எல்லோரும் ஓரிடத்தில்.....!

எம் வீட்டு தோட்டத்தில்
ஏகப்பட்ட இடமிருந்தும்
மாற்றான் தோட்டத்தில்
மரம் வளர்க்கும் மாண்பு
எம் தமிழனுக்கன்றி
எவனுக்கும் வாய்க்காது.....!

இரு பெரும் போர்களிலும்
பாரில் எல்லோரும்
இழவு பார்த்திருக்க
ஊரில் நாம் மட்டும்
உழவு பார்த்து
உலகு காத்தவர்கள்....!

உலகில் பலபேர்
ஊமையாய்
வாழ்ந்த காலத்தே
உவமை பேசி
திரிந்தவர்கள் நாம்....!

ஒருவேளை
சோறு போட்டு தந்தவனுக்காக
உடலையும் கூட
கூறு போட்டு தந்தவர்கள் நாம்...!

இல்லையென வந்தவர்க்கு
வீடு கொடுத்தவர்களில்லை
நாம்.
நாடு கொடுத்தவர்கள்...!

நாட்டு மக்களின்
ஆசைகளை காத்த நமக்கு
நாடு பிடிக்கும்
ஆசையின்றி போனது தான்
ஆச்சரியம்....!

எல்லா பகைவரையும்
நண்பர் என நம்பியே
நலிந்து போனவர்கள் தான்
நாம்.

உலகிற்கு
குறள் வழி தந்தவர்கள்
இன்று
குரல் வலை நெறிக்கப்பட்டோம்...!

கூட்டம் கூட்டமாக
வாழ்ந்தவர்கள்
இன்று
குவியல் குவியலாக
எரிக்கப்பட்டோம்....!

கூரை வேய்ந்த
நம் கூடாரங்களில்
குருதி பாய்ந்தன...!

அகிலம் ஆண்ட நாம்
அகதிகள் ஆனோம்...!

ஆனாலும்

தன் பிள்ளையை
கொன்றவன் பிள்ளைக்காய்
இரத்த தானம் செய்து வந்தோம்...!

தனக்கென வாழாமை
தாழ்மையல்ல தமிழா...!

நம்மை சுற்றி
பின்னப்பட்டவை
முள் வேலிகளல்ல...
புல் வேலிகள்.

தாண்டி வா தமிழா...!

நமக்காக அழ
நாதியில்லை என
உடைந்து போகாதே...!
நாம்
அழுகைக்கு ஆள் சேர்த்தவர்களல்ல.
உலகு முழுக்க வென்று
வாள் சேர்த்தவர்கள்...!

நம்முடைய பலம்
பிரிந்து வாழ்ந்தாலும்
இணைந்து இருப்பது...

நம்முடைய பலவீனம்
இணைந்து இருந்தாலும்
பிரிந்து வாழ்வது....!

வாங்கிய அடிகள் போதும்...
வாங்கிய வலிகள் போதும்...

ஓரிடத்தே
எல்லா தமிழனும்
நின்று பார்ப்போம்.
கடல் ஆழம் வரை
சென்று பார்ப்போம்.
தனி தமிழீழம்
வென்று எடுப்போம்.....!

எழுதியவர் : (17-Nov-11, 4:13 pm)
பார்வை : 279

மேலே