தாயே தமிழே தனயனின் வாழி

எம்மொழி போலும் இல்லாப் பொருளே

செம்மொழித் தமிழே சிம்மப் பெண்ணே
ஆயிரம் ஆண்டு ஆண்டுகள் வாழ்ந்தும்
தேயா நிலவாய் தினம்தினம் எழுவாய்

பிறப்புகள் ஒன்றென பாடியதுன் கவி
இறந்தும் வாழ உரைத்தது நாலடி
அன்பை கவியை ஆற்றலை காதலை
பண்பை உணர்வை பேசினம் உன்வழி

அட்டமா சித்தி அறிவித் தனையே
எட்டுச் சுரமும் அறிந்தாய் நீயே
வான்புகழ் வள்ளுவம் வந்ததுன் வழியே
பெண்ணை சாமியாய் படைத்ததும் நீயே

இந்துச் சமவெளி அங்கும் நீயே
எந்த மொழியும் உந்தன் பின்னே
அகமும் புறமும் அறிவித் தாயே
சகலம் வெல்லும் சூத்திரம் அதுவே

கொடுமை பரங்கி கொடுங்கோல் முடிக்க
விடுதலை வேட்கை வித்தாய் சத்தாய்
முளைத்தது இங்கே முதலில் யுத்தம்
விளைந்தது பின்னர் பாரதம் மொத்தம்

ஆதியில் மனிதர் உதித்தது உன்னில்
ஆதிச்ச நல்லூர் ஊற்றிய உண்மை
பாதியில் வந்தவர் பார் ஆளுவதோ
வேதியல் மாற்றமா வேதனை மாற்றம்மா

கோடியில் பிள்ளைகள் குவலயம் முழுதும்
காவியப் புலவர்கள் களஞ்சியம் இலக்கியம்
யாவும் பெற்ற உனக்கே சொன்னேன்
தாயே தமிழே தனயனின் வாழி!

எழுதியவர் : புதுயுகன் (17-Nov-11, 10:30 pm)
பார்வை : 1008

மேலே