பற்றிய பதிவை இங்கு பதிவிட விழைகிறேன். எத்தனையோ மரணங்களுக்கு செல்கிறோம். ஒவ்வொரு மரணத்திற்கு போகும்போதும் நம் மனதில் தோன்றும் பல விதமான உணர்வின் தொகுப்பாய்த்தான் எழுத நினைக்கிறேன். பொதுவாய் எழுதாமல் என் சொந்தங்களின் மரண நிகழ்வுகளையும் அதனால் எனக்குள் ஏற்பட்ட சில மாற்றங்களை உங்களோடு பகிர்ந்திட துணிகிறேன். இதே போன்ற உணர்வு போராட்டம்...உணர்வு குமுறல்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் தோன்றி இருக்கலாம். நீங்களும் அதை அனுபவித்தும் இருக்கலாம். உங்களுக்கும் இதே உணர்வு இருந்தால் நம் சிந்தனையும் நம் எண்ண அலைகளும் ஒரே அலைவரிசையில் பயணிக்கின்றன என்று எடுத்து கொள்வோம். அப்படி இல்லையென்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
முதலில் என் தந்தை, என் தாயின் மரணம்.பெரிய இழப்புதான்.ஆனால் மரணத்தை வெல்ல யாரால் முடியும்? முதலில் என் தந்தை இறந்த போது அம்மா அந்த இழப்பை எப்படித் தாங்கப் போகிறார்கள்? என்று பயந்து கொண்டிருந்தேன். அவர்கள் வாழ்வில் அவர்களுக்குள் நடந்த இன்ப துன்பங்கள், அவர்களுக்குள் நடந்த நல்ல விஷயங்கள், கசப்பான அனுபவங்கள், ஒற்றுமை வேற்றுமைகள், பிள்ளைகளை வளர்ப்பதில் அனுபவித்த லாப நஷ்டங்கள் அத்தனையும் அவர்களின் கண்ணுக்கு முன்னால் வந்து போயிருக்கும். எல்லாம் முடிந்து போய்விட்டதே. எல்லாவற்றிற்கும் அவரையே சார்ந்து வாழ்க்கையை ஓட்டி விட்டோமே. இனி எல்லாவற்றையும் நாம் தனியே சமாளிக்க வேண்டுமே. என்ன செய்யப் போகிறோம்? என்று அவர்களின் எண்ணக்குவியல்கள்.உணர்வு குமுறல்கள் அவர்களை ஊமை ஆக்கி மௌனமாய் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கும் என்று நம்புகிறேன். எனக்குள்ளோ வேறு மாதிரியான உணர்வு எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. என் குழந்தை பருவம்...பள்ளிப் பருவம்...கல்லூரி கல்யாண வாழ்க்கை.அதில் என் தந்தையின் பங்கு..அர்ப்பணிப்பு...தியாகம் எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து வந்து போய் கொண்டிருந்தது. நான் முறையாக அவரை கவனித்து கொண்டேனா? அவரது தேவைகள் கனவுகள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்றி விட்டேனா? தெரியவில்லை. அதற்குள் எல்லாம் முடித்து விட்டதே..." டேய் மயானத்தில் கட்டணம் கட்டணும். வேனுக்கு..பூ அலங்காரத்துக்கு...பண்டாரத்துக்கு காசு கொடுத்துறேண்டா..நீ தைரியமா இருடா. அம்மாவுக்கு நீதான் ஆறுதலாவும்..ஆதரவாவும் இருக்கணும். அதுக்கு நீ தைரியமாய் இருக்கனும்டா. சரி..சரி..அடுத்த காரியமெல்லாம் அந்தந்த நேரத்துக்கு நடக்குன்னும் இல்லையா. வாடா வந்து குளிச்சிட்டு வேஷ்டியை கட்டுடா..." என்ற என் நண்பனின் குரல் என்னை இந்த உலகத்திற்கு இட்டு வந்தது.
அடுத்து என் அம்மா இறந்த போதும் அதே நினைவுகள் அதே உணர்வுகள் மீண்டும் வரிசை மாறாமல் நடந்தேறியது. ஆனால் எரியூட்டு மேடையில் நடந்தது என்னை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. எல்லா சாங்கியங்களும் முடிந்து அந்த மின்சார எரியூட்டு மேடையில் கதவு திறப்பதற்காக அம்மாவின் உடல் அந்த தள்ளு வண்டியில் தயாராக இருந்தது. அந்த தகன ஊழியர் தயாராக தள்ளு வண்டியை உள்ளே தள்ளும் கருவியில் கை வைத்து கொண்டு "எல்லோரும் ஒரு முறை முகத்தை பார்த்துக்கோங்க... தம்பி அம்மா நெஞ்சில அந்த கற்பூரத்தை ஏற்றி கும்பிட்டுக்கோப்பா. " என்று சொன்னான். நானும் கற்பூரத்தை ஏற்றிவிட்டு என்னை பெற்றெடுத்து... பாலூட்டி சீராட்டி வளர்த்த என் அம்மாவை கண்கலங்க தொழுதேன். எத்தனை தடவை.. ஏன்? ஒவ்வொரு தடவை நான் வெற்றி பெற்றாலும்... நான் தவறு செய்தாலும்... என்னை பாராட்டியும் என்னை ஆதரித்தும், அடித்தும்... கோபித்தும் என் பக்கம் நின்ற என் தாய்.. எப்போதும் சிரித்த முகத்துடன் என் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யாமல்...என் முகமும் மனமும் கோணாமல் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் ஓடி ஓடி செய்த என் அம்மா இப்போதோ ஆடாமல் அசையாமல் நான் ஏற்றிய கற்பூரம் சுடுவது கூட உணராமல்...உடல் சில்லிட்டு ..அந்த புன்னகை மட்டும் மாறாமல் அடுத்த பெரு நெருப்புக்கு...அக்கினி பிரவேசத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். "எல்லோரும் நல்லா பார்த்துக்கோங்க. இப்போ கதவு திறக்கும். சில வினாடிகள்தான். மூடிடும். மறுபடியும் ஒரு வினாடி திறக்கும். அப்புறம் மூடிடும் " ஊழியர் அந்த கருவியின் புல்லியில் கையை வைத்து இழுத்தார். கதவு திறந்தது. உள்ளே ஜெகஜோதியாய் ஒரு ஒளிப்பிழம்பு என் முகத்தில் அறைந்தது. அம்மாவின் உடல் நான் ஏற்றி எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தோடு மெல்ல மெல்ல அந்த ஒளிப்பிழம்பில் கரைந்து கொண்டிருந்து. கொஞ்சம் கொஞ்சமாய் தீயின் நாக்குகள் என் அம்மாவின் குளிர்ந்த உடலை சுவைக்க துவங்கியது.கதவு மூடத்தொடங்கியது. அடுத்த நொடியில் மீண்டும் கதவு திறந்தது. அம்மாவின் உடல் முழுதும் தீ நாக்குகள் சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாக விழுங்கத் தொடங்கியதால் அந்த அறை முழுதும் உஸ்...உஸ்...என்று சப்தத்துடன் குப்பென்று மஞ்சள் நிறத்தில் எரியத் தொடங்கியிருந்தது. கதவும் மெல்ல..மெல்ல மூடத்தொடங்கியது. என் விழியும் கண்ணீர் திரையால் என் பார்வை மறைத்து உலகமே கலங்கி உயிரோட்டங்கள் ஸ்லோ மோஷனில் நகர்ந்து கொண்டிருந்தது.
அதே போல் என் மைத்துனரின் மரணம்...எதிர்பாராத ஒன்றாய் அமைந்து விட்ட ஒரு நிகழ்வு. அதே வரிசையில் நடை பெற்ற ஒரு மரணம். இதில் நான் ஆச்சரியம் அடைந்தது ஈரோட்டில் பள்ளிப்பாளையத்தில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான ஒரு எரியூட்டு மையத்தில் நடந்ததை உங்களோடு பகிர்வதில் முழுமை அடைவதாக எண்ணுகிறேன். ஆச்சரியம் எரியூட்டு மையத்தின் வெளி வாயிலிலேயே தொடங்கி விட்டது. உள்ளே தாரை தப்பட்டை..வெட்டு வெடி..ஆட்டம் பாட்டம் என்று எதற்கும் அனுமதியில்லை. அமரர் ஊர்தியிலிருந்து பேட்டரி காருக்கு உடலை மாற்றி உள்ளே எடுத்துப் போனார்கள். உள்ளே காலை வைத்தவுடன் " ஓம் " என்று அந்த பிரணவ மந்திரத்தின் ஒலி...பின் உள்ளே இருக்கும் சாங்கியங்கள் செய்ய ஒரு மேடை வரைக்கும் அந்த உடல் பேட்டரி காரில் கொண்டு வந்து...அந்த மேடையில் வைத்து இறுதிச் சடங்குகளையையும் முறைப்படி செய்து ..அதன் பின் மறுபடியும் பேட்டரி காரில் ஏற்றி தகன மேடைக்கு எடுத்து செல்கிறார்கள். தகன மேடையை இரண்டாகப் பிரித்து..நெருங்கிய உறவுகள் தகன மேடைக்கருகிலும் மற்ற உறவுகள் நண்பர்கள் வசியதாக உட்கார்ந்து பார்க்க இருக்கையுடன்,மேடைக்கு எதிரில் கண்ணாடி ...குளிர்சாதனையூட்டப்பட்ட அறை ஒதுக்கப்பட்டிருக்க சரியாக காண மூன்று தொலைக்காட்சி பெட்டியும் அமைத்திருக்கிறார்கள். அதைவிட உள்ளத்தை உருக்குவது "ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க...பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவி கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்று சாம்பலும் எங்கே?" என்ற பாடல் செவிகளை நிரப்பி கண்களை குளமாக்கி வைத்து விட்டது.
அதோ அந்த தீயில் நீ கொண்ட கோபம்...அகங்காரம்... ஆணவம்...அகந்தை... ஜாதி... சமயம்... பணம்... பட்டம்...பதவி...பேர்...புகழ் எல்லாம் எரிந்து சாம்பலாகி கொண்டிருக்கிறதே. இன்னுமா? நீ திருந்தவில்லை. வேதம் சொல்வதையெல்லாம் இந்த மரணம் சொல்லிக்கொடுக்கிறதே.இதை விட நீ திருந்த உன்னை சரி செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. இன்று அவன்... நாளை நீ...புரிந்து கொள். " மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க..தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க..பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க...போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க..." பாடல் என் உள்ளத்தை ஊடுருவி ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் அப்படித்தான் என நம்புகிறேன்.
தொடரும். .