சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்

சின்ன வெங்காயம்: ஏம்பா, உன்னைத்தான் ஜனங்க அதிகம் உபயோகப்படுத்தறாங்க. என்னை அதிகமாக கண்டுகொள்வதில்லை.

பெரிய வெங்காயம்: ஏம்பா இப்படி கண்ணீர் விடாத குறையாக வருத்தப்படுறே? என்னை உரித்து, துண்டு போடுவது உன்னை உரித்து துண்டு போடுவதை விட மிகவும் சுலபம் என்பதால்தான், என்னை, குறிப்பாக வீடுகளில் தினமும் உபயோகப்படுத்துகிறார்கள்.

சின்ன வெங்காயம்: இருந்தாலும் சிலர் மற்றவர்களை ஏளனம் செய்கையில் 'என்ன பெரிய வெங்காயம்' என்று நக்கலாக உன்னைப்பற்றி பேசுகிறார்கள்.

பெரிய வெங்காயம்: அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயத்துக்குத்தான் மவுசு அதிகம். வீட்டுல தினமும் சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் வைக்கமாட்டாங்க. அதைப்போல, வெயில்காலத்துல மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளக்கூட உன்னைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். என்னைவிட நீதான் அதிக அளவில் ஒருவர் உடலின் சூட்டினை குறைக்கிறாய். சின்ன வெங்காயம் போட்டு செய்தால்தான் பிஸிபேளா பாத் ஜோராக இருக்கும்.

சின்ன வெங்காயம்: ஓ, இப்போ புரிந்துப்பா. எல்லா வெங்காயத்துக்குமே வாழ்வு இருக்கு. ஆனால், அது மனிதர்களின் சுவை நாடும் தேவை மற்றும் அதன் விலையை பொறுத்து இருக்கிறது.

பெரிய வெங்காயம்: சரியா சொன்னாய் சின்னா. என்னை கிலோ பத்து ரூபாய்க்கும் விற்கிறார்கள். அவ்வப்போது கிலோ நூறு ரூபாய்க்கும் விற்கிறார்கள். அதனால்தான், சில நேரங்களில் ஹோட்டேல்களில், வெங்காய சட்னியை தவிர்த்துவிட்டு,தேங்காய் சட்னி மட்டும்தான் வைப்பார்கள். வெங்காய சட்னியை மட்டுமே இட்லி தோசைக்கு கொடுத்தால், சாப்பிட வருபவர்கள் கொஞ்சம் முனுமுனுப்பார்கள், ஏன் தேங்காய் சட்னி இல்லையா என்று வாயை பிளந்தபடி கேட்பார்கள். அந்த விஷயத்தில், தேங்காய்க்கு எப்பவுமே நல்ல மவுசு.

சின்ன வெங்காயம்: சரியாகத்தான் சொல்கிறாய் அண்ணா. அந்த விஷயத்தில் என் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. உங்களைப்போல என் விலை அவ்வளவு கீழும் போகாது, ஒரேடியாக மேலேயும் ஏறாது. இதுல ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?

பெரிய வெங்காயம்: சொல்லேன்ப்பா. கேட்டுக்கறேன்.

சின்ன வெங்காயம்: நம் இருவரின் தோலை உரித்தாலும், உரிப்பவருக்கு கண் எரிச்சல் வரும், ஏன், சிலருக்கு அழுவதுபோல கண்களில் கண்ணீர் பொங்கும். அதனால், அவ்வப்போது அவர்களுக்கு எரிச்சலாகக் கூட இருக்கும் இருக்கும். சிறிது கோபம் வரக்கூடவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்தாலும், நம்மை உபயோகிப்பதை மக்கள் ஒரு நாள்கூட நிறுத்துவதில்லை.
பெரிய வெங்காயம்: கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புன்னு சொல்வது போல, அன்றாட உணவுகளில் சேர்ந்து அதன் சுவையை கூட்டுவதால், கண் எரிந்தாலும் மக்கள் அதை கண்(டு) கொள்ளாமல், நம்மை ஏராளமாக வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

சின்ன வெங்காயம்: பெருங்காயம் இல்லாமல் கூட சமையல் செய்துவிடலாம். ஆனால், வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை.

பெரிய வெங்காயம்: நம்மிடம் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம்மை அடிக்கடி உபயோகிப்பவர்களுக்கு கேன்ஸர் வரும் வாய்ப்பு குறைவு. நாம் நல்ல கிருமிக்கொல்லி. ரத்தத்தை சீர் செய்கிறோம். சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறோம். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நம்மை உபயோகிப்பதால் பெரும் நன்மை. தம்பி, உனக்கு தெரியுமா. நம்ம பெயரை வச்சி சில சினிமா பாடல்களும் வந்திருக்கு.

சின்ன வெங்காயம்: சொல்லண்ணே, எந்தெந்த பாடல்களில்?

பெரிய வெங்காயம்: ‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகள் பிரமாதம்’ என்ற மிகவும் பழைய மாயாபஜார் படப்பாடலில் ' வெங்காய பஜ்ஜி அங்கே, சூடான சொஜ்ஜி இங்கே" என்ற வரிகள். இன்னொண்ணு இளையராஜா இசையமைப்பில் எண்பதுகளில் வந்த ஒரு திரைப்படத்தில், 'வெங்காய சாம்பாரும் வேகாத சோறும் கிடைக்கிற இடம் எங்க மெஸ்ஸு' என்ற வரிகள்.

சின்ன வெங்காயம்: இதையெல்லாம் கேட்க வெங்காய அல்வா மாதிரி இருக்கு. என்னுடைய தாத்தா ஒருநாள் என்னிடம் சொன்னார் " இதோ பாரு சின்னா, எந்த காய் இல்லையென்றாலும் உருளை, தக்காளி வெங்காயம் இருந்தால், சும்மா சமையலை பூந்து விளையாடலாம்"

பெரிய வெங்காயம்: அவர் சொன்னது மிகவும் சரிதான். உருளையும் தக்காளியும் நம்முடைய இரண்டு கண்கள் போல. எப்படி அன்பான கணவனும் மனைவியும் ஒன்றாகி விடுகிறார்களோ, அதுபோல நாம் உருளையுடனும் தக்காளியுடனும் எப்போதும் ஐக்கியம் ஆகி விடுகிறோம்.

சின்ன வெங்காயம்: ஆஹா, நமக்கு எவ்வளவு நல்ல பெயர் இந்த மக்களிடத்தில். இருந்தாலும், நமக்கு ஒரு குறை அண்ணே.

பெரிய வெங்காயம்: அது என்ன தம்பி?

சின்ன வெங்காயம்: நம் தோலை உரிக்கும்போது, மின்விசிறியை உபயோகிக்க முடியாது.
பெரிய வெங்காயம்: ஓ, ஆமாம். மிகவும் லேசான நம் தோல் அங்கே இங்கே என்று எங்கும் பறக்கும். அங்கங்கே கீழே விழும். இதனால் நம் தோல்களை ஒன்று கூட்டுவது ஒரு வேலையாகிவிடும்.

சின்ன வெங்காயம்: அதற்கு நான் ஒரு நல்ல யோசனை சொல்லட்டுமா?

பெரிய வெங்காயம்: சொல்லு உன் வெங்காய யோசனனை.

சின்ன வெங்காயம்: குளிர்சாதன அறையில் வைத்து வெங்காயத்தை உரித்தால், அப்படி பறக்காது. உரிப்பதும், துண்டு செய்வதும் எளிதாக, வியர்வை இன்றி முடிந்து விடும்.

பெரிய வெங்காயம்: இந்த ஆலோசனையை சொல்லச்சொல்லி எந்தெந்த AC நிறுவனங்கள் உனக்கு பணம் கொடுத்தார்கள்?

சின்ன வெங்காயம்: அப்படி ஒண்ணும் பெரிய வெங்காய பணம் எதுவும் தரவில்லை அண்ணா.

பெரிய வெங்காயம், உருண்டு வேறு இடத்திற்கு நகர்ந்தது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Sep-24, 11:15 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 114

சிறந்த கட்டுரைகள்

மேலே