கல்யாணமாம் கல்யாணம்.!- சிறுகதை --பொள்ளாச்சி அபி

இது பொள்ளாச்சியில்,

“அப்பா உங்க மனசு சங்கடப்படக் கூடாதுன்னுதான்,உங்ககிட்டே எங்க கல்யாணத்தைப் பத்தி முதல்லேயே சொல்றேன்.நான் பாட்டுக்கு,அந்தப் பெண்ணோட போய் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தெரியாம இல்லே. ஆனா,அதுக்கு எங்க மனசு ஒத்துக்கலே..” ரகு சொல்லிக்கொண்டே போனதைக் கேட்டு,கணபதி உறைந்துபோய் உட்காந்திருந்தார்.
ஒரே மகன்,சக்திக்கு முடிந்தவரை அவனைப் படிக்கவைத்ததோடு,தனக்குத் தெரிந்த,அரசியல்வாதியைப் பிடித்து,அரசுவேலையும் வாங்கித்தந்திருந்தார்.
இப்போது,வசதியான வாழ்க்கை வந்தவுடன்,தனக்கான பாதையை அவனே தீர்மானித்துக் கொண்டான்.அவனை இனி கட்டுப்படுத்த முடியாது என்று நன்றாகவே தெரிந்துபோனது கணபதிக்கு.“சரிப்பா.உன்னோட இஷ்டம் போல செய்துக்கோ..”,
அவர் ரகுவின் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாலும்,அவர் பேச்சிலிருந்த வருத்தமும்.தன்னைப் பற்றிய கனவுகளை,தானே சிதைத்து விட்டதையும் எண்ணியபோது,ரகுவிற்கு முள்ளாய் உறுத்தியது.
மகன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தெரிந்தாலும்,அம்மா தனது சொந்த பந்தங்களின் பேச்சுக்கும், ஏச்சுக்கும் மட்டுமே பயப்படுவதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறாள். அதனால் வெறும் விசும்பல்களோடு மட்டுமே அவள் அமைதியாய் அப்பாவின் பின்னால் நின்று கொண்டாள்.
ஆனாலும் என்ன செய்யமுடியும்..ஒரு விபத்தைப் போல வந்த காதல், திருமணத்தில் முடியவில்லை என்றால்,அது மிகப்பெறும் தோல்வி,தோல்வி என்பது எவ்வளவு பெரிய அவமானம்..!.
ரிஜிஸ்டர் ஆபிசில் நண்பர்களின் உதவியுடன் திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்வதில் தீவிரமானான் ரகு.

இது கோவையில்,
ஹேமா தனது அப்பா,சாப்பிட்டு முடிக்கட்டும் என்று காத்திருந்தாள்.அவர் கைகழுவி முடித்து,டி.வியின் முன்பு அமர்ந்தபோது, அப்பா உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும்.என்று பீடிகை போட்டவுடன்,அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். “என்னடா செல்லம்..சொல்லும்மா..” ஹேமாவிற்கு இருபது வயது ஆனால்தான் என்ன.?அவள் எப்போதுமே அப்பாவின் செல்லம்தான்.கல்லூரியில் படித்துமுடித்து,இப்போதுதான் ஒரு தனியார் நிறுவனத்தில்,ஐந்து இலக்க சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள்.
அப்பா..நீங்க எவ்வளவோ செல்லமா என்னை வளத்தீங்க.கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தீங்க..என்று நிறுத்திய ஹேமா,தனது அப்பாவின் முகத்தில் என்ன மாதிரியான உணர்ச்சிகள் இருக்கிறது என்று அனுமானிப்பவளாக,சற்று நிறுத்தினாள்.அப்பாவின் முகத்தில் வேறு ஏதோ எதிர்பார்ப்பு.அம்மாவும் கைவேலையெல்லாம் முடித்து வந்து அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.
இருவருக்கும் சேர்த்தே தனது காதல் விவகாரத்தை சொல்லி முடித்துவிடுவது நல்லதுதான் என்று முடிவு செய்து கொண்ட ஹேமா. “அப்பா,நான் ஒருத்தரை மனசாரக் காதலிக்கிறேன்ப்பா.அவரைத்தான் கல்யாணம் செய்துக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கேன்.இத்தனை நாளா சொல்லவேண்டாம்னுதான் இருந்தேன்.ஆனா,இப்ப கொஞ்சநாளா,நீங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க..அதனாலத்தான் இப்ப சொல்லவேண்டிய நெருக்கடி.” ஒரே மூச்சில்,ஹேமா சொல்லி முடிக்கவும்,இதை சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி,அப்பா,அம்மா இருவர் முகத்திலும் துல்லியமாகத் தெரிந்தது.
“நீ..நீ..என்னம்மா சொல்றே..? இப்படி திடீர்னு..”அப்பாவிற்கு வாய் குழறியது.
“ஆமாம்ப்பா,உண்மையைத்தான் சொல்றேன்.”
“இதுக்கு நாங்க சம்மதிக்கலேன்னா..?”
“சம்மதிச்சுட்டா,எல்லாருக்கும் நல்லது.”
“ஓ..அடியேய்,நம்ம பொண்ணு,அவளோட கல்யாணத்தைப் பத்தி நம்மகிட்டே, தகவல்தாண்டி சொல்றா..?.சம்மதம்கூட கேட்கலேன்னு உனக்குப் புரியுதா..? என்று,அம்மாவைப் பார்த்துச் சொன்னார்.
அப்படியெல்லாம் இல்லைப்பா.. நீங்களும் ஒரு காலத்திலே,காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதானே.அதனாலே எதிர்ப்பு தெரிவிக்கமாட்டீங்க, எப்படியும் நீங்க சம்மதிச்சுடுவீங்கன்னுதான்,நான் நம்பினேன்.அதனாலேத்தான் கல்யாண ஏற்பாட்டையும் செய்யச் சொல்லிட்டேன்.
இப்போது அப்பாவிற்கும்,அம்மாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.அப்பா சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொள்வது தெரிந்தது. “ஏம்மா,நானும் உங்க அம்மாவும் ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுட்டு, அப்புறமாத்தான் காதல்,கல்யாணம் எல்லாம் முடிச்சோம்.ஆனா,நீ காதலிக்கிற அந்தப் பையன் எப்படிப்பட்டவன்.அவங்க குடும்பம் எல்லாம் எப்படின்னு எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே.நம்ம பழக்கவழக்கத்துக்கு சரியா வரமாதிரியிருந்தா..நாங்களே போய்,அவங்ககிட்டே சம்பந்தம் பேசுறோம். அதுக்குள்ளே நீ எதுக்கும்மா,கல்யாணத்துக்கு அவசரப்படணும்.?”
“அப்பா,அவரு கவர்ண்மெண்ட் வேலையிலே இருக்கார்.அவங்க அப்பா,அம்மாகிட்டே நம்ம குடும்பத்தை பத்தி சொல்லியிருக்கிறார்.ஆனா அவங்க சம்மதிக்கலே.அதுவுமில்லாமே,சொந்தத்துலே நிச்சயம் பண்ணவும் அவசரப்பட்டாங்க.அதான்..”
“அப்ப எல்லாமே,நீங்களே செஞ்சுட்டீங்க..இனி எங்களாலே உனக்கு எதுவும் ஆகவேண்டியது இல்லே.அப்படித்தானே..?.”
ஹேமா மௌனமானாள். அப்பாவே தொடர்ந்தார். “என் மகளோட தேர்வு நிச்சயமா நல்லாருக்கும்னு எனக்குத் தெரியும்.ஆனா எங்களை அந்நியமா நெனச்சு,நீயே எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டே.ஓ.கே. நீங்க உங்க கல்யாணத்தை முடிச்சுட்டு,எப்பவேணும்னாலும் இங்க வரலாம்.ஆனா கல்யாணத்துக்கு நாங்க வரமாட்டோம்.அதுக்கு சில காரணங்கள் இருக்கு..அதை மெதுவா அப்புறம் பேசிக்கலாம்” என்றதோடு,அந்தப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அப்பா. ஹேமாவிற்கு மனசு லேசாயிற்று.முதலில் இதை அவரிடத்தில சொல்லவேண்டும் என்று தனது செல்லை எடுத்துக்கொண்டு, மொட்டைமாடிக்கு ஓடினாள்.

குறிப்பிட்ட நாளில்,நண்பர்களின் உதவியுடன்,திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிஜிஸ்டர் ஆபிசுக்கு முதலில் சென்றான் ரகு.

அதற்குப் பிறகு,இருபது வருடங்கள் கழித்து,அந்த ரிஜிஸ்டர் ஆபிசுக்கு சென்றாள் ரகுவின் மகளாகிய ஹேமா.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (17-Jan-12, 7:51 pm)
பார்வை : 1115

மேலே