தாம்பூலப்பையில் உள்ள ரகசியம்

தாம்பூலப்பையில் உள்ள ரகசியம்

நானும் என் மனைவியும் சென்னையில் வாழ்ந்த அடுக்கு மாடி கட்டடத்தில் முப்பத்தியாறு
குடியிருப்புகள் இருந்தன. அவை ஆறு கட்டிடங்களில் எதிர் எதிராக அமைத்து ஒவ்வொரு
கட்டிடத்திலும் ஆறு ஆறு குடியிருப்புகளாக அமைக்க பட்டிருந்தன. அவைகளில் இருக்கும்
முதியவர்களும்,பெரியவர்களும், குழந்தைகளும் நடுவே அமைக்கப்பட்ட செடிகள் நிறைந்த பார்க்
போன்ற இடத்தில் மாலைவேளைகளில் சந்தித்து பேசி ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டு நேரத்தை
கழிப்பதுண்டு. ஒரு நிகழ்வு ஏதாகிலும் நடப்பதென்றால் அதற்கான வழி முறைகளை அங்கு அமர்ந்து
முடிவு செய்வது வழக்கம். இதனால் பல நன்மைகள் உண்டு எல்லோரும் எல்லோருக்கும் உதவிசெய்து
அந்த வீட்டின் விசேஷத்தையோ அல்லது பண்டிகையையோ சிறப்பாக அமைத்து நடத்துவார்கள் .
குழந்தைகளும் பெற்றோர்களும் சனி ஞாயிறு நாட்களில் கூடி விளையாடுவதும் குடியிருப்பின் நலனை
குறித்து சர்ச்சை செய்து அதை சரி செய்ய வேண்டியவற்றை பற்றி உரையாடுவதும்
நிகழும்.இன்னாட்களில் படிப்பிற்கு வேண்டிய கணினியைப் பற்றி கூறி அதை எடுத்து வந்து
குழந்தைகளுக்கு அதைப்பற்றி விளக்கி அவர்களை அதில் அமர்த்தி பழக வைத்து அவர்களது
பெற்றோர் அதைக் கண்டு தங்கள் குழந்தைகளின் அறிவு திறனை அறியவைத்து கணினியை
விற்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வேன்.
இந்த முயற்சி வெற்றி அடைத்து பல கணினிகள் விற்க வழி வகுத்திட,சென்னையில் இருக்கும் அடுக்கு
கட்டிடங்களில் எல்லாம் என்னுடைய விற்பனையாளர்களை இதே போல் செய்ய வைத்து கணினியின்
விற்பனையைப் பெருக்கினேன்.இதனால் எனக்கு பதவி உயர்வு கிடைத்தது.என்னை இந்தியாவின்
விற்பனை அதிகாரியாக நியமித்தனர்.
கடந்த பல ஆண்டுகளில் பல ஊர்களுக்கு சென்று இதே முறையை பயன்படுத்தி கணினியின்
செயல்பாடுகளைப் பள்ளிகளிலும் காட்டி அது எவ்விதம் மாணவர்களின் படிப்பை உயர்த்துகிறது என
எடுத்து உரைத்து ஒவ்வொரு பள்ளியிலும் அதை விற்பனை செய்து கணினியின் பயன்பாட்டை
அதிகரித்தேன். இப்படியே வாரம் நான்கு நாட்கள் வெளியூர் சென்று சென்னைக்கு சனி அல்லது
ஞாயிறு வந்து சேர்வேன். குழந்தைகள் பெரியோர்கள் யாவரையும் பார்த்து பேசி சந்தோஷமாக மாலை
பொழுதை கழிப்பது என் வழக்கம்.
என் மனைவியும் என் மகளும் அந்த அடுக்கு கட்டிடத்தில் மிகவும் பிரபலமானவர்கள். எல்லோர்
வீட்டிலும் அவர்களுக்கு இடம் உண்டு.வாழ்க்கை மிக மகிழ்ச்சியோடுசென்றது. நாட்கள் மாதங்களாகி
வருடங்களாக உருண்டோடியது.குழந்தைகளும் பெரியவர்களாக வளர்த்தனர்.சிலரை பார்த்தால்
இவர்களா குழந்தைகளாக இருந்தனர் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.பல குழந்தைகளுக்கு திருமண
வயது வந்துவிட்டது என அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு வரன் தேட ஆரம்பித்தனர். ஒரே நாள்
எங்கள் வீட்டின் எதிரில் உள்ள குடும்பம் எங்கள் வீட்டிற்கு வந்து அவர்களது ஒரே மகளின் திருமணம்
நிச்சியமானதை மகிழ்வோடு கூறி மாப்பிளை நெதர்லாண்டில் வேலை செய்வதாகவும் திருமணம்
முடிந்து இரண்டு வாரங்களில் இருவரும் அங்கு செல்வார்கள் என்றும் சொல்ல நாங்களும் அவர்களிடம்
எங்கள் வாழ்த்தை தெரிவித்து கண்டிப்பாக திருமணத்திற்கு வருவோம் என்று கூறினோம். என்
மனைவி அவர்களிடம் எதாவது உதவி தேவைப்பட்டால் கேட்கும் படி சொன்னாள்.அவர்களும்
அதற்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றனர். அவர்கள் சென்றவுடன் நாங்கள் எங்களுக்குள் பேசி

கொண்டோம் பெண்கள் எவ்வளவு சீக்கிரம் பெரியவராகி வாழ்க்கைப் பொறுப்பை எடுத்துக்கொள்ள
தயாராக இருக்கிறார்கள் என்று.பின் அந்த பெற்றோர்களை பற்றி பேச்சு வந்தபொழுது ஒரே
குழந்தையை வெளியூர் அனுப்பி விட்டு அவர்கள் எவ்வாறு அவள் இல்லாமல் இருப்பார்கள் என
நினைக்கையில் எனக்கு கண் நிறைந்தது. என் ஒரே பெண்ணை நினைத்து நானும் அந்த நிலையை
பற்றி யோசனையில் மூழ்கினேன். என் மனைவி என் முதுகை தட்டி உணவு உட்கொள்ள
அழைத்தாள்.என் மகளும் அவளும் சிரித்து கொண்டு உணவு உட்கொள்ளும் டேபிளில் அமர்ந்தனர்.
நான் முகத்தை தண்ணீரால் துடைத்து கொண்டு வந்து உணவு அருந்த அமர்ந்தேன். அப்பொழுது
என் மனதில் தோன்றியது அந்த உன்னதமான கவியரசரின் வரிகள்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
என் மகளை பார்த்து கொண்டு அவர் எழுதியதை நினைத்து அதன் உண்மையை உணர்ந்து
வியந்தேன்.
என் மனைவியும் மகளும் என்னையே பார்ப்பதை அறிந்து சிரித்தவாறு என் மகளை கண்ணா நீ
ரொம்ப அழகா இருக்கே என்று கூறி உணவை அருந்த துடங்கினேன். நாங்கள் உணவு உண்ட பின்
சிறிது நேரம் நடந்து விட்டு படுக்க செல்வது வழக்கம்.அதன் படி வெளியே சென்றதும் குல்பி விற்பவன்
அங்கு வாசல் கேட்டில் வந்து குரல் கொடுக்க நானும் மகளும் அதை சென்று வாங்கி கொண்டு
வீட்டிற்கு விரைந்தோம்.என் மனைவி தனது வேலைகளை முடித்து விட்டு சமையல் அறையை சுத்தம்
செய்து கொண்டிருந்தாள்.நாங்கள் அவளுக்கு ஒரு குல்பி கொடுத்து அவளை மகிழ வைத்தோம்.
எல்லோரும் பின் அவரவர் அறைகளுக்கு சென்று அன்றைய நாள் போனதை நினைத்தவாறு கட்டிலில்
படுத்தோம்.
அடுத்த வாரம் எதிர் வீட்டு திருமணம் ஆகவே என்னிடம் நீங்கள் இங்கேயே இருந்து வேலை
செய்யுங்கள் வெளியூர் செல்ல வேண்டாம் என மனைவி கூறிவிட்டு தூங்கினாள்.
அடுத்த சிலநாட்கள் எதிர் வீட்டில் கல்யாணத்திற்கு உதவி செய்வதில் எல்லோருடனும்
நாங்களும் கலந்து கொண்டோம். திருமண மண்டபத்தில் உள்ள வசதிகளைக் கண்டு வர மாலையில்
சென்றோம். கல்யாண சமையலுக்கு யாரை வைக்கலாம் என்ற சர்ச்சையில் பல இடங்களுக்கு செல்ல
வேண்டி இருந்தது என்னுடைய காரில் அவர்கள் வந்தனர்.வண்டியில் இருக்கும் பொழுது அவர்கள்
பெண் திருமணம் ஆகி வெளிநாடு சென்றதும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசி அது
தனிமையாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருக்கும் எனக் கூற எனக்கு உணர்ச்சி பெருகி கண்களில் நீர்
நிறைந்தது. இன்னும் சில வருடங்களில் என் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் நமது
வாழ்க்கையும் இவ்வாறு தான் ஆகும் என்ற நினைப்பு என்னை ஆட்கொண்டது.
அன்று எதிர் வீடு பெண்ணின் திருமணம் நாங்கள் யாவரும் அங்கு சென்று காலை முதல் மாலை வரை
இருந்து இரவு விருந்தையும் சாப்பிட்டு விட்டு அவர்களிடம் விடை பெற்று கொண்டு மணமக்களை
வாழ்த்தி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம் தாம்பூல பையுடன். வீட்டுக்கு வந்து கொஞ்சம் நேரம்

கழித்து கவிதாவின் அம்மா என் மனைவி தாம்பூலபையில் என்ன என்ன இருக்கிறது என்று பார்த்துக்
கொண்டிருந்தாள்.
வழக்கம் போல் சில வெற்றிலைகள் கூடவே ஒரு நிஜாம்பாக்கு பொட்டலம், ஒரு குடுமி தேங்காய்
கூடவே பாலீத்தீன் கவரில் கடலை மிட்டாய் என்று உள்ளே இருந்தவற்றை வெளியே எடுத்துப்
பார்த்தவள் அட இது என்ன இவ்வளவு பெரிய கல்யாணத்தில் கேவலமாய் இப்படி ஒரு கடலை
மிட்டாயை போட்டிருக்கிறார்கள்? ஒரு எக்ளர் சாக்லெட்டாவது போட்டிருக்க கூடாதா? என்றவாறே
எல்லாவற்றையும் பைக்குள் திரும்பப் போட்டாள்.
ஏன் இந்தக் கடலைமிட்டாய் என்ற கேள்விக்கு எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. நாங்கள் இதை
பற்றி சிந்திக்கும் வேளையில் எதிர் வரிசையில் உள்ள குடியிருப்பில் இருக்கும் வயதான தம்பதியர்
ஆட்டோவில் வந்து இறங்கிட நான் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து எங்கள் சந்தேகத்தை
தெரிவித்தேன். அவர்கள் உடனே
பொதுவாக திருமணம் நடத்தும் வீட்டின் கடைசி கல்யாணம் என்றால் அந்தத் திருமணத் தாம்பூல
பையில் இப்படி கடலை உருண்டை அல்லது கடலை மிட்டாயை போடும் பழக்கம் உண்டு.
இனி எங்கள் வீட்டில் திருமணம் ஆக வேண்டிய வயதில் ஆணோ பெண்ணோ இல்லை என்ற
செய்தியை திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நாகரிகமாகத் தெரிவிக்கும் விதத்தில் இந்த பழக்கம்
நடைமுறையில் இருந்து வருகிறது.
கடலை உருண்டை அல்லது கடலை மிட்டாய் அடங்கிய தாம்பூல பை அந்த வீட்டின் கடைசி
திருமணம் என்ற செய்தியை குறிப்பாக தெரிவிக்கிறதாம்.
பொதுவாக மொய் எழுதுவது என்பது திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய வட்டி இல்லாத கடன் என
எண்ணிய காலத்தில் இதுதான் இறுதி வாய்ப்பு என்று வந்தவர்களுக்கு உணர்த்துவதற்கு
ஏறபடுத்தப்பட்ட சாங்கியமாக கூட இது இருக்கலாம்.
நம் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட நமது பண்பாட்டின் சிறப்புகளில் இதுவும் ஒன்று என நினைத்து
அவர்களுக்கு நமது மனமாற நன்றியை தெரிவிப்போம்.
இன்று திருமணங்களில் பல மாற்றங்கள் வந்து விட்டன வெளிப்படையாக பேசுவதும் பரிசுகளைக்
கேட்டு பெறுவதும் சிலநேரங்களில் தம்பதியர் தமக்கு வேண்டியவற்றை ஒரு லிஸ்ட் போட்டு
கணினியில் லிங்க் ஏற்படுத்தி அதில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதும்
வழக்கமாகி அனுமதிக்கப் பட்டுள்ளது. இதில் பல நன்மைகள் உள்ளன.குறிப்பாக ஒரே பொருளைப்
பலர் அன்பளிப்பாகக் கொடுத்து அதனால் அதை என்ன செய்வது என்பவை குறைந்து
வேண்டியவைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால் கொடுப்பவர்க்கும் கொள்பவருக்கு மிக்க
மகிழ்ச்சி ஏற்படுகிறது.

எழுதியவர் : கே என் ராம் (15-Oct-24, 9:46 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 23

மேலே