அறுபது நிமிடம் இருபதாகும் விந்தை
அறுபது நிமிடம் இருபது ஆகும் விந்தை
என் அப்பாவும் அம்மாவும் கேரளாவில் பாலக்காட்டில் உள்ள கல்பாத்தி கிராமத்தில் பிறந்து படித்து வளர்த்தவர்கள். அப்பா கல்லூரிப் படித்து முடித்தவுடன் கல்யாணம் என்ற என் தாத்தாவின் ஆசைப்படி என் அம்மாவை மணம் செய்து கொண்டார் . வேலையின் காரணம் அப்பா சென்னைக்கு வந்தார்.முதலில் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர்.அங்கு வாழும் பொழுது என் அம்மா மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். பின்னர் தங்களுக்கு என்று ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற ஒரு நிச்சியத்தோடு மேற்கு மாம்பலத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி அங்கு குடியேறினார்கள் . அந்த வீட்டிற்கு வந்தப்பின் நான் பிறந்தேன் என்னுடைய அதிர்ட்ஷ்டம் தான் சொந்த வீட்டில் பிறந்தது என்று சொல்லி அம்மா என்னிடம் மிக ஆசையோடு கொஞ்சுவாள். கடைகுட்டி பிள்ளையானதால் என்னிடம் என் அண்ணாக்களும் அப்பாவும் மிகுந்த அன்பாக இருந்தனர். எனக்கு வேண்டிவைகள் உடனே கிடைத்தன.அப்பாவின் பிரியத்தை முழுமையாக அனுபவித்த மகன் நான் தான். எனக்கு அழகா பெயர் வைக்க வேண்டும் என்று மோகன சுந்தரம் எனப் பெயர் வைத்து எல்லோரும் சுந்தர் அல்லது மோகன் எனக் கூப்பிட்டனர். .
வருடங்கள் உருண்டோடின நான் படித்து பட்டம் பெற்று வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அண்ணாக்களுக்கு கல்யாணம் முடிந்து அவர்கள் மனைவியுடன் சென்னையை விட்டு வட இந்தியாவிற்கு வேலை காரணம் சென்றனர்.அம்மா அப்பாவுடன் நான் தங்கி இருந்து சென்னையிலேயே வேலை செய்து வந்தேன். அப்பா ஒரு நாள் இரவு பாத்ரூம் போய் வந்தவர் தூங்கி கொண்டிருந்த பொழுது தனக்கு நெஞ்சு வலி என்று கூறி திரும்பி படுத்தார் நான் அவரிடம் எவ்வாறு உள்ளார் எனக் கேட்க அவர் மூச்சு சிறிது தடையோடு வருவது போல் தோன்றியது உடனே நான் பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் சென்று அவரை அழைத்து வந்தேன் அவர் வந்து எங்களிடம் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் என்று கூறி அவர் மூச்சு சீராக இல்லை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவும் எனச் சொல்லிட நான் அப்பாவிடம் அதை கூறச் சென்றதும் அப்பா தனது கடைசி மூச்சை இழுத்து விட்டார். அதிகாலைப் பொழுதில் இந்த செய்தி எங்களை உலுக்கியது.நான் என் அண்ணாக்களுக்கு தொலைபேசியில் செய்தியைச் சொல்லிவிட்டு அவர்கள் வரும் வரை காத்திருந்து பின் செய்யவேண்டியவைகளை செய்து முடித்தோம்.
அம்மாவுடன் நான் வாழ்ந்து அம்மாவிற்கு வேண்டியவைகளைச் செய்து கொடுத்து அந்த வீட்டிலேயே இருந்து வேலைக்கு சென்று வந்தேன். என் அம்மாவுடன் அவளது வீட்டு மாடியில் நான் தங்கினேன். எனக்கு அம்மா திருமணம் செய்வது பற்றி பேச தொடங்கினாள் நானும் "அம்மா பார்க்கலாம் "என்று கூறிக் கொண்டே நாளைக் கடத்தி வந்தேன். நான் ஒரு கணினி உற்பத்திசெய்து விற்கும் ஒரு முன்னணி அலுவலகத்தில் விற்பனை அதிகாரியாக இருந்தேன்.
முதல்முறையாக எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண் பொறியாளர் வந்து சேர்த்தாள். தன் பெயர் யாழினி என்று எங்கள் எல்லோரிடமும் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவள் மிக அறிவாளியாகவும் புத்தி கூர்மையுள்ளவளாகவும் இருந்தாள்.அவள் வந்த பின் கணினி விற்பனை செய்தபின் வாங்கியவர்களிடம் இருந்து வரும் புகார்கள் குறைந்தன. கணினி கொண்டு கொடுத்த பிறகு அவர்களுக்கு அதை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை ஒரு நாள் பயிற்சி முகாம் வைத்து அவள் சென்று அவர்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் நீக்கினாள்.அவளை பற்றிய கருத்து மற்றும் விமர்சனங்கள் நன்றாக இருந்ததால் அவளுக்கு வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு ஆனது.
யாழினி எல்லோரிடமும் சகஜமாக பழகி கணினி வாங்கியவர்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றாள். அவர்கள் மீண்டும் மீண்டும் அவளையே எதற்கும் அழைத்தனர். இதனால் எங்கள் விற்பனை அதிகரித்தது.அவளது செயல் திறமை என்னை கவர்ந்தது.
நான் அவளிடம் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்து எங்கள் கணினியை பற்றிய பல விஷயங்களை அறிந்துகொண்டேன்.
நாங்கள் இருவரும் கணினி விற்பனைக்கு சேர்ந்து பல இடங்களுக்கு சென்று பல ஆர்டர்கள முடித்து வந்தோம். எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது.ஒரு நாள் அவளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அம்மாவிடம் அறிமுக படுத்தினேன். அம்மாவிற்கும் அவளது பண்பு மிக்க பேச்சும் செயலும் பிடித்தது.சில மாதங்கள் சென்றபின் ஒரு நாள் அம்மா யாழினியைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு வரச் சொன்னாள். நான் யாழினியிடம் இதைக் கூறியவுடன் அவள் தான் படித்தது பம்பாய் நகரத்தில் என் அம்மாவும் அப்பாவும் கேரள நாட்டை சேர்த்தவர்கள். அப்பா அங்கு துறை முகத்தில் வேலை செய்து வந்தார்,அம்மா மாத்துங்காவில் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தாள் என்று கூறினாள். அம்மாவிடம் இதைக் கூறியவுடன் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. கண்ணா உனக்கு யாழினியை பிடித்திருக்கிறதா என்று அம்மா வினவினாள்.இந்த எதிர்பார்க்காத கேள்வி என்னைத் தூக்கி வாரிப்போட்டது.நான் அம்மாவையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தேன். அம்மா நான் யாழினி இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம் அதைத் தவிர இதைப்போல் நினைத்துப் பார்க்கவில்லை என கூறினேன்.அன்றிரவு தூங்குவது சிறிது தாமதமானது.மனதில் பல எண்ணங்கள் தோன்றின. அடுத்த சந்திப்பில் யாழினியிடம் இதை பற்றி கேட்டகலாம் என்ன கூறுகிறாள் என்று பார்க்கலாம் என முடிவெடுத்தேன். யாழினியுடன் ஒரு வாடிக்கையாளரை சந்திக்க சென்று மதிய உணவை ஒரு பெயர்பெற்ற ஹோட்டலில் சாப்பிட சென்றபொழுது மெல்ல அவளிடம் என் இஷ்டத்தை சொன்னேன் அவள் தனக்கும் அதில் உடன்பாடு உள்ளது எனக்கூறி தன்னுடைய பெற்றோரிடம் அடுத்தநாள் இதைப்பற்றி பேசப் போவதாக சொன்னாள். நான் மிக மகிழ்ச்சியோடு என் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நடந்ததை கூறினேன் அம்மாவும் மிக மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒரு மாத காலத்தில் எங்கள் திருமணம் நிச்சியமானது.யாழினி வீட்டார் கேரளாவில் தத்தமங்கலம் கிராமத்தில் எங்கள் திருமணத்தை விமரிசையாக நடத்தினர். என் அண்ணாக்களும் அவர்களது மனைவிகளும் குழந்தை சகிதம் வந்து எங்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.ஒரு வாரம் அந்த கிராமத்தில் இருந்து பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டபின் சென்னைக்கு வந்தோம்.
நாங்கள் இருவரும் ஒன்றாகவே வேலைக்குச் சென்று வந்தோம்.வேலைக்குச் சென்று வீட்டிற்கு நாங்கள் வருவதற்குள் பொழுது சாய்ந்து இரவு தொடங்கி இருக்கும். வீட்டில் அம்மா நாங்கள் வேலைக்குச் சென்று வரும் பொழுது எங்களுக்கு வேண்டிய இரவு உணவைத் தயாராக்கி சூடாக வைத்திருப்பாள். அவளது கைப்பக்குவமும் அன்புகலந்த உபசரிப்பும் வேலைக்கு சென்று வரும் அலுப்பையும் சோர்வையும் அகற்றிவிடும்.அம்மா என்னையும் என் மனைவியையும் ஒரு வேலையும் செய்ய விடமாட்டாள். எல்லாவற்றையும் நான் செய்து கொள்கிறேன் எனக் கூறி காலை முதல் இரவு வரை வீட்டை சுத்தம் செய்வதிலும் சமையலறையில் உணவு சமைப்பதிலுமாக இருப்பாள்.
அவளது இந்த இடைவிடாத உழைப்பும், அன்பும் எங்கள் இருவரையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது.எங்களது இந்த இன்பமான வீட்டைப் பற்றி கவலைப்படாத இந்த வாழ்க்கைக்கு ஒரு முற்று புள்ளியாக எங்கள் அலுவலகம் எங்களை பதவி உயர்வளித்து வட இந்தியாவிற்கு மாற்றல் செய்தது . அம்மாவிடம் நாங்கள் முதலில் எங்கள் பதவி உயர்வை கூறினோம் இதை கூறியபொழுது அவள் மிக சந்தோஷத்துடன் அந்த செய்தியைக் கேட்டு எங்கள் இருவரையும் வாழ்த்தினார். ஒரு வாரம் சென்றது பின் நாங்கள் அவளிடம் எங்கள் இட மாற்றலையும் சில நாட்களில் அங்கு செல்ல வேண்டியதையும் கூற அவள் சிறிது வேதனை அடைந்தாள் மறு வினாடியே எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து நல்லபடியாக இருங்கள் எப்பொழுது என் உதவி வேண்டுமென்றாலும் உடனே சொல்லுங்கள் என்றாள். நாங்களும் ஒரு கனத்த இதயத்தோடு அம்மாவிடம் விடை பெற்று டெல்லிக்கு பயணமானோம். டெல்லிக்கு வந்து சிலமாதங்களில் யாழினி அந்த மகிழ்ச்சியான தான் உண்டாகி இருக்கும் செய்தியை கூறினாள்.நானும் அவளை வாழ்த்தியவாறு மிக கவனமாக இருக்கும் படி சொல்லிவிட்டு அம்மாவிற்கு இந்த நல்ல செய்தியை தெரிவித்தேன். அம்மா எங்களைத் தொலைபேசி வழி ஆசீர்வதித்து என்ன உதவி வேண்டுமானால் உடனே அழைக்குமாறு கூறினாள். இறையருளால் எங்களுக்கு ஒரு அழகான பெண் பிறந்தாள்.அவளைக் கையில் எடுக்கும் பொழுது இறைவனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்.வேலையில் பல பாராட்டுக்கள் வாங்கி பரிசு பெற்றாலும் பதவி உயர்வு பெற்றாலும் இந்த ஒரு சந்தோஷத்திற்கு ஈடுயிணை இல்லை. அம்மாவை டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வந்து எங்களுடன் சில மாதங்கள் தங்க வைத்தோம்.அவள் தனது பேத்தியை பார்த்து பரமானந்தம் அடைந்தார். குழந்தைக்கு பவித்ரா என்று பெயர் சூட்டியதை தெரிவித்தோம். அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தையை தனது மடியில் வைத்துக்கொண்டே இருந்தாள். தன் கால்களை நீட்டி அதில் குழந்தையை வைத்து நன்றாக எண்ணை தேய்த்து பொறுக்கும் அளவில் வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக குளிப்பாட்டி விடுவாள்.குழந்தை தொட்டிலில் நன்றாக உறங்கும்.யாழினிக்கு அவள் வந்தது மிக உதவியாக இருந்தது.அம்மா புறப்பட்டு சென்றதும் அவளுடைய அம்மா வந்து உதவி செய்தாள்.இப்படியே மாதங்கள் உருண்டோடின குழந்தை நடக்க ஆரம்பித்து பேச்சும் வந்தது. மழலையில் அவள் பேச நாங்கள் இருவரும் எங்களை மறந்து வேறு உலகத்திற்கே சென்று விடுவோம்.
அம்மாக்கள் இருவரும் வந்து உதவி செய்ததால் குழந்தை வளர்ப்பு ஒரு கஷ்டமாகவே இல்லை.எங்கள் மகள் இப்பொழுது நடக்கவும் பேசவும் செய்கிறாள்.ஆர் கே நகரில் நாங்கள் தங்கி இருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் பலரும் மிலிட்டிரியிலும் கவர்மெண்ட் பணியிலும் இருப்பவர்கள். அவர்கள் குழந்தைகள் பவித்ராவை தங்களுடன் கூட்டிச் சென்று விளையாடுவர். பவித்ராவுக்கு அங்குள்ள எல்லோருடைய வீடும் தெரியும் அவர்களுடன் சிறிது நேரம் இருந்து விட்டு குழந்தைகளுடன் உணவையும் சாப்பிட்டு விட்டு வருவாள்.
காலையில் எழுந்து குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதை ஜன்னலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பாள். அவர்கள் சென்றதும் யாழினியிடம் தன்னை ஏன் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை எனக் கூறி உடனே தனக்கும் பள்ளிக்கு செல்லவேண்டும் என உரக்க கூறுவாள்.அவளுக்கு இன்னும் பள்ளிக்கூடம் செல்லும் வயது ஆகவில்லை என்பதை புரியவைக்க யாழினி பலவாறு சொல்லி சமாதான படுத்துவாள். எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தை பற்றி கூறிட நான் அங்கு சென்று பவித்ராவை பற்றிக் கூறினேன் அவர்கள் குழந்தைக்கு பள்ளிக்கூடத்தில் இடம் அளிப்பதாக கூறினர்.வீட்டிற்கு வந்ததும் இந்த செய்தியை பவித்ராவிடம் சொல்ல அவள் என் கழுத்தை கட்டி கொண்டு பல முத்தங்களை கொடுத்தாள். யாழினியும் நானும் அவளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தோம்.இருவருக்கும் அன்று முழுதும் அவள் நினைவு தான்.
மாலை பவித்ரா வந்து அவள் வகுப்பில் நடந்ததை கூறி அவள் டீச்சரை அவளுக்கு பிடித்திருக்கிறது என்றும் சொல்ல நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம் .
காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?
’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.
ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!
இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: பவித்ரா துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.
உண்மையில், பவித்ரா ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.
ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், பவித்ரா ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.
உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.
தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், பவித்ரா ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’
என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.
ஆனால், அந்த நேரத்தில் பவித்ரா நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.
ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’
‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’
பவித்ராவின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.
சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.
எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பவித்ரா நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.
இதேபவித்ரா அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.
ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் பவித்ராக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.
இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?
இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.
அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’
இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.
குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’
என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’
இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.
இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.
போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் பவித்ராவை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.
எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.
மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத பவித்ரா வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.
அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?
ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே பவித்ராக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.
அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))
குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை பவித்ராக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.
ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள்பவித்ரா. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.
இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. பவித்ராயின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.
அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.
பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, பவித்ராக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!