கிறிஸ்துமஸ் - ஒரு உவமைக்கதை
எனக்கு இப்பொழுது இரண்டாயிரத்து ஐநூறு வயதாகிறது. நான் பல வருடங்களுக்கு முன்னாலேயே செத்துப் போய்விட்டேன். நான் ஏதென்ஸ் நகரத்தில் பிறந்தேன். ஸெனோபோனின் சமாதிக்கும், பிளாட்டோவின் சமாதிக்கும் அருகிலேயே எனது சமாதி இருந்தது. அதன் அருகிலிருந்து பார்த்தால் ஏதென்சின் வெண்மையான மகிமையையும், ஏஜியன் கடலில் சூரிய ஒளிபட்டு பிரகாசமாக ஒளிரும் நீரையும் பார்க்கலாம்.
பல நூற்றாண்டுகள் என் கல்லறையில் உறங்கின பின்பு ஒருநாள் நான் திடீரென்று எழும்பினேன். அது எப்படி என்றோ, எதற்கு என்றோ எனக்குத் தெரியாது. நான் இனிய காலைவேளையின் துவக்கத்திலே இங்கு வந்து சேர்ந்தேன். ஆகாயம் இன்னும் மங்கலாகவே இருந்தது. நான் நகரத்தை நெருங்கிய போது மணியோசை கேட்டது. கொஞ்ச நேரங்கழித்து, தெருக்களில் எல்லாம் நல்ல உடைகளை அணிந்து கொண்டு அங்குமிங்குமாக மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் குழந்தைகளும் சிறந்த ஆடைகளைத் அணிந்து மகிழ்ச்சியோடு வந்துகொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் வேலைக்குப் போகவில்லை, வேறெங்கோ போகிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.
"அவர்களின் கடவுளுக்கான பண்டிகையாகவோ, வழிபாடு நாளாகவோ இருக்கலாம்", என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
என்னைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புடை அணிந்திருந்த ஒரு மனிதர் அருகில் வந்து நட்பான முறையில் என் கரத்தைப் பற்றினார். அவர் நான் அந்த சூழலுக்குப் புதியவன் என்பதைப் புரிந்து கொண்டு கருணையுடன் நடந்து கொண்டார். நான் அவரது நீட்டிய கரத்தை நன்றியறிதலுடன் பற்றிக் கொண்டேன். அவர் என் கரத்தை அழுத்தினார். நாங்கள் மௌனமாக ஒருவரின் கண்களை மற்றொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்பு புதிய சூழலைக் கண்ட எனது மிரட்சியை போக்கி, அந்த சூழலை புரிந்து கொள்ள உதவுவதாக கூறினார். அந்த மணியோசையின் காரணத்தையும், தெருவில் மக்கள் அதிகமாகக் காணப்பட்ட காரணத்தையும் விளக்கிக் கூறினார். அவர் கூறிய காரணம் இது தான். அது கிறிஸ்துமஸுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. எனவே மக்கள் இறைவனின் வீட்டுக்குப் போகிறார்கள்.
"அப்படியானால் நீங்களும் அங்கே தான் போகிறீர்களாயிருக்கும்", என்று அந்த மனிதரிடம் சொன்னேன்.
"ஆம், வழிபாடு நடத்துகிறவர் நான்தான்", என்றார் அவர்.
"அப்பொல்லோவின் புரோகிதரா?", என்று கேட்டேன் நான்.
"இல்லையில்லை, அப்பொல்லோ கடவுள் இல்லை. வெறும் சிலை தான்", என்றார் அந்த மனிதர்.
"வெறும் சிலையா?", என்று நான் ஆச்சரியமாகக் கேட்டேன்.
"நீ ஒரு கிரேக்கன் என்று நினைக்கிறேன். கிரேக்கர்கள் எவ்வளவு தான் மனித குலத்திற்கு சேவை செய்திருந்தாலும் அவர்கள் சிலை வழிபாட்டுக்காரர்கள். அவர்கள் இல்லாத தெய்வங்களை வணங்கினார்கள். அவர்கள் வெறும் பெயர்களுக்குத் தான் கோவில் கட்டினார்கள். அப்பொல்லோவும், அத்தீனாவும், ஒலிம்பியாவில் இருந்த அனைத்துக் கடவுள்களும் கிரேக்கர்களின் கற்பனை தான்", என்றார் அந்த நபர்.
"ஆனால் கிரேக்கர்கள் தங்கள் கடவுள்களை நேசித்தார்கள்", என்றேன் நான். எனது இதயம் நெஞ்சுக்கு வெளியே குதித்து விடுவதைப் போன்று பரபரப்பினால் துடித்துக் கொண்டிருந்தது.
"அவர்கள் கடவுள்கள் அல்ல. வெறும் சிலைகள் மட்டுமே. கடவுளுக்கும் சிலைக்கும் உள்ள வித்தியாசம் இது தான். சிலைகள் வெறும் சடப் பொருள்கள். ஆனால் கடவுளோ உயிருள்ளவர். நீங்கள் உங்கள் கடவுளின் இருப்பை நிரூபிக்க முடியாது. நீங்கள் உங்கள் கடவுளைப் பார்த்ததில்லை; குரலைக் கேட்டதில்லை; தொட்டு உணர்ந்ததில்லை. அவரது இருப்பை நிரூபிக்கக் கூடிய எதைப் பற்றியும் உங்களுக்குத் தெரியாது. அது ஒரு சிலை மட்டுமே. நீங்கள் அப்பொல்லோவைக் கண்டதுண்டா? அவன் குரலைக் கேட்டதுண்டா? அவனைத் தொட்டதுண்டா?", என்று கேள்வி எழுப்பினார் அந்த மனிதர்.
நான் மெல்லிய குரலில் "இல்லை" என்று பதிலளித்தேன்.
"அப்படி அறிந்தவர்களில் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?", என்று கேட்டார் அந்த மனிதர்.
எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்று ஒப்புக் கொள்வதை விட வேறு வழி தொpயவில்லை.
"அப்படியானால் அப்பொல்லோ வெறும் சிலை. கடவுள் அல்ல", என்றார் அந்த மனிதர்.
"ஆனால், என்னைப் போன்ற கிரேக்கர்கள் அப்பொல்லோவை இருதயத்தில் உணர்ந்து, அவனால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம்", என்றேன் நான்.
"அப்படி நீங்கள் கற்பனை செய்துகொண்டிருக்கிறீர்கள். அவன் உண்மையிலேயே தெய்வீகத் தன்மை உள்ளவனாய் இருந்தால் இப்போதும் உயிரோடிருப்பான்", என்றார் அந்த மனிதர்.
"அப்படியானால் அப்பொல்லோ இறந்தாயிற்றா?", என்று கேட்டேன் நான்.
"அப்படி ஒருவன் இருந்ததேயில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக அவனது கோயில் குப்பை மேடாகக் கிடக்கிறது", என்று பதிலளித்தார் அவர்.
இசைக்கும், ஒளிக்கும் கடவுளாகிய அப்பொல்லோ இல்லையென்றும், அப்பொல்லோவின் கோயில் குப்பை மேடாயிற்றென்றும், அவனது தூப பீடத்தில் நெருப்பு அணைந்து விட்டதென்றும் கேட்ட பொழுது நான் அழுதேன். பிறகு கண்ணீரைத் துடைத்து விட்டு சொன்னேன், "ஆனால் எங்கள் கடவுள்கள் அழகானவர்கள். எங்கள் மதம் செழிப்பானது. அது கிரேக்க நாட்டை சிந்தனையாளர்கள், போர்வீரர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் ஆகியோரின் நாடாக மாற்றியது. அது ஏதென்சை ஒளியின் நகராக மாற்றியது. அது அழகையும், உண்மையையும், நன்மையையும் உருவாக்கியது. ஆம், எங்கள் மதம் தெய்வீகமானது"
"ஆனால் உங்கள் மதத்தில் ஒரே ஒரு தவறு தான் இருந்தது", என்று இடைமறித்தார் அவர்.
"அது என்ன?", அவர் கொடுக்கப் போகும் பதிலை அறியாமல் அந்தக் கேள்வியை கேட்டேன்.
"அது உண்மையானது அல்ல", என்றார் அவர்.
"ஆனால் நான் இன்னும் அப்பொல்லோவை நம்புகிறேன். அப்பொல்லோ இறக்கவில்லை என்பதை என் இதயத்தில் உணர்கிறேன்", என்றேன் நான்.
"அப்படியானால் அதை நிரூபியுங்கள். அப்பொல்லோவை இங்கே கொண்டு வாருங்கள். அப்படிச் செய்தால் நாங்கள் அப்பொல்லோவை வணங்குகிறோம்", என்றார் அவர்.
"அப்பொல்லோவை கொண்டு வருவதா? என்ன இவன். இறைவனை இகழ்ந்து பேசுகிறான்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்பு இதயத்தைத் திடப்படுத்திக் கொண்டு, அந்த நபரிடம் நான் எப்படி அப்பொல்லோவை இதயத்தில் உணர்கிறேன் என்பதையும், அப்பொல்லோவைப் பற்றிய ஹோமரின் அழியாத காவியத்தின் வரிகளையும் எடுத்துச் சொன்னேன். "நீங்கள் ஹோமரின் மீது சந்தேகப் படுகிறீர்களா? உணர்ச்சியால் உந்தப்பட்ட கவிஞரை, கடல் போன்ற மைக்கூட்டை கொண்டவரை, ஒவ்வொரு வார்த்தையையும் ஒளியாகச் சொன்னவரை சந்தேகப்படுகிறீர்களா?", என்று கேட்டு ஹோமரின் வரிகளை சொல்லத் தொடங்கினேன். ஹோமரின் இலியட் காவியத்திலிருந்த வரிகளை, கிரேக்கர்களால் பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையிலான அற்புதமான காவியமாகக் கருதப்பட்ட காவியத்தின் வரிகளைக் கூறினேன். அப்பொல்லோவைப் பற்றிய ஹோமரின் இனிமையான விவரிப்பைக் கூறினேன். அப்பொல்லோவின் வீணையின் இனிமையான இசையை, அவனது தேனினும் இனிய குரலைப் பற்றிய விவரிப்பைக் கூறினேன். அவனது தாயார் ஜீயஸின் மகனான அவனுக்கு பிறப்பினைக் கொடுக்க ஊரூராக அலைந்த கதையையும், அவன் பெண் கடவுள்களிடையே வளர்ந்ததையும், அவர்கள் ஓடுகின்ற நதியில் அவனைக் குளிப்பாட்டியதையும், ஒலிம்பஸிலிருந்து தேனைக் கொண்டு வந்து அவனுக்கு ஊட்டியதையும், அப்பொல்லோ தொட்டிலில் இருந்து இறகுகளை விhத்துக் கொண்டு மேலே போய் தான் கடவுளின் சித்தத்தை மக்களுக்கு அறிவிக்க வந்ததாகக் கூறியதையும் ஒப்புவித்தேன். "இதையெல்லாம் கேட்ட பிறகும் அப்பொல்லோ வெறும் கட்டுக்கதை என்று கூறுகிறீர்களா? அப்பொல்லோ வெறும் சிலை அல்ல. அப்பொல்லோ கடவுள், கடவுளின் மகன். மொத்த கிரேக்க உலகமும் நான் கூறுவது உண்மை என்று சான்று கூறி நிற்கும்." நான் பேசுவதை நிறுத்தி விட்டு அந்நபரை கவனித்தேன். அந்நபரின் உதடுகளில் ஒரு இகழ்ச்சியான புன்னகை தோன்றி என் இதயத்தை அறுத்தது. "ஏ! பரிதபிக்கத் தக்க அஞ்ஞானியே! ஹோமர் ஒரு சாதாரண மானுடன். அவன் கடவுள்களைப் பற்றி நாடகம் எழுதினான். அந்தக் கடவுள்கள் அவன் கற்பனைகளில் மட்டுமே இருந்தனர். அவன் இறந்தவுடன் அவையும் இறந்து விட்டன", என்று அவர் என்னிடம் கூற விரும்பியது போல் இருந்தது.
நானும், எனது வழிகாட்டியும் பெரிய கட்டிடம் ஒன்றின் அருகில் வந்து நின்றோம். அதைத் தான் அவர் கடவுளின் வீடு என்றார். நான் உள்ளே நுழையும் போது கணக்கிட இயலாத விளக்குகளில் இருந்து வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. உள்ளே பல படங்களும், பீடங்களும் எங்களைச் சுற்றிலும் இருந்தன. காற்று சாம்பிராணி வாசனையால் நிறைந்திருந்தது. அழகிய உடையணிந்த பல மனிதர்கள் அங்குமிங்குமாகச் சென்று கொண்டும், சில இடங்களில் மண்டியிட்டுத் தொழுது கொண்டுமிருந்தனர். இதெல்லாம் என்ன என்று அறிந்து கொள்ள விருப்புற்ற என்னைப் பார்த்து எனது வழிகாட்டி, என்னை ஓரமாக அழைத்துச் சென்று அந்த மக்கள் எல்லாம் அவர்களின் இரட்சகராகிய இயேசு என்ற கடவுளின் மைந்தனை தொழுது கொண்டிருக்கிறார்கள் என்றார்.
"அப்பொல்லோவும் கடவுளின் மைந்தன் தானே", என்றேன் நான், ஒரு விஷயத்திலாவது அவருக்கும் எனக்கும் சமரசம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்.
"அப்பொல்லோவை மறந்து விடு. அப்படி யாரும் இல்லை. அப்பொல்லோ வெறும் சிலை. நீ இந்த பிரபஞ்சம் முழுவதும் அப்பொல்லோவைத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. இயேசு தான் கடவுளின் மைந்தன். அவர் பூவுலகில் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார்", என்றார் அந்நபர்.
நான் அப்பொல்லோவின் மனித அவதாரத்தைப் பற்றிச் சொல்ல வாயெடுத்தேன். ஆனால் அடக்கிக் கொண்டேன்.
"பின்பு இயேசு மனிதனாக வளர்ந்தார். யாரும் காணாத கேள்விப்பட்டிராத அதிசயங்களைச் செய்தார். கடலிலே நடந்தது, பார்வை கொடுத்தது, கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் கொடுத்தது, தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது, அநேக மக்களுக்கு உணவளித்தது, வருங்காலங்களில் நடந்ததை உரைத்தது, இறந்தவரை உயிரோடெழுப்பியது முதலிய பல அற்புதங்களைச் செய்தார்", என்றார் அவர்.
"உங்கள் கடவுள்கள் கூட அதிசயங்களைச் செய்ததாகவும், வருங்காலத்தை உரைத்ததாகவும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், உங்கள் கடவுள்களைப் பற்றிக் கூறப்பட்டவை எல்லாம் கட்டுக்கதை. ஆனால் இயேசுவைப் பற்றிக் கூறப்பட்டவை சரித்திரப்பூர்வமான உண்மைகள்", எனறு தொடர்ந்து சொன்னார்.
அப்பொழுது நான் மெல்லிய முணுமுணுப்பைக் கேட்டேன். நான் திரும்பினேன். கிரேக்க இயல்பான ஆவல் என்னை உந்தித் தள்ளியது. நான் பெரிய மெழுவர்த்திகள் இருக்கும் இடம் நோக்கி நடந்தேன். அந்த சலசலப்பைக் கண்ட நான் இயேசு வரப் போகிறார் என்று நினைத்தேன். நான் இயேசுவைப் பார்க்க விரும்பினேன். தொட விரும்பினேன். மக்கள் திரளால் அதைச் செய்ய முடியாவிட்டாலும் குரலையாவது கேட்க விரும்பினேன். நான் எந்தக் கடவுளையும் பார்த்ததில்லை, தொட்டதுமில்லை, பேசியதைக் கேட்டதுமில்லை. நிரூபிக்கப்படாத அப்பொல்லோவை நம்பிய நான் உண்மைக் கடவுளாகிய இயேசுவைப் பார்க்க விரும்பினேன்.
ஆனால், எனது வழிகாட்டி எனது தோளில் கைகளை வைத்து நான் முன்னேறுவதை தடுத்து நிறுத்தினார்.
நான் அவசரப்பட்டேன். நன்னம்பிக்கையுடனும், நல்லிதயத்துடனும் சொன்னேன், "நான் இயேசுவைப் பார்க்க வேண்டும். அவர்கள் அவரைத் தொட அனுமதிக்கமாட்டாரா? அவரது கரங்களைப் பிடித்துக் கொள்ள, அவரது கால்களைத் தழுவ, அவரது வாசனை மிக்க மூச்சினை சுவாசிக்க, அவரது கண்களின் ஒளியைக் கண்டுணர, அவரது இனிய இசையை உணர என்னையும் அனுமதியுங்கள்". நான் அவரிடம் கெஞ்சினேன்.
"உங்களால் அவரைப் பார்க்க முடியாது. அவர் இனிமேல் தன்னை வெளிப்படுத்த மாட்டார்", என்றார் அவர், லேசான தடுமாற்றத்துடன்.
நான் ஆச்சரியத்தினால் கட்டுண்டு பேசும் சக்தியை இழந்தேன். அதனால் உடனே அவரிடம் எதையும் கேட்க இயலவில்லை.
"2000 வருடங்களாக நாங்கள் யாரும் இயேசுவைப் பார்க்கவில்லை. அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை" என்று அவர் தொடர்ந்து சொன்னார்.
"இரண்டாயிரம் வருடமாக யாரும் இயேசுவைப் பார்க்கவில்லையா? அவரைப் பற்றிக் கேள்விப்படவுமில்லையா?", நான் ஆச்சரியத்துடனே கேட்டேன். பரபரப்பினால் என் குரல் லேசாக நடுங்கியது.
"இல்லை", என்று அவர் பதிலளித்தார்.
நான் பொறுமையிழந்தேன். "அப்படியானால் இயேசுவும் அப்பொல்லோவைப் போன்ற வெறும் பெயர் தானே. கிரேக்கர்களைப் போன்று தாங்கள் தெளிவாக அறியாத தெய்வத்தை, நிரூபிக்கப்படாத ஒன்றை இவர்களும் வழிபடுகிறார்கள் அல்லவா? . நீங்கள் என்னிடம் அப்பொல்லோவைக் கொண்டுவரும் படி கேட்டது போல் நானும் உங்களிடம் இயேசுவைக் கொண்டு வரும்படி கேட்கலாம் அல்லவா? அப்பொல்லோவின் பண்டிகைக்கும், இயேசுவின் பண்டிகைக்கும் என்ன வேறுபாடு? அப்பொல்லோ வெறும் சிலையாயும், உயிரற்றவனாயும் இருக்கிறான் என்றீர்கள். இயேசுவோ உயிருள்ளவர் என்றீர்கள். ஆனால் இயேசுவும் அப்பொல்லோவைப் போல நிரூபிக்கப் பட முடியாதவராயிருக்கிறாரே. 2000 வருடங்களாகக் காணப்படாத ஒருவருக்கு பீடம் வைத்து புகை காட்டுவது சிலை வழிபாடு இல்லையென்றால் அப்பொல்லோவுக்குத் தூபங்காட்டுவது எப்படி சிலை வழிபாடாகும்? இயேசு இருந்தார் என்பதை நான் மறுக்கவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னால் உயிரோடிருந்திருக்கலாம். எல்லா மனிதருக்கும் வரும் மரணம் அவருக்கும் வந்து அவர் இறந்தார். அப்படியானால் நீங்கள் இறந்து போன ஒருவரை வழிபடுகிறீர்கள். இதுவும் சிலை வழிபாடு தானே?", என்றேன்.
அவர் என்னிடம் கிரேக்க புராணங்கள் அழகானவை, ஆனால் உண்மையற்றவை என்று கூறியதை நினைவுகூர்ந்தேன். அவரிடம் சொன்னேன், "உங்கள் ஆலயங்கள் அழகானவை, மதிப்பு மிக்கவை, உங்கள் இசை சிறந்தது, பீடங்கள் சிறந்தவை, உங்கள் பாடல்கள் அழகானவை, உங்கள் பிரார்த்தனை உருக வைக்கக் கூடியது, சாம்பிராணிகள், மணிகள், பூக்கள், தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் அழகானவை, உங்கள் தத்துவங்கள் புரிந்து கொள்ள இயலாதவை, உங்கள் போதகர்கள் பேச்சுத்திறன் கொண்டவர்கள், ஆனால் உங்கள் மதத்தில் ஒரு குறை உண்டு, அது உண்மையானது அல்ல."