கண்ணீர் துளிகளின் மௌனம்

உன்னைக் காணும் பொழுதெல்லாம்
உள்ளம் தன்நிலை மறக்கிறதே
உன்னில் காணும் அன்பில்தான்
என்னுயிர் வாழ நினைக்கிறதே
அன்பே உன்னை எண்ணித்தான்
எந்தன் நெஞ்சம் துடிக்கிறதே
அழகே உன்முகம் காணத்தான்
கண்கள் ரெண்டும் தவிக்கிறதே
இன்சொல் பேசும் பூம்பாவாய்
இனிக்கும் பேச்சில் மருந்தாவாய்
இன்னொரு பிறவி எடுத்தாலும்
அதிலும் எனக்கே வரமாவாய்
விழிகளை காணும் துணிவின்றி
ஐயோ நானும் பயங்கொண்டேன்
உயிரை விழியால் சிறைகொண்டு
என்னை முழுதும் ஜெயங்கொண்டாய்
கண்ணே காதல் கனிமொழியே
கமலம் தேடும் கதிரொளியே
கனியும் மாலைப் பொழுதோடு
முல்லை மணக்கும் சுடரொளியே!
காதல் என்று என்முன்னே
யாரும் வார்த்தை சொன்னாலே
கவிதை ஊற்று சுரக்கிறதே
சிந்தனை வானில் பறக்கிறதே
ஆயுள் முழுதும் உன்பேரில்
கவிதை பாடும் சுகம்போதும்
குயிலாய் நானும் நாள்தோறும்
இனிக்கப் பாடிக் களித்திருப்பேன்
உன்புத்தக உறையின் காகிதமாய்
உன்பெயர் சுமக்க காத்திருந்தேன்
உன்பெயர் சுமக்கும் காகிதமாய்
இருந்திட எனக்கும் வாய்க்கவில்லை
கையில் இருப்பது நானென்று
அறியாது என்னை வீசிச்சென்றாய்
வீதியில் கிடக்கும் குப்பையென்று
தோழிய ருடனே பேசிச்சென்றாய்
விதியை எண்ணிப் புலம்பாமல்
யாரைச் சொல்லி நானழுவேன்
அழுகின்ற ஓசை கேட்காமல்
மௌனமாய் உள்ளே மருகுவேன்!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (5-Dec-24, 11:03 am)
பார்வை : 91

மேலே