மலரும் மதியும்

மலர்வண்ணன்: மதிவாணா, இன்னிக்கு தேதி என்ன தெரியுமா?
மதிவாணன்: அது தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? தினமும் நடக்கறதுதான் நடக்குது.
மலர்வண்ணன்: ஏம்ப்பா இப்படி பேசறே? இன்னிக்கு உன்னோட திருமண நாள். இது ஞாபகம் இல்லையா உனக்கு?
மதிவாணன்: ஏம்பா சும்மா இருந்தவனை பயம் காட்டுறே?
மலர்வண்ணன்: உன் திருமண நாள் உனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளுன்னு நீதானே அடிக்கடி சொல்லுவே.
மதிவாணன்: அதெல்லாம் அந்தக்காலம். இப்போ நெனச்சுப்பாத்தா, ஏண்டா திருமணம் செஞ்சிண்டேன்னு தோணுது.
மலர்வண்ணன்: ஏம்ப்பா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்னுடைய திருமண நாள் அன்று உன்னை பார்த்தபோது, நீ எவ்வளவு சந்தோஷமாக இருந்தே தெரியுமா? இன்னிக்கி என்னடானா முகத்தை உம்முனு வச்சிண்டு இருக்கே.
மதிவாணன்: பின்ன என்னப்பா. இதே நாள் நாலு வருஷம் முன்னே எனக்கு ரெண்டாவது கல்யாணம் நடந்தது.
மலர்வண்ணன்: அடப்பாவி. எனக்கு சொல்லவேயில்லையே.
மதிவாணன்: அதுக்கு எங்கப்பா நேரம் இருந்தது. நான் ரெண்டாவது கல்யாணம் செஞ்சது என் முதல் பொண்டாட்டியோட தங்கையைத்தான்.
மலர்வண்ணன்: எனக்கு கைகால் பிடிபடவேயில்லை. என்னப்பா சொல்லுறே நீ? இதெல்லாம் உண்மைதானா?
மதிவாணன்: என் முதல் சம்சாரம் என்னை வற்புறுத்தி, காது கேக்காத அவள் தங்கைக்கு வாழ்வு கொடுக்கச்சொல்லி என்னை சம்மதிக்கவைத்துவிட்டாள்.
மலர்வண்ணன்: அப்போ ரொம்ப நல்லதாகவே போச்சு. உனக்கு தினமும் இரவு நல்ல வேட்டைதான்.
மதிவாணன்: நீ ஒண்ணுப்பா. அந்த பொண்ணுக்கு அந்தமாதிரி ஆசையெல்லாம் இல்லை. அது ஒரு சாமியாராக மாறிபோய்டுச்சி.
மலர்வண்ணன்: எனக்கு மண்டையே வெடித்திடும்போல் இருக்கு. இப்போ உன் முதல் மனைவி உன்னுடன்தானே இருக்கிறாள்?
மதிவாணன்: அதுதம்பா பிரச்சினையே? அவள் இப்போ அவளுடைய சாமியார் தங்கைக்கு சீடனாகி விட்டாள். தங்கை காவி உடை உடுத்தி துறவறம் பூண்டுவிட்டாள்.
மலர்வண்ணன்: சரியாப்போச்சுப்பா. சரி அவங்க ரெண்டுபேரும் இப்போ எங்கே இருக்காங்க?
மதிவாணன்: எங்க வீட்டில்தான்.
மலர்வண்ணன்: என்ன ரோதனைப்பா. சரி, உனக்கு உன் முதல் மனைவி சமைத்து போடுகிறாளா?
மதிவாணன்: அந்த வயித்தெரிச்சல ஏன் கேக்குறே. நான்தான் அவங்க ரெண்டுபேருக்கும் சமைத்து போடுறேன்.
மலர்வண்ணன்: அப்போ நீ எப்படி வேலைக்கு போகமுடியும்?
மதிவாணன்: நான் வேலையே விட்டு ரெண்டு வருஷம் ஆச்சு.
மலர்வண்ணன்: அப்போ காசு எப்படி சம்பாதிக்கிறே?
மதிவாணன்: இந்த சாமியாரிச்சிங்கள பாக்க தினமும் அம்பது பேராவது வந்து போறாங்க. அவங்க எல்லார்கிட்டயும் நான் உண்டி குலுக்கி காணிக்கை சேர்க்குறேன். அந்த பணத்தை வச்சுதான் குடும்பம் இல்லை ஆசிரமம் நடக்குது.
மலர்வண்ணன்: சரி நடந்தது நடந்துபோயிடிச்சி. இன்னிக்கு உனக்கு டபுள் கல்யாண நாள். அதுக்கு நீ ஏதாவது இனிப்பு வாங்கினியா அல்லது செஞ்சியா?
மதிவாணன்: எனக்கு வர கோவத்தில அவங்களை என்ன பண்ணுவேன்னு தெரியல. பாயசம் வைக்கட்டுமான்னு கேட்டபோது அவங்க " உனக்கு பெண்டாட்டின்னு யாரும் இல்லாதபோது, திருமண நாள் என்ன வேண்டியிருக்கு, இனிப்பு தின்ன என்ன பெரிய விஷயம் இருக்கு " அப்படீன்னு கேட்டது என் நெஞ்சை சரியாக ரெண்டாக பிளந்தது போல இருக்கு.
மலர்வண்ணன்: பாவம், ரெண்டு கல்யாணம் பண்ணிகிட்டே. அதனால நெஞ்சையும் சரியாக ரெண்டாக பொளந்துட்டே. சரி போகுது விடு. ஒரு முக்கிய விஷயம்.
மதிவாணன்: சொல்லுப்பா, உனக்கும் ரெண்டாம் கல்யாணம் அது இதுன்னு ஏதாவது இருக்கா?
மலர்வண்ணன்: அதெப்படிப்பா அவ்வளவு சரியாக சொன்னே. அடுத்த மாதம் எனக்கும் ரெண்டாவது திருமணம்.
மதிவாணன்: உன் முதல் சம்சாரத்தோட தங்கையோடுதானே?
மலர்வண்ணன்: அதெப்படிப்பா சொல்லுவேன். என் சம்சாரத்தோட பாட்டியோட. அவளிடம் நிறைய சொத்து இருக்காம்.
மதிவாணன்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Apr-25, 3:58 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : malarum mathiyum
பார்வை : 6

மேலே