காதலுக்கு எல்லையுண்டு..! -சிறுகதை-பொள்ளாச்சி அபி
இருள் இன்னும் முழுமையாக விலகிவிடாத அதிகாலை நேரம்..,வெளிச்சம் ஊடுருவமுடியாமல் பாதையெங்கும் படர்ந்து பரந்திருந்தது பனி. நடுக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் அந்தத் தெருவினை விட்டு,பேருந்து நிலையத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர் ராதாவும்,கிருஷ்ணனும்.
கோயம்புத்தூருக்குச் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்து ஏறி அமர்ந்தவுடன் ஜன்னல் வழியாக வெளியே தலைநீட்டிப் பார்த்துவிட்டு, “அப்பாடா.. தப்பித்தோம்..யாரும் பின்னாடி வரலை.” என்று முனகியபடியே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் கிருஷ்ணன்.ராதாவின் முகத்திலும் சற்றுநிம்மதி தெரிந்தது.
தங்கள் காதலை வீட்டில் சொல்லி,பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிப்பதாக இருந்த அவர்களின் திட்டம்,ராதாவின் அப்பா ராகவனின் பிடிவாதத்தினால் ‘ஓடிப்போவதாக’ மாறிப்போனதில் கிருஷ்ணனுக்கு மிகவும் வருத்தம்.
தனியார் நிறுவனத்தில்,சேல்ஸ் ரெப்பாக,ஊர்,ஊராகச் சுற்றும் தனது வேலை, வருமானம்,ராதாவுக்கும்,தனக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பு,பெயர்ப் பொருத்தம், காதல்,தனது வீட்டின் நிலைமை,வசதி என அனைத்தையும் சொல்லி பெண் கேட்டபோது,ராகவன் பிடிவாதமாகச் சொன்ன ஒரே பதில்.“நோ..”
என் அப்பாவின் பூர்வீக வழியில் பார்த்தால் நீங்கள் எனது உறவினர்களாகக் கூட இருக்கலாம். மதம்,மொழி,ஜாதி அனைத்தும் ஒன்றாக இருக்கும்போதும் ஏன் மறுக்கிறீர்கள்.? கிருஷ்ணன் மன்றாடியபோதும்,அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்.
அரசியல் கட்சி ஒன்றில்,அப்பகுதிக்கென குறிப்பிட்ட ஒரு நல்லபதவியில் இருந்த ராகவனை மீறி,அவரது பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதில் இருக்கும் பல சிக்கல்களையும் தனியே ஒரு சந்தர்ப்பத்தில் விவாதித்துக் கொண்டனர் ராதாவும்,கிருஷ்ணனும்.வேறு வழியின்றித்தான் ஓடிப்போய்விடலாம் என்ற முடிவை எடுத்து,நாள் குறித்து கிளம்பிவிட்டனர்.
கோவையை அடைவதற்கு இன்னும் அரை மணிநேரப் பயணம் இருந்தது. விழியோரம் கண்ணீர்க் கசிவுடன்,தனது தோளில் சாய்ந்து கிடந்த,ராதாவின் கன்னத்தில் தட்டிய கிருஷ்ணன் “ராதா..கவலைப்படாதே..எங்க வீட்டுக்குப் போயிட்டம்னா,அப்புறம் யாராலும் ஒண்ணும் செய்யமுடியாது.என்னோட கம்பெனி ப்ரெண்ட்ஸ்,சொந்தக்காரங்க..இன்னும் நிறையப்பேரு நமக்காக சப்போர்ட் பண்ணுவாங்க..அதனால..,
“இல்லைங்க,நான் அதுக்காக வருத்தப்படலை..அம்மா,அப்பாவைப் பிரிஞ்சுதான் நாம வாழவேணும்கிற சூழ்நிலை உருவாயிடுச்சுன்னுதான் சங்கடமாயிருக்கு..”
“சரி,ராதா..ஏன் உங்க அப்பா நம்ம சைடிலே இருக்கற நியாயத்தைப் புரிஞ்சுக்கவேயில்லை..,இன்னும் வசதியான மாப்பிள்ளையை எதிர்பார்த்திருப்பாரோ..”
“சே..சே..அவருக்கு பணம்,காசு மேலேயெல்லாம் பெரியபிடிப்பில்லை.ஆனா ரொம்ப கௌரவம் பார்ப்பாரு.அதுக்கு ஏதாவது பங்கம் வந்துச்சுன்னாதான் அவராலே தாங்கவே முடியாது.”
“சரி விடு எல்லாம் ஒரு நாளைக்கு சரியாகும்..”
“எனக்கும் அதுதான் நம்பிக்கை..” இருவருக்கும் இப்போது சற்று நிம்மதியாயிருந்தது.
பேருந்தின் சீரான ஓட்டத்தில்,கண்கள் தம்மை அறியாமலே மூடிக்கொண்டது.
‘விருந்து,கேளிக்கையென கல்யாண வீடு களைகட்டியிருக்pறது. அம்மா,அப்பா, உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெறுகிறது...’
இருவருக்கும் ஒரே கனவு..அதிகாலையில் காணும் கனவு நிறைவேறும் என்று சொல்வார்களே..! மனம் ஆசையில் தவித்தது.கனவு ஏற்படுத்திய பாதிப்பு, இருவரையும் உறக்கமும்,விழிப்புமற்ற,சந்தோஷமும்,துக்கமுமற்ற நிலையில் வைத்திருந்தது.
அப்போதுதான்,திடுமென்று பஸ்டிரைவர்,போட்ட பிரேக்கினால்,மொத்தமும் குலுங்கியது.தங்கள் சீட்டுகளுக்கு முன்னாலிருந்த கம்பிகளில்,சிலர் தலையை மோதிக்கொண்டனர்.பிறகு என்னவாயிற்று என்ற எதிர்பார்ப்புடன்,ஜன்னலுக்கு வெளியே தலையைநீட்டிப் பார்த்தனர்.பஸ்ஸை மறித்தபடி,கட்சிக் கொடிகளுடன் நான்கு கார்கள் நின்று கொண்டிருந்தன.அதிலிருந்து நிறையப்பேர் இறங்கி பஸ்ஸை நோக்கிஓடி வருவதும்,உள்ளே ஏறுவதும் தெரிந்தது.அதில் பிரதானமாக ராகவன் இருப்பதைக் கண்டு,திக்கென அதிர்ந்தனர் ராதாவும்,கிருஷ்ணனும்.
என்ன செய்வது..? என்று முடிவெடுக்கக்கூட அவகாசமில்லை.அதற்குள் அருகே வந்துவிட்டார் ராகவன்.ராதாவை இழுத்து,தனக்குப் பின்புறமாகத் தள்ளியவர்,நேராக கிருஷ்ணனின் சட்டையைக் கொத்தாகப் பற்றியிழுத்து, ராதாவின் அலறலை சிறிதும் பொருட்படுத்தாமல்,படிகளின் வழியாக வெளியே தள்ளிக் கொண்டுபோனார்.
சில விநாடிகளில் அரங்கேறிய,இந்தக் களேபரத்தை எதிர்த்து குரல்கொடுத்த சகபயணிகள்,ராகவனுடன் வந்த ஆட்களின் முறைப்புக்கு,அப்படியே அடங்கினர். பஸ்ஸின் முன்புறம் குண்டாந் தடிகளுடன்,இருவர் நின்றிருந்ததால் டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்ஸை எடுப்பதா,நிற்பதா..?என்று குழம்பிப்போயிருந்தனர்.
“சார் விடுங்க,பேசிக்கலாம்..”என்ற கிருஷ்ணனுக்கு‘பளீரென’ஒருஅறையும் விழுந்தது.வெளியே இறக்கிய ராகவன்,கிருஷ்ணனை,தனது ஆட்களைவிட்டு சிறிதுதூரம் தள்ளிக்கொண்டு போனார்.உதவிக்கு அருகாமையில் வரமுயன்ற இருவரையும்,கையசைத்து அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டார்.
“ஏண்டா..எனக்கு இஷ்டமில்லேன்னு அவ்வளவு சொல்லியும்,என்ன துணிச்சல் இருந்தா,என் மகளை இழுத்துட்டு ஓடுவே..”என்று சொன்னபடியே மீண்டும் ஒரு அறை..வெறும் வயிற்றில் ஓடிவந்த களைப்புடன் இருந்த கிருஷ்ணனுக்கு தலைசுற்றியது.கடைவாயில் பட்ட அடியால்,உதடுகளின் வழியே ரத்தம் வந்தது.
அப்பா வேண்டாம்..விட்டுடுங்க அப்பா..என்று ராதா இங்கிருந்து கதறிக் கொண்டிருந்தாள்.அருகாமையில் செல்லமுடியாதபடி அவளையும் இருவர் பிடித்துக் கொண்டிருந்ததால் தவித்தாள்.
கிருஷ்ணனை,அடித்தும் ஆவேசம் அடங்காமல் அப்பா ஏதோ பேசிக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்தது தெரிந்தது.சில நிமிடங்கள் கழித்து,அவனை அப்படியே மீண்டும் தள்ளிக் கொண்டுவந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டார் அப்பா.
அவன் பரிதாபமாக ராதாவைத் திரும்பிப் பார்த்து,அழுதுகொண்டே கையாட்டினான். “திரும்பியும் ஒருநாள் வருவேன் ராதா..உன்னைக் கைவிடமாட்டேன்” குரல் உடைந்து,வார்த்தைகள் வெளியேற முடியாதபடி அவனுக்கு அழுகை மேலிட்டது.
என்ன நடக்கிறது என்று விலகாத அதிர்ச்சியுடன் நின்றிருந்த ராதாவை, இழுத்துச்சென்று,தாங்கள் வந்த காருக்குள் தள்ளினர்.அடுத்த விநாடி கார்கள் வந்தவழியே திரும்பிச் சென்றன.
கிருஷ்ணனை சுமந்து கொண்டு,கோவையை நோக்கி,மீண்டும் புறப்பட்டது அந்தப் பேருந்து.கண்ணீரும்.இரத்தமும் வழிந்து கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு அருகில் வந்து அமர்ந்த ஒருவர்,தனது கைக்குட்டையால்,அவனது இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கேட்டார்.“என்னப்பா..பிரச்சினை..ஏதேனும் காதல் விவகாரமா..?”
“காதலில் ஒண்ணும் விவகாரம் எதுவுமில்லீங்க..,முல்லைப் பெரியாறுதான் இப்ப எங்க பிரச்சினை..” அவன் அழுதுகொண்டே சொல்லிமுடித்த சில நிமிடங்களில்,கேரள எல்லையிலிருந்த,வாளையாறைக் கடந்து,தமிழக எல்லைக்குள் நுழைந்து அந்தப்பேருந்து.!.