தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?...
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சுதந்திரத்தை
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? மக்களின்
கண்ணீர் விட்டே வளர்த்தோம் - தியாகிகளின்
செங்குருதி விட்டே வளர்த்தோம்.
பெற்று வளர்த்த சுதந்திரம் அந்தோ
குற்றுயிரும் குலையுயிருமாய் சீரழித்து
கற்ற கல்வியும் கைவிட்டு சீரழிந்து
குற்றம் புரிந்து கைகொட்டிச் சிரிக்கும்
இன்றைய இளைய சமுதாயமே கேள்.
மனம்போல் வாழ்வதுதான் சுதந்திரமா?
சும்மா வந்ததா சுதந்திரம்? - அதன்
மேன்மை சொல்கிறேன். செவிதிறந்து கேள்.
அடிபட்டு உதைபட்டு மானமது அரைபட்டு
அடிமையாய் அவனியில் சொந்த நாட்டில்
குடியுரிமை இழந்து பேச்சுரிமை மறந்து
எங்கிருந்தோ வந்த அயலானிடம் நாம்
கைகட்டி வாய்பொத்தி தலைகுனிந்து
மெய்யென போற்றும் சுதந்திரம் இழந்து
பொய்யென ஆட்டு மந்தையாய் வாழ்வை
அடகு வைத்து அவதி உற்று
சுதந்திரத்தை பறி கொடுத்து - நம்
புதையல்களை விலை கொடுத்து
அற வழியில் அஹிம்சைப் பாதையில்
பல இன்னுயிர்களை தியாகத் தீயில்
பலி கொடுத்து பெற்ற சுதந்திரமடா
வெறும் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
என்று நினைத்தாயோ? நீ அனுபவிக்கும்
சுதந்திரக் காற்றில் தியாகக் குருதியின்
ஈரமும் கலந்திருக்கிறது. உணர்ந்து கொள்.
சுதந்திரத்தின் மேன்மையை உணர்ந்து கொள்.
உயிரென போற்றி வரும் சந்ததிக்கும்
பங்கிட்டு கொடு. கொடுத்து நல்
சமதர்ம மனித நேயம் போற்று.
சுதந்திரமாய் வாழு....பிறரையும் வாழவிடு.

