தடம் மாறி

தந்தையின் சொல்லை மீறா
தசரத ராமனிவன்
அன்னையின் ஆணை ஏற்று
அரசையே துறந்த ராமன்
பரதனுக்கறிவு சொல்லி - தன்
பாதச்சுவடு இழந்த ராமன்
படகோட்டி குகனை - தன்
பாசத்தால் அணைத்த ராமன்
லக்ஷ்மணன் கோபம் நீக்கி
குடும்பத்தைக் காத்த ராமன்

கடுந்தவம் புரியும் முனிவர்
காவலுக்கு நின்ற ராமன்
அகலிகை சாபம் நீக்கிய
அற்புத ராமனிவன்
மாபெரும் வீரர் தம்மை
மண்ணைக்கவ்வச் செய்த
ருத்ர வில் ஒடித்து
சீதையை மணந்த ராமன்
இத்துணை சிறப்புக் கொண்ட
இதிகாச ராமன் தானும்
சீதையை இழந்த பின்பு
சீர்கெட்டு போனான் காணும்

சுக்ரீவன் நட்பை நாடி
சுத்தமாய் அறத்தைக் கொன்றான்
மாவீரர் மரபு மாற்றி
மரத்தின் பின் மறைந்து நின்று
கோழை போல் வாலி தன்னை
கோதண்டத்தால் சாய்த்து விட்டான்
போரினில் வெற்றி கொள்ள ,வீரர்க்கு
பொருந்தாத வேலை செய்தான்
விபிடணனை வளைத்துப் போட்டான்
வீரன் இந்திரஜித்
விரதமும் தவமும் இருந்து
தானமாய் பெற்ற வாளை
தந்திரமாய் பறிக்கச் செய்தான்
போரின் நெறியை மாற்றி - தனக்காக
போரினில் மாண்டோரெல்லாம்
புத்துயிர் பெற்றுவர
சஞ்சீவி மலை தன்னை
சாமர்த்தியமாய்க் கொண்டு வந்தான்
இலங்கையை தகனம் செய்தான்
ஈடில்லாப் பழியை ஏற்றான்
சீதையை மீட்டு வந்தான் - மீண்டும்
சிதையினில் ஏற்றி விட்டான்
எப்படி இருந்த ராமன்
இப்படி ஆகிப் போனான்
ஊருக்கு உபதேசம் செய்த
உத்தம புருஷன் எனினும்
தனக்கென வந்த போது
தடம் மாறி போனதென்ன
அவதார புருஷன் கூட
ஆருயிர் மனைவி இழந்தாள்
தடம் மாறி போவான் என்று
தத்துவம் சொன்ன காதை
தரணி புகழ் ராம காதை
ஆதலால் , மானிட தோழர்களே
மானுடம் காக வேண்டின் - உலகில்
மங்கையர் காத்து நிற்பீர் !
அங்கவரைக் காக்க மறந்தாள்
அவனியை அழித்து நிற்பீர் !!!!!!!!!!!!!!

எழுதியவர் : டாக்டர்.வை கலைவாணன் (24-Dec-11, 11:45 pm)
சேர்த்தது : V.Kalaivanan
பார்வை : 375

மேலே