இப்போதும் பிடிக்கும்
பெண்ணுரிமை கேட்ட பாரதி.
பகுத்தறிவு கற்று தந்த பெரியார்
ஆடம்பரம் கலைந்த மகாத்மா காந்தி
அன்பின் உருவமாம் அன்னை தெரசா.
பொது அறிவு தரும் புத்தகங்கள்.
பத்தியம் இருந்து பெற்றெடுத்த அன்னை.
உணவோடு சேர்த்து அவள் ஊட்டி விட்ட பாசம்.
பிறந்த நாளுக்கு வழக்கமாய் அவள் செய்யும் கேசரி.
என்னக்காக உழைக்கும் அப்பா.
என்னை உறங்க வைக்க அவர் சொன்ன கதைகள்.
சின்ன சின்ன சண்டை போடும் அண்ணன்
சிறு தூசி பட்டாலும் கலங்கி போகும் அவன் பாசம்.
சிலிர்க்க வைக்கும் மழைத் துளி.
மழை நீரில் மிதக்கும் அப்பா செய்த காகிதக் கப்பல்.
குடும்பத்துடன் செல்லும் நெடுந்தூர கார் பயணம்.
பயணத்தில் வரும் சில நொடி தூக்கம்.
யார் பேருக்கு அர்ச்சனை என்றதும் சட்டென
என் பேர் சொல்லும் தந்தையின் அன்பு..
சாமி பாரு, சாமி பாரு என அர்ச்சனையின் இடையே அம்மா செய்யும் அன்புத் தொல்லை.
இமை மூடி கேட்கையில் இதமாக இருக்கும் இளையராஜாவின் இன்னிசை.
தனிமையில் கடற்கரை நடை பயணம்
குட்டீஸ்களோடு சென்ற குதிரை பயணம்.
தேகம் மெலிந்த தேய்பிறை நிலவு.
வெள்ளி தட்டம் பௌர்ணமி நிலவு.
உயிரோட்டம் நிறைந்த கவிதைகள்
உயிரோடு ஒன்றான தமிழ்
இன்பம் நிறைந்திருந்த பள்ளி பருவம்.
பூப்படைந்த போது வந்த புரியாத வெட்கம்.
பூரிப்பில் வந்த முதல் முகப்பரு
அப்பா முதல் முதல் வாங்கி தந்த சைக்கிள்.
அண்ணன் முதல் சம்பளத்தில் வாங்கி தந்த
வைர மூக்குத்தி.
மூவரும் எனக்காக செய்யும் சிறு சேமிப்பு.
கல்லூரி முடிந்தபின் வாங்கிய பட்டம்.
நிறைவாக அமைந்த வேலை.
பொக்கிஷமாய் கிடைத்த என் நண்பன்.
அவனோடு கடற்கரையில் கேக் வெட்டிய என் இருபதாம் பிறந்த நாள்.
கற்பனையில் தோன்றும் என் காதலன்
அந்த அற்புதனுக்காக நான் எழுதும் கவிதைகள்..
இடை மறித்து பேசாமல் என் அத்தனை அனுபவங்களையும் என்னோடு சேர்ந்து ரசிக்கும் மௌனமான தோழி என் டைரி அவளை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

