சோழன் - ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉம் - முத்தொள்ளாயிரம் 30

நேரிசை வெண்பா

ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉம்
கூடல் இழந்தேன் கொடியன்னாய்! - நீடெங்கின்
பாளையிற் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று! 30

- முத்தொள்ளாயிரம், சோழன் 8

இதுவும் தலைவி கூற்று.

பூங்கொடிபோன்ற என் தோழியே! உயரமான தென்னையின் பாளைகளில் தேனடைகள் உருவாகும் நீர்வளமிக்க சோழநாட்டின் தலைவனை நான் கனவின்கண் காணப்பெற்றேன்; அப்போது தோன்றிய ஊடலால் அவன்தோளையணைத்து மகிழும் கூடலையிழந்து விட்டேனே!

கண்படை - கனவு; காளை - சோழன், உவமையாகுபெயர்; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்போனதுபோலக் கனவில்கண்ட காளையை அக்கனவில்கூடக் கூட இயலாமல் உடல் பிரித்து விட்டதே என்று தலைவி வருந்திக் கூறியுள்ளாள்.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (29-Aug-25, 9:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே