உங்களுக்காக ஒரு கடிதம் - 43

உங்களுக்காக ஒரு கடிதம் - 43
05 / 09 / 2024

அன்பு தோழர்களே..
மீண்டும் நீண்ட இடைவெளி வந்து விட்டது. மன்னிப்பு கேட்கப் போவதில்லை.ஒரு சமாதானமும் சொல்லப் போவதில்லை. இடைவெளி வந்து விட்டது. அவ்வளவுதான். என் சோம்பேறித்தனம்... நேரமின்மை... ஏனென்றால் ஒவ்வொருமுறையும் இப்படி செய்துவிட்டு மன்னியுங்கள் என்று சொல்வது எனக்கே ஒரு மாதிரியாகதான் இருக்கிறது. அதனால் அவ்வப்போது எழுதுகிறேன். என் எண்ண குமுறல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
செப்டெம்பர் வந்து விட்டது. வேளாங்கண்ணி நோக்கி நடை பயணம் தொடங்கி விட்டது. ஆந்திராவிலிருந்து...சென்னையிலிருந்து.... பாண்டியிலிருந்து...பெங்களூரிலிருந்து... திருவண்ணாமலையிலிருந்து... தமிழ்..தெலுங்கு..கன்னட ஊர்களிலிருந்து கூட்டம் கூட்டமாய் சாரை சாரையாய் ஆண்கள் பெண்கள்...சிறுவர் சிறுமியர் கால்நடையாய் போய்க்கொண்டே இருக்கிறார்கள். மாதாவின் தரிசனத்துக்கு.
ஒவ்வொரு வருடமும் தை மாசமோ...இல்லை பங்குனி மாதமோ முருக பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து ...தங்கள் தலை மேல் ப்ரோகிதரால் வைக்கப்படும் புனித நீர் நிரப்ப பட்ட " தீர்த்த காவடி" எனும் அந்த மங்கள குடங்களை சுமந்தபடி தங்கள் பாத யாத்திரையை தொடங்குகின்றனர் . நாளொன்றுக்கு சுமார் 20 திலிருந்து 35 கிலோமீட்டர் நடந்து தை பூசம் அல்லது பங்குனி உத்தரத்திற்கோ பழனியை சென்றடைந்து முருகனை தரிசனம் செய்கின்றனர் பக்த கோடிகள்.
இதே போல்தான் அய்யப்பன்....திருவண்ணாமலை தீப கிரிவலம் ...முஸ்லீம் சகோதரர்கள் போகும் மெக்கா புனித யாத்திரையும்..முகரம் பண்டிகையின் போது தங்களையே காயப்படுத்திக்கொண்டு நோன்பு எடுத்து கொண்டாடுவதும் தொடர் கதையாய் நடக்கிறது. இதையெல்லாம் உற்று நோக்கும்போது எனக்குள்ளே பல குழப்பங்களும் ஏன்? கோபங்களும் உண்டாகின்றன.தயவு செய்து உங்கள் மனதை புண்படுத்துவதாகவோ இல்லை மதங்களுக்கு எதிரானவனோ இல்லை கடவுளுக்கு எதிரான.. நம்ப மறுக்கும் நாத்திகனோ என்று எடுத்து கொள்ள வேண்டாம். மன நெருடலை உங்களோடு பகிர்கிறேன். புண்படுத்துவது என் நோக்கமல்ல. அப்படி புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து இந்த பதிவை மறந்து விடுங்கள்.
இதைப்போல் நோம்புகளும்...விரதங்களும்...யாத்திரைகளும்... உடல் வருத்தி பிராத்தனைகளும்... தீ மிதி...அலகு குத்துதல், கத்தியால் கீறி கொள்ளுதல்...தலையில் தேங்காவை உடைத்து கொள்ளுதல்...மிளகாய் கரைசல் குளியல்..கொதிக்கிற எண்ணையில் வெறுங்கையினால் வடைசுடுதல்..மொட்டை போடுதல் போன்ற நேர்த்தி கடன்கள் பெரும்பாலும் யார் செய்கிறார்கள்? என்று உற்று நோக்குங்கள். கீழ் நடுத்தர குடும்பம் இல்லை நடுத்தர குடும்ப நண்பர்கள் தான்.. பெரும்பாலும் இது போன்று கடுமையான நேர்த்தி கடன்களை செய்கின்றனர். அவர்களின் அறியாமை...அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை... தெய்வத்தின் மேலிருக்கும் அசைக்க முடியா நம்பிக்கையும் பயமும்தான் இவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகோலாய் அமைந்து விடுகிறது. நமக்கு எல்லாம் கொடுக்கும் இறைவனுக்கு நாம் கொடுக்க என்ன இருக்கிறது? என்று எண்ணி தம்மைத்தாமே வருத்திக்கொள்ள துணிகிறார்கள்.
இவர்களின் துன்பத்திற்கு தெய்வம் செவி சாய்க்கிறதோ? இல்லையோ? அது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு போகும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையோ அங்கீகாரமோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். லட்சோப லட்ச கூட்ட நெரிசலில் நசுங்கி..கசங்கி இடிபட்டு அடிபட்டு கர்ப்பகிரகத்தில் ஒரு வினாடிக்கு குறைவாக நின்று வேண்டுதலை மறந்து..தெய்வத்தை கண் மூடி திறந்து பார்ப்பதற்குள் தள்ளப்பட்டு, வெளியில் சக்கையாய் தூக்கி எறியப்படும் அவலங்கள்தான் தொடர்கின்றன.
அதே சமயம் மேல்தட்டு மக்கள் தங்களின் பண பலத்தாலும்...பதவி பலத்தாலும்...புகழ் பலத்தாலும் போட்டிருக்கும் பட்டு வேஷ்டியும்...பட்டு சட்டையும் கொஞ்சமும் கசங்காமல்...பூர்ண கும்பம், நாதஸ்வரம் மாலை கஜ மரியாதைகளோடும்... கற்பக்கிரத்தில் தெய்வத்தின் முன் பல மணிநேரம் உட்கார்ந்து அபிஷேகம்... ஆராதனைகளை கண் குளிர கண்டு..வெளியில் வந்து தங்க ரதம்... வெள்ளிரதத்தை கை நோகாமல் ...உடல் நோகாமல் உட்பிராகாரத்தில் இழுத்து போகவும்.கொடுத்து வைத்த ஜீவாத்மாக்கள். இந்த ஓரிடத்தில்தான் எனக்கு ஒரு சந்தேக விதை விழுந்து விருட்சமாய் வளர்ந்து என்னைத் தூங்க விடாமல் செய்துவிட்டது. மேல் தட்டுக்கும் ...கீழ் தட்டுக்கும் நடக்கும்...நடந்து கொண்டிருக்கும் இந்த வேறுபாடுதான் நான் நாத்திகன் ஆனதுக்கும் ...ஆவதற்கும் ஒரு காரணமாயிற்று. அந்த சந்தேகத்தை உங்களிடம் பகிர்ந்து விட்டேன். முடிவை உங்களிடமே விட்டு விட்டேன்.
தொடரும்
.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (5-Sep-24, 8:54 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே