தோஷப் பூக்கள்.!- பொள்ளாச்சி அபி
சமூக வனத்தில்
தோஷப் பூக்கள்..!
மறுமணம் மறுக்கப் பட்டதால்
நறுமணம் இழந்த
வெள்ளை மலர்கள்.!
திருமண வாழ்வின்
இன்பக் கனவுகள்
திடுமெனக் கலைந்தபின்
உறக்கம் மறந்து
வாடைக் காற்றினில்
வாடும் மலர்கள்..!
“நாண்” ஒன்று
வேலியான வரை
செழித்த பூக்கள்
சூழ்நிலைக் சுழல்கள்-அதை
தகர்த்த பின்..
மண்ணுக்கு பாரமாய்
மாந்தரின் பார்வையில் .
வெள்ளைப் பூக்களின்
அருகாக..,
தானாய் வண்டுகள்
பறந்தாலும்..
“வசீகரிக்க அலையும்
வக்கணையைப் பார்..”என
வண்ண மலர்கள்
வஞ்சகம் பேசுவதால்
மனதில் பாரம்..
தாங்காமல்
“பாவம் பூக்கள்
தலைகுனிந்தே இருக்கும்..!
வானம் பார்த்து
தலை நிமிர்த்த
மானம் தடுத்திடும்
ஒரு சாபம்..!
வாழ்க்கை தானம்
யார் தருவார்.?
மன வேரின் புலன்கள்
அலை பாயும்..,
அந்தோ..!
புவியின் அமைப்பு
அதைக் கருக்கும்..!
வேதனையெண்ணியே
சருகாய் உதிரும்.!
“ஆயுட் கைதிகளுக்கு
வெள்ளைச் சீருடை..”
அவர்கள் உள்ளே..,
இவர்கள் வெளியே..!
குற்றம் செய்த
சிறைக் கைதிகளுக்கு
சீருடை..சரி
யாரோ செய்த தவறுக்கும்
தண்டணை ஏனோ பூக்களுக்கு..?
உடை வெள்ளையென
கண்டவர்க்கு
உள்ளம் வெள்ளையென
அறியாமல் போன
மர்மம் என்ன..?
கண்டவர் உள்ளம்
கறுப்பானால்..மங்கல
மஞ்சளும்,சிவப்பும்
என்ன செய்யும்..?
வாழும் முறையில்
பெருங் குழப்பம்
வளர்ந்த தினங்கள்
மாய்ந்திடவே..
தொடரும் வாழ்வில்
ஒரு திருப்பம்
விரைவில் வருகுது
வெண்பூவே..!
ஆண்டவன் அரசில்
உனை வெறுத்தால்
அந்த தெய்வமும்
தேவையில்லையென
பறை சாற்றி-இதோ
இளைய தலைமுறை-புதிய
சிவப்புக் கொழுந்துகளாய்
உன் வேரில்..!!